தோழர் கைலாசமூர்த்தி: ஓய்ந்துபோன ஒயிலாட்டம்!

தோழர் கைலாசமூர்த்தி: ஓய்ந்துபோன ஒயிலாட்டம்!
Updated on
2 min read

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கைலாசமூர்த்தி. உள்ளாட்சித் துறையில் பணிசெய்து ஓய்வு பெற்றவர். அதேநேரம், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தமிழகத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று ஒயிலாட்டம் எனும் கலை வடிவத்தைப் பரப்பியவர் அவர். தான் ஒரு நிகழ்த்துக் கலைஞராகவே அடையாளம் காணப்பட வேண்டுமெனக் கருதியவர், ஜூலை 10 ஆம் தேதி காலமாகிவிட்டார்.

சிறந்த ஒயிலாட்டக் கலைஞராக இருந்த கைலாசமூர்த்தி, எண்ணற்றவர்களுக்கு நமது பாரம்பரியமான நாட்டார் கலை வடிவமான ஒயிலாட்டத்தை முறையாகக் கற்றுத் தந்த ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மக்கள் இசைப் பாடகர், நாடக நடிகர், கலைஞர்களை மிகச் சிறந்த முறையில் ஒருங்கிணைத்து வழிநடத்திய, அவருடைய செயற்கரிய செயல்களுக்காக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி, மாவட்ட அளவில் வழங்கப்படும் கலைநன்மணி விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்தின் கலைஞர்கள் தேர்வுக் குழு உறுப்பினராகப் பல திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்தவர். பாளை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையில் கிராமியக் கலைகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் சீரிய முறையில் தம்முடைய பணியைப் பல்வேறு தளங்களுக்குக் கிளை பரப்பியிருந்தவர் கைலாசமூர்த்தி.

ஒயில் பயணம்

கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு விதமான சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக தம்முடைய கலையையே ஆயுதமாக்கி அரசியல் தொழிற்சங்க போராட்டங்களுக்குத் தலைமை வகித்து வழிநடத்தியவரும்கூட, குடிநீர் பஞ்சத்தால் வறண்டிருந்த வள்ளியூரில் அவர் பாடிய “கார்ப்பரேஷன் குழாயில வாட்டரே இல்ல” எனும் பாடல் தமிழகம் முழுவதும் பிரபலமானது.

கைலாசமூர்த்தியின் மாமா சிவசங்கரன் பிள்ளை பிரபலமான ஒயிலாட்டக் கலைஞர் ஆசிரியர். அவரைக் கொண்டுதான் களக்காட்டில் வடகரை விவசாயத் தொழிலாளர் சங்கத்தினருக்காக ஒயில் குழுவை 1983-ம் ஆண்டில் தொடங்கினார் கைலாசமூர்த்தி. அன்று தொடங்கிய அவரின் கலைப் பயணத்தின் மூலமாக ஏராளமானவர்கள் ஒயிலாட்டக் கலைஞர்களாக தமிழகம் எங்கும் இன்றைக்கு உருவாகியுள்ளனர். கலையின் இனிமையோடு போராட்டத்துக்கான கருத்துகளையும் தெளிவோடும் துணிவோடும் சொல்வதை தம் லட்சியமாகக் கொண்டிருந்தார் கைலாசமூர்த்தி.

விழிப்புணர்வும் தீர்வும்

மகாகவி பாரதியார், கவிஞர் இன்குலாப், கவிஞர் பரிணாமன் ஆகியோரின் பாடல்களையும், பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்த பாடல்களையும் குழுவோடு பாடி ஒயிலாக அவர் ஆடும் நேர்த்தியை நேரில் பார்த்தவர்கள் வியக்காமல் இருந்ததில்லை. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு தொடங்கி அன்றாட மக்கள் படும் அவதிகளையும் தம்முடைய கலையின் வழியாக பாமரனுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கடத்தியவர் கைலாசமூர்த்தி. நடைமுறையில் இருக்கும் அரசின் ஜி.எஸ்.டி.வரிவிதிப்பை ராபர்ட் கிளைவ் அரசில் விதிக்கப்பட்ட வரியோடு ஒப்புமைப்படுத்தி இவர் நிகழ்த்திய ஒயிலாட்டக் கலைவடிவம் பரவலான பாராட்டைப் பெற்றது.

சாதி மறுப்பு, மத நல்லிணக்கம், தொழிலாளர் பிரச்சினைகள், மது ஒழிப்பு, வியாபாரமாகும் கல்வி, தினம் தினம் நம்முடைய தூக்கத்தைக் கெடுக்கும் சமகால அரசியல் பொருளாதார சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வையும் அதற்கான தீர்வையும் தம்முடைய கலையின் வழியாக எதிரொலித்தார் கைலாசமூர்த்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in