Published : 12 Jul 2020 02:54 PM
Last Updated : 12 Jul 2020 02:54 PM

கரோனா இறுக்கத்தைப் போக்க காணொலி வழியே கம்பராமாயணம்: காரைக்குடி கம்பன் கழகம் சிறப்பு ஏற்பாடு

கரோனா தொற்று மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை மட்டுமல்ல... மனதையும் இறுக்கி முடமாக்கிப் போட்டிருக்கிறது. இந்த இறுக்கத்திலிருந்து வெளிவருவதற்காக பலரும் பலவிதமான யோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் காரைக்குடி கம்பன் கழகம் இணைய வழியில் தினமும் கம்பராமாயணச் சொற்பொழிவுகளை வழங்கி மக்களின் மன இறுக்கத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

உலகெங்கும் உள்ள கம்பன் கழகங்களுக்கு எல்லாம் தாய்க் கழகம் காரைக்குடி கம்பன் கழகம். 1939-ல், கம்பன் அடிப்பொடி சா.கணேசனார் தொடங்கிவைத்த காரைக்குடி கம்பன் கழகம், கடந்த ஆண்டு முத்துவிழா (80 ஆண்டுகள்) கண்டது. ஆண்டுதோறும், கம்பன் பிறந்த பங்குனி மாதத்து உத்திரம் நட்சத்திரத்தில் (மார்ச் - ஏப்ரல்) காரைக்குடி மற்றும் கம்பன் அருட்கோயில் அமைந்திருக்கும் நாட்டரசன் கோட்டையில் மூன்று நாட்கள் கம்பன் விழாவை விமரிசையாக நடத்தி கம்பன் புகழ்பாடும் காரைக்குடி கம்பன் கழகம். இந்த ஆண்டு கரோனா முடக்கத்தால் கம்பனுக்கு விழா எடுக்கமுடியவில்லை. மாற்றாக என்ன செய்யலாம் என யோசித்த கழகத்தார், காணொலி வழியே கம்பனைப் பாடும் யோசனையைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

பழ.பழனியப்பன்

இதுகுறித்து இந்து தமிழ் திசை இணையத்திடம் பேசிய காரைக்குடி கம்பன் கழகத் தலைவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன், “ஆண்டுக்கு ஒரு முறை விழா எடுத்தாலும் மாதா மாதம் முதல் சனிக் கிழமைகளில் அன்பர்களை அழைத்து கம்பராமாயாணச் சொற்பொழிவுகளை கடந்த மூன்று ஆண்டுகளாக விடாமல் நடத்தி வருகிறோம். அந்தக் கூட்டத்துக்கு அதிகபட்சம் 150 பேர் வரைக்கும் வருவார்கள். ஆனால், ‘பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் இத்தனை பேரை ஒரே இடத்தில் கூட்டாதீர்கள்’என்று காவல்துறை தரப்பில் அன்புக் கட்டளை போட்டார்கள். அதனால் மார்ச் மாதத்துடன் இந்தக் கூட்டம் நடத்துவதை நிறுத்திவிட்டோம்.

பிறகென்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், கரோனா அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காக கம்ப ராமாயண சொற்பொழிவுகளைத் தினமும் காணொலி வழியாகத் தந்தால் என்ன என்று அன்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். உடனே அதற்கான வேலைகளைத் தொடங்கினோம்.

கம்ப ராமாயணத்தில் மொத்தம் 118 படலம் இருக்கிறது. இதில் தினம் ஒரு படலத்தைப் பற்றி கம்பனில் தோய்ந்த அன்பர்களைப் அரை மணி நேரம் பேசவைப்பது என திட்டமிட்டுக் கொண்டோம். இதற்காக தகுதியான நபர்களை ஒவ்வொரு படலம் பற்றியும் பேசிப் பதிவிட்டு அது தொடர்பான காணொலியை அனுப்பிவைக்கச் சொன்னோம். பேராசிரியர்கள், கம்பனைப் படித்தவர்களுக்கு மட்டுமல்லாது கம்பன் கழக விழாக்களில் கம்பனைப் பாடி பரிசுபெற்ற கல்லூரி மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பைக் கொடுத்தோம். எங்களுக்கு ஏராளமான வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வந்து குவிந்துவிட்டன. அவற்றில் பிழைகள் ஏதும் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து அரை மணி நேரக் காணொலியாக சுருக்கி தினமும் காலை 5.45 மணிக்கு ஒவ்வொரு படலமாக அப்லோடு செய்ய ஆரம்பித்தோம்.

யூடியூப், முகநூல், வலைப்பூக்களில் இந்தச் சொற்பொழிவைப் பார்த்துவிட்டு கடல் கடந்து கம்பனை நேசிப்பவர்கள் பலரும் எங்களைத் தொடர்புகொண்டு பேசினார்கள். அமெரிக்கா, சிங்கப்பூர், ஸ்ரீலங்காவில் இருந்தெல்லாம் பேசிய அன்பர்கள், தங்களுக்கும் சொற்பொழிவாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதிலும் இருவருக்கு வாய்ப்பளித்தோம்.

சொற்பொழிவு குறித்த பின்னூட்டங்களைத் தருவதற்கும் வழி செய்திருக்கிறோம். அப்படி வரும் பின்னூட்டங் களில் சுட்டிக்காட்டப்படும் குறைகளையும் நிறைகளாக்கிச் சரிசெய்து வருகிறோம். இந்தச் சொற்பொழிவை தினசரி தங்களுக்கு வாட்ஸ் அப்பில் பிரத்யேகமாக அனுப்பிவைக்கும்படி 504 பேர் இதுவரை எங்களிடம் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மே முதல் தேதி தொடங்கப் பட்ட இந்தச் சொற்பொழிவானது சுமார் நான்கு மாதங்களுக்கு ஓடும். அது முடிந்த பிறகு அடுத்ததாக இதே தளத்தில் சிலப்பதிகாரச் சொற்பொழிவை காதை வாரியாக தரலாம் என முடிவெடுத்திருக்கிறோம்” என்றவர், “இது நாள் வரை மாதத்தில் ஓர் நாள் காரைக்குடிக்குள் மட்டும் கம்பனின் பெருமை பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது கரோனா புண்ணியத்தால் இணையம் வழியாக உலகம் முழுவதும் இருக்கும் அன்பர்களையும் கம்ப ரசம் பருகவைத்துக் கொண்டிருக்கிறோம்; அவர்களின் மன இறுக்கத்தை ஓரளவுக்கேனும் தளர்த்திக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்” என்றார்.

கீழே உள்ள ‘லிங்க்’கை ‘க்ளிக்’ செய்தால் நீங்களும் தினமும் கம்பரசம் பருகலாம். https://kambankazhagamkaraikudi.blogspot.com/2020/07/blog-post_7.html

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x