Last Updated : 18 Jul, 2020 07:58 AM

 

Published : 18 Jul 2020 07:58 AM
Last Updated : 18 Jul 2020 07:58 AM

தலித்துகள் இன்று

தலித்துகள்: நேற்று இன்று நாளை
ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: பாலு மணிவண்ணன்
கிழக்குப் பதிப்பகம்
ராயப்பேட்டை,
சென்னை–14.
தொடர்புக்கு: 044 – 42009603
விலை: ரூ.225

ஆய்வாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சாதி அமைப்பு குறித்துத் தீவிரமாக எழுதிவரும் ஆளுமை. டெல்டும்டேவின் எழுத்துகளில் பலவும் ஏற்கெனவே தமிழுக்குக் கொண்டுவரப்பட்டு நமது உரையாடல்களில் முக்கியப் பங்காற்றுவதாக இருக்கின்றன. கமலாலயன் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘மஹத்: முதல் தலித் புரட்சி’ (என்சிபிஹெச் வெளியீடு), ச.சுப்பாராவ் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘சாதியின் குடியரசு’ (பாரதி புத்தகாலயம்) ஆகிய டெல்டும்டேவின் புத்தகங்கள் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை. அந்த வரிசையில், சாதியின் தோற்றுவாய், தலித்துகளின் எழுச்சி தொடங்கி அவர்களது இன்றைய நிலை வரை என தலித்துகள் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தரும் ‘தலித்துகள்: நேற்று இன்று நாளை’ என்ற புத்தகம் இப்போது பாலு மணிவண்ணன் மொழியாக்கத்தில் தமிழில் வாசிக்கக் கிடைக்கிறது.

‘தலித்துகள்: நேற்று இன்று நாளை’ புத்தகம் தலித்துகளினுடைய ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பயணத்தின் முழு சித்திரத்தையும் வழங்குவதோடு, சமகாலச் சிக்கல்களை முன்வைத்து எதிர்கால அக்கறை மீதும் கவனம் குவிக்கிறது. எண்ணற்ற வரலாற்று விவரங்களோடும் ஆய்வுத் தகவல்களோடும் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் ஒரு ஆவணமாக மட்டுமில்லாமல், டெல்டும்டேவின் விமர்சனபூர்வமான பார்வையால் விவாதத்துக்குரியதாகவும் ஆகிறது.

புத்தகத்தின் பிற்பகுதியாக அமைந்திருக்கும் ‘விடுதலைக்கான மதமாற்றம்’, ‘தலைசிறந்த அரசியல்’, ‘நவீன தாராளமயத்தின் கீழ் தலித்துகள்’, ‘தலித்துகள் மத்தியிலான புதிய போக்குகள்’, ‘எங்கே தலித் விடுதலை?’ ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றுமே நீண்ட விவாதத்துக்குரியவை. ஒவ்வொரு பகுதியிலுமே தலித்துகளும் தலித் இயக்கங்களும் சிதறுண்டும் பலவீனமடைந்தும் இருப்பதற்கான காரண காரியங்களை வெவ்வேறு அடுக்குகளில் முன்வைக்கிறார். அறிமுகப் பகுதி தொடங்கி கடைசிப் பக்கம் வரை வெவ்வேறு இடங்களில் கோடிட்டுக்காட்டும் ஒரு விஷயத்தை மட்டும் இங்கே எடுத்துக்கொள்கிறேன்: ஒடுக்குதலுக்கு எதிரான குரல்களின் விளைவால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் ஆதாயம் அடைந்தவர்களின் அரசியலற்ற நிலை குறித்த டெல்டும்டேவின் வருத்தம்தான் அது.

தலித் இயக்கங்களால் ஆதாயம் அடையும் ஒருவர், நகர்ப்புறங்கள் நோக்கி நகரும்போது பல நேரங்களில், அவருடைய வளர்ச்சியானது அவரது குடும்பத்தோடு மட்டும் மட்டுப்பட்டுவிடுகிறது. மேம்படும் வாழ்க்கை முறையானது எதிர்ப்புணர்வை மழுங்கடித்துவிடுவதாகச் சொல்கிறார் டெல்டும்டே. நகர்ப்புறங்களில் குடியேறும் தலித்துகளில், சாதியை மறைத்துக்கொண்டு வேலை பார்க்கும் தலித்துகளில் ஒருசாரார் தங்களுடைய கடந்த காலத்தை உதறிவிட நினைக்கிறார்கள். சாதி அடையாளத்தை வெளிப்படையாகச் சொல்வதை அவமானமாகக் கருதும் அளவுக்கான சூழல் நிலவுவதுதான் இதற்குக் காரணம். அப்படித் தங்கள் அடையாளத்தைத் தலித்துகள் மறைத்துக்கொள்ளும்போது, தலித்துகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கான திறனையும் அவர்கள் இயல்பாகவே இழந்துபோக நேரிடுகிறது. மேலும், தலித்துகளுக்கு ஆதரவாக உயர் சாதியினர் இருக்கும் சூழல் உருவாகியிருக்கும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்துவிட முடியும் என்று நம்ப வைக்கவும் படுகிறது என்கிறார் டெல்டும்டே. நவீன தாராளமயமும் என்ஜிஓக்களும் இதற்குத் துணையாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படியான காரணங்களால், தலித்துகள் தங்களுடைய ஒத்திசைந்த இயல்புணர்வை இழக்க நேரிட்டிருக்கிறது. இது உண்மையிலே பெரும் பின்னடைவுதான்.

கறுப்பினத்தவர்களிடம் இப்படியான சிக்கல்கள் இல்லை. இனரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் தப்பித்தால் அவர்களது நிறத்தால் அடையாளம் காணப்பட்டுவிடுவார்கள்; ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியினர் தப்பித்துக்கொள்ள முடியும் என்கிறார் டெல்டும்டே. ஆக, கறுப்பினத்தவர்கள் எப்படியாயினும் தங்களுடைய நிறப் பாகுபாட்டை முதலில் கடக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான், அவர்கள் ஒருமித்துக் குரல் எழுப்புவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்ற இடத்துக்கு வருகிறார்.

டெல்டும்டே சொல்வதுபோல கடந்த நூற்றாண்டில் சாதியின் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் மாறியிருக்கின்றன, தலித் – தலித் அல்லாதோர் என்ற முக்கியமான பிரிவு உருவாகியிருக்கிறது, அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் நடந்திருக்கின்றன, சாதி எதிர்ப்பு மற்றும் தலித் ஆதரவு என்ற நிலை ஓரளவுக்கு உருவாகியிருக்கிறது. இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகு, பெருவாரியான தலித்துகளின் நிலை அப்படியே தொடர்ந்துகொண்டிருப்பதைக் காரணமாகச் சொல்லி, ஆரம்ப காலத்து முன்னெடுப்புகளையே நாம் இன்றும் தொடர முடியுமா? அடையாளத்தை மறைத்திருக்கும், அரசியல் பிரக்ஞையற்றிருக்கும் ஆதாயமடைந்த உதிரிகளுக்கு அரசியல் பிரக்ஞையூட்டி எப்படி ஒன்றுதிரட்டுவது? தலித்துகளின் மேம்பட்ட வாழ்க்கைக்காகப் போராடியவர்களால் முன்னேறியவர்களுக்கு இருக்க வேண்டிய கூடுதலான பொறுப்பை எப்படி அவர்களுக்கு உணர்த்துவது?

தலித்துகளின் வாழ்க்கை மேம்பாடுகளில் முக்கியப் பங்காற்றும் இடஒதுக்கீடானது வரலாற்றுப் பிழையை அழிப்பதற்கான ஒரு முன்முயற்சியாக உயர்சாதியினர் எடுத்துக்கொள்ள வேண்டும்; மாறாக, நடப்பில் உள்ள வடிவமானது மக்களைப் பிரிப்பதற்கான ஒரு ஆயுதமாகவும் உள்ளது என்கிறார் டெல்டும்டே. அதாவது, சாதியின் பெயரால் ஒருவருக்குக் கிடைக்கும் சலுகை ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் அந்தச் சலுகையைப் பெறாதவர்கள் சாதியின் சுமையைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார். ஆக, அந்தச் சுமையைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய பொறுப்பு சலுகை பெற்றவர்களுக்கு இருக்கிறது.

தலித்துகள் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் ஓரளவு முன்னேறியவர்களால்தான் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுப்பது ஆரம்பமானது. அதுதான் தலித் எழுச்சிக்கான வித்து. தலித் எழுச்சி வரலாற்றின் இந்த ஆரம்பப் புள்ளியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, டெல்டும்டேவின் ஆதங்கத்துக்குக் கூடுதல் அர்த்தம் தர முடிகிறது. அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் இதற்கான எடுத்துக்காட்டாகிறார்கள். நமக்குத் தேவை இன்னும் பல அயோத்திதாசர்களும் அம்பேத்கர்களும்தான்!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x