

தமிழகத்தில் பொது நூலகத் துறை சார்பாக சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் அமைந்துள்ளன. உள்ளாட்சித் துறை சார்பாகவும் ஏராளமான கிராமப்புற நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களுக்குத் தேவையான நூல்கள் அரசால் வாங்கப்படுகின்றன. நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்களின் கொள்முதல் தொகையானது நூலக வரியிலிருந்தே செலுத்தப்படுகிறது. மேலும், நூலகத் துறையில் பணிபுரிபவர்களுக்குத் தேவையான ஊதியமும் இந்த நூலக வரியிலிருந்துதான் செலுத்தப்படுகிறது. மக்களால் செலுத்தப்படும் நூலக வரி முறையாக நூலகங்களின் வளர்ச்சிக்கும், வாசகர்களின் தேவையைப் பூர்த்திசெய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறதா?
மக்கள் செலுத்தும் நூலக வரியானது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை அந்தந்த உள்ளாட்சித் துறை அலுவலகங்களால் நூலகங்களுக்கு செலுத்தப்படுவது வழக்கம். ஆனால், இது முறையாகக் கணக்கிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. வரி விவரங்களைப் பொது நூலகத் துறைக்கு உள்ளாட்சி அமைப்பினர் தெரியப்படுத்துவது இல்லை. பொது நூலகத் துறையும் முறையான கணக்கைப் பெறுவதில்லை. உள்ளாட்சித் துறையால் தோராயமாக வழங்கப்படும் பணத்தைக் கொண்டே பொது நூலகத் துறை சமாளிக்கிறது. இந்தத் தோராயமான தொகையே 2018-19-ல் மட்டும் சுமார் ரூ.300 கோடி பொது நூலகத் துறைக்கு வர வேண்டியுள்ளது என்கிறது நூலக வட்டாரம். இதில் சென்னை மாநகராட்சி மட்டுமே சுமார் ரூ.70 கோடி பாக்கி வைத்துள்ளது என்கிறார்கள்.
இது ஒரு புறம் என்றால், இன்னொரு புறம் நூலக ஆர்டர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. மார்ச் மாதத்திலிருந்து புத்தக விற்பனை மிகப் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. பணியாளர்களுக்கு ஊதியம், அலுவலக வாடகை, மின்கட்டணம், தவணைத் தொகை என அணிவகுத்து நிற்கும் செலவைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர் பதிப்பாளர்கள். சிறு பதிப்பாளர்களின் நிலையோ ரொம்பவும் மோசம். ஆக, 2019-ல் நூலகங்களுக்கு வழங்கிய நூல்களுக்கான நிலுவைத் தொகையைத் தர வேண்டும் என்று தொடர்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
- இராம.மெய்யப்பன், பதிப்பாளர். தொடர்புக்கு: unavuulagam@yahoo.com