

இந்த பொதுமுடக்கக் காலத்தைப் பயன்படுத்தி ஜெயமோகன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் சிறுகதைகளாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்க, வாசகப் பரப்பிலிருந்து சிலர் எழுத்தாளர்களாகத் தங்களை அழுத்தம் திருத்தமாக முன் வைத்திருக்கிறார்கள். இது இவர்களின் கன்னி எழுத்து என்பதே தெரியாத அளவுக்கு எழுத்தில் அசத்தும் மூவர் குறித்த அறிமுகம் இங்கே.
ஜீரோ டிகிரி ( தமிழில் எழுத்து) என்ற பெயரில் சென்னையில் பதிப்பகம் நடத்தி வரும் ராம்ஜி இலக்கிய வட்டத்தில் பரிச்சயமான பெயர். சென்னைவாசியான இவர் திருவல்லிக்கேணியில் இருந்தபடி, தான் கல்வி பயின்ற கல்லூரி கால நிகழ்வுகளையும் அதனூடாக நட்பு, காதல், ஏமாற்றம், தோல்வி அனைத்தையும் பரபரப்பான ஒரு சினிமா போல் எழுதி அசத்தியவர். ‘அல்லிக்கேணி’ என்ற தலைப்பில் இவர் முகநூலில் எழுதிய 30 அத்தியாயத் தொடருக்கு வாசகர்களிடையே பெரும் வரவேற்பு. இந்தப் புத்தகத் திருவிழாவில் எதிர்பார்க்கப்படும் ஒரு தன் வரலாறாக இது உருமாறியுள்ளது. இது குறித்து ராம்ஜி நம்மிடம் பேசுகையில், " எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இந்த லாக்டவுன் அதற்கு வழி தந்தது. தொடரில் சுருக்கமாக முடித்துக்கொண்ட பகுதிகள் புத்தகமாக வரும்போது விரிவாக வரும்" என்றார்.
காரைக்காலை அடுத்த அனந்தமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த செந்தில் குமார் சில தனியார் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றியவர். இவர் முகநூலில் எழுதிய ‘முத்தம்மாள்’ தொடருக்கு அவ்வளவு வரவேற்பு. செந்தில் குமாரின் பாட்டி பெயர்தான் முத்தம்மாள். அவரை மையப்படுத்தி இத்தொடர் விரிந்தாலும் முத்தம்மாள் இத்தொடரில் ஒரு நெகட்டிவ் கேரக்டர். இருந்தாலும் எவ்விதத் தொய்வுமின்றி குடும்ப உறவுகள், துரோகம், பழிவாங்கல், காரைக்கால், பர்மா என விரிந்து கலங்கவைக்கும் அட்டகாசமான குடும்ப என்டர்டெயின்மென்டுக்கு உத்தரவாதம் தந்தது இத்தொடர். இதுவும் புத்தகத் திருவிழாவுக்கு, பிரபல பதிப்பகம் மூலமாக ஒரு நாவலாக வெளிவருகிறது.
திருவிடைமருதூரைச் சேர்ந்த ஆர்.முருகேசன் ‘சேக்கிழாரின் டைரிக் குறிப்புகள்’ என்ற பெயரில் சுயமாக வலைதளம் நடத்தி வருகிறார். இவரின் ‘உதிரா இலைகள்’ என்ற தலைப்பிலான தொடரும் கவனம் பெற்றிருக்கிறது. இவரின் வாழ்வில் நிகழ்ந்த சுவாரசிய சம்பவங்களின் தொகுப்பே ‘உதிரா இலைகள்’.
மேற்கண்ட மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இந்த மூன்று தொடர்களுமே முகநூலில் அன்றாடப் பதிவுகளாக வெளிவந்து வெற்றி கண்டவை. அதனையும் வார இதழில் வெளிவரும் தொடர் போல் பாவித்து சஸ்பென்ஸ் தாள முடியாமல் தங்களது முடிவை கமெண்ட்ஸில் தெரிவித்த வாசகர்களும் உண்டு.
கரோனா தனிமைக் காலத்தில் பல்வேறு மனிதர்களின் அபரிமிதமான பல தனித் திறமைகள் தங்களைப் பகிரங்கப்படுத்திக் கொண்டுள்ளது மறுக்க முடியாத உண்மை.
-கே.கணேஷ் குமார்