

கோவையில் சமூக இலக்கிய வாசிப்புத் தளத்திலிருந்து இயங்கிவரும் சிறுவாணி வாசகர் மையம், மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்றை இந்த ஆண்டு முதல் நடத்துகிறது. இதன் மொத்த பரிசுத்தொகை ரூ.32 ஆயிரத்து 500 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த மையம் 'மாதம் ஒரு நூல்' என தனது உறுப்பினர்களுக்குச் சிறந்த நூல்களைப் பதிப்பித்து அளித்து வருகிறது. தவிர ஆண்டுதோறும் சமூக, கலை, இலக்கிய வெளியில் துணிச்சலுடன் பணியாற்றி வருபவர்களுக்கு, எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் ரூ.50 ஆயிரம் ரொக்கத் தொகை மற்றும் விருது வழங்கிவருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. இதற்காக இளம் தலைமுறையினரிடமிருந்தும், இதர படைப்பாளிகளிடமிருந்தும் சிறந்த படைப்புகள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5,000 ஆகும். 10 கதைகளுக்கு தலா ரூ.1,000 பரிசும் வழங்கப்படும். இவை தவிர சிறப்புப் பரிசும் உண்டு.
கதைகளைத் தமிழில் 'யூனிகோட்' எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். ஏ4 பக்க அளவில் 5 அல்லது 6 பக்கங்கள் வரலாம். சிறுகதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 2020, செப்டம்பர் 30. ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய விவரம் 2020 டிசம்பரில் வெளியிடப்படும்.
தேசத்திற்கோ, எந்தவொரு பால், இன, மத, சாதி, மொழிக்கோ எதிரான கருத்துகள் இடம்பெறக் கூடாது. கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களையும் புத்தகக் காப்புரிமை பதிப்பகத்தையும் சார்ந்தது. இலக்கிய/வாசிப்பு அனுபவம் வாய்ந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் 'நாஞ்சில்நாடன் விருது' 2021 விழாவில் புத்தகமாக வெளியிடப்பட்டு, பரிசளிக்கப்படும். கதைகளை svmshortstories2020@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ் கூறுகையில், "கரோனா ஊரடங்கில் முதியவர்களிடம் மட்டுமல்ல, இளைய சமுதாயத்தினரிடமும் வாசிப்புப் பழக்கம் அதிகரித்திருக்கிறது. அதேசமயம் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. இந்த நெருக்கடியான சூழலிலும் இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையூட்டும் விதமாகவே இந்தப் போட்டி அறிவிக்கப்படுகிறது. இதை ஏற்பாடு செய்து தருபவர் ரா.கி.ரங்கராஜனின் பேரன் ஆவார். கரோனா காலமாக இருப்பதால் அதை மையப்படுத்தியே எல்லாக் கதைகளும் அமைந்திடாத வண்ணம் பொதுத்தளத்தில் கதைகள் வருவதையே எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.