Last Updated : 25 Jul, 2020 08:20 AM

 

Published : 25 Jul 2020 08:20 AM
Last Updated : 25 Jul 2020 08:20 AM

எப்போது விடுதலை?

ஏதிலி
அ.சி.விஜிதரன்
சிந்தன் புக்ஸ் வெளியீடு
அவ்வை சண்முகம் சாலை, சென்னை.
தொடர்புக்கு: 94451 23164
விலை: ரூ.250

ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார். இந்த வரிசையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் ஈழ அகதிகள் பற்றியது. எஸ்.ஏ.உதயன் எழுதிய ‘தெம்மாடுகள்’ நாவலும், தொ.பத்தினாதன் எழுதிய ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’ கட்டுரைத் தொகுப்பும் இந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டவை. சமீபத்தில், அ.சி.விஜிதரன் எழுதி ‘சிந்தன் புக்ஸ்’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஏதிலி’, தமிழக முகாம்களின் சகல பரிமாணங்களையும் பேசும் முக்கியமான நாவல்.

நாவல்களில் அனுபவங்கள் மட்டும் ஒரு ஆவணம்போல பதிவுசெய்யப்படுவதை விமர்சகர்கள் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதே நேரத்தில், இதுவரை இலக்கியம் கண்டிராத வாழ்க்கையை முதன்முறையாகப் பேசும்போது முதலில் அந்த வாழ்க்கையை விலாவாரியாகச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் படைப்பாளிக்கு வந்துவிடுகிறது. தமிழக அகதி முகாம்கள் அதிகமும் இலக்கியமானதில்லை என்பதோடு, அவர்களைப் பற்றிய எந்தச் சித்திரமும் அவர்களின் அருகிலேயே வாழும் தமிழகத்தவர்களுக்குத் தெரியாது எனும்போது அப்படியான நிர்ப்பந்தம் விஜிதரனுக்கும் இருந்திருக்கக்கூடும். ஆனால், நாவலில் முகாம் வாழ்க்கை குறித்த வர்ணனைகள் ஏதுமில்லாமலேயே முகாம் வாழ்க்கையின் முழுச் சித்திரத்தையும் உருவாக்கும் லாகவம் விஜிதரனுக்கு வாய்த்திருக்கிறது. மேலும், இந்நாவலானது முகாம் வாழ்க்கையோடு மட்டும் மட்டுப்பட்டுவிடாமல், வேறு பல விஷயங்களையும் நுட்பமாக உள்ளடக்கியிருக்கிறது எனும் வகையில் தனித்துவமான படைப்பாகவும் ஆகிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இந்த நாற்பது ஆண்டுகளில் சிதறுண்டு போயிருக்கிறது. குடும்பம், உறவு, சமூகம், நாடு என ஒவ்வொரு அடுக்கிலும் சிதைந்துபோயிருக்கிறது. இப்படியான சிதைந்துபோன வாழ்க்கையைச் சொல்வதற்காக இந்நாவலிலும் சிதறுண்ட உத்தியையே விஜிதரன் கையாண்டிருக்கிறார். பதினான்கு கதைகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்சினைகள். எல்லாம் ஈழ அகதிகள் என்ற மையத்தில் இணைகின்றன.

கண்ணியமாக வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் கோழிக்கூண்டுகளைக் கிடத்தி வைத்ததுபோல வீடுகள், இப்படிப்பட்ட கட்டமைப்புகளால் குடும்பங்களுக்குள் உருவாகும் மனநெருக்கடிகள், எப்போதும் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டிய நிலை, மழை பெய்தால் வீடுகளுக்குள் புகுந்துவிடும் குப்பைக்கூளங்கள், அரசியல்வாதிகளின் அபத்தக் கோஷங்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கூத்துகள், தனிநபர் பிரச்சினைகளை ஒட்டுமொத்த அகதிகளின் அடையாளத்தோடு அணுகும் போக்கு, இதுதான் நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்று இயல்பாகக் கடந்துபோகும் வாழ்க்கைமுறை; இவையெல்லாம் வாழ்வனுபவங்களாகப் பதிவாகாமல் கேள்விகள்போல வாசகர்களிடம் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய எந்தப் பிரச்சினை குறித்து அவர்கள் யோசித்தாலும் அது கடந்த காலத்தில் போய் நிற்கிறது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் கடந்த காலச் சுமையிலிருந்து மீள வழியில்லாமல் திரிய வேண்டியிருக்கிறது. பத்து வருடங்களில் உருவான ஆயிரம் மாணவர்களில் பத்துப் பேர்தான் தேறுகிறார்கள்; மற்றவர்களெல்லாம் கூலிகள் ஆகிறார்கள். வெறும் கூலிகளை மட்டுமே உருவாக்கும் சமூகம் எப்படி இருக்கும்?

நிலம் உயிர்களைத் தாங்கும் வழக்கத்துக்கு மாறாக இவர்கள் நிலத்தை மனதில் தாங்கி நடைபோடுகிறார்கள். ஊரை விட்டு வெளியேறும் பொருட்டுப் படகில் ஏறியதும் அது பாடையில் ஏறியதுபோல அமுதாவுக்குத் தோன்றுகிறது. பெருவெளிகளின் நிசப்த இருட்டுக்குள் தன்னை உருக்கி விளக்காக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள் ஷாமினி. முகாமில் பிறந்து, முகாமில் வளர்ந்து, மீண்டும் முகாம் வாழ்க்கையாகவே ஒரு வட்டச் சுழிக்குள் பெண்களின் வாழ்க்கை சிக்கிக்கொள்கிறது. அனுபவங்கள் உருவாக்கிக்கொடுக்கும் மொழிக்குக் கூடுதல் பலம் வந்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் இந்தியாவுக்குத் தஞ்சமடையத் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. தற்போது தமிழகத்திலுள்ள நூற்றுச்சொச்சம் அகதிகள் முகாம்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. நிச்சயம், இது சொற்பமான எண்ணிக்கை அல்ல! அவர்களுக்குக் குடும்ப அட்டை இருக்கிறது, ஆதார் அட்டையும்கூட இருக்கிறது; ஆனால், குடியுரிமை கிடையாது. பக்கத்துக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட காவல் துறையிடமும் வட்டாட்சியரிடமும் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம். அகதிகளுடைய பிரச்சினைகள் குறித்து அபூர்வமாக ஊடகக் கவனம் கிடைக்கும்போது, தாங்கள் திறந்தவெளிச் சிறையில் வாழ்வதாகத் தவறாமல் சொல்வார்கள். ‘ஏதிலி’ நாவலிலும் வெவ்வேறு இடங்களில் இந்த வார்த்தைகள் வருகின்றன. 80 ஆயிரம் குடும்பங்களின் சிறைவாசத்துக்கு எப்போது விடுதலை? ஈழ அகதிகளின் இன்றைய நிலைக்கு ஒருவிதத்தில் நாமும் பொறுப்பு என்று எப்போது தமிழகம் உணர்கிறதோ, அப்போதுதான். அந்தப் பொறுப்புணர்வை ‘ஏதிலி’ விதைக்கிறது.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x