Last Updated : 11 Jul, 2020 07:40 AM

 

Published : 11 Jul 2020 07:40 AM
Last Updated : 11 Jul 2020 07:40 AM

சமூகத்துக்கும் சினிமாவுக்குமான ஊடாட்டம்

எண்பதுகளின் தமிழ் சினிமா
ஸ்டாலின் ராஜாங்கம்
நீலம் வெளியீடு
திருவல்லிக்கேணி, சென்னை-14.
தொடர்புக்கு:
99942 04266
விலை: ரூ.150

தமிழகத்தில் சினிமா என்பது திருவிழா போன்றது. சாமானியர்களை அவர்களுடைய அன்றாடக் களைப்பிலிருந்து விடுவிக்கும் கொண்டாட்டமாக சினிமா இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் வரலாற்றை சினிமாவோடு பொருத்திப் பார்க்கும்போது அதை நாம் வெறும் பொழுதுபோக்காக மட்டும் கடந்துவிட முடியாது. மிக முக்கியமாக, அறிவுச் செயல்பாட்டோடு தொடர்பில்லாமல் இருப்பவர்களுக்கான சிந்தனை முறையை உருவாக்கிக்கொடுப்பதில் சினிமாவின் பங்கு கணிசமானது. அதனால்தான், பெரும்பாலான சமூகப் பிரச்சினைகள் குறித்துப் பேசும்போது, அங்கே தவிர்க்க முடியாமல் சினிமாவைக் கொண்டுவருகிறோம். எண்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களைச் சமூக, அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகியிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘எண்பதுகளின் தமிழ் சினிமா: திரைப்படங்களின் ஊடான தமிழ்ச் சமூக வரலாறு’ என்ற புத்தகம் ஒரு முக்கியமான வரவு.

எண்பதுகளில் வெளியான சினிமாக்கள் என்னென்ன விஷயங்களைக் கையாண்டன, சமூகங்களை – குறிப்பாக, சாதிய உரையாடல்களை – சினிமாக்கள் எப்படிப் பிரதிபலித்தன, சினிமாக்களைச் சமூகங்கள் எப்படி உள்வாங்கிக்கொண்டன என்று சமூகத்துடன் திரைப் பிரதிகள் நிகழ்த்திய ஊடாட்டங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது இந்தப் புத்தகம். எண்பதுகளைப் பிரத்யேகமாக எடுத்துக்கொண்டதற்கு முக்கியமான காரணம், கிராமங்கள் நுட்பமாக சினிமாவில் நுழையத் தொடங்கிய காலகட்டம் அது என்பதுதான். கிராமம் எனும்போது சாதியும் கூடவே வந்துவிடுகிறது. அந்தக் காலகட்டத்தில் சினிமாவைக் கையில் வைத்திருந்தவர்கள் எப்படியான சாதிய விவாதங்களைத் தங்கள் சினிமாக்களில் முன்னெடுத்தார்கள் என்பது ஒட்டுமொத்தப் புத்தகத்திலும் ஒரு அடிச்சரடாக ஓடுகிறது.

ஸ்டாலின் ராஜாங்கம் இந்தப் புத்தகத்தில் கையாண்டிருப்பது கோட்பாட்டுரீதியான அணுகுமுறை அல்ல. நாம் ஏற்கெனவே பார்த்து ரசித்த சினிமாக்களை ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து அணுகுவதன் வழியாக சமூகத்தின், சினிமாவின் கூட்டுப் பிரக்ஞையை மேல்மட்டத்துக்கு எடுத்துவருகிறார். புதிய மாற்றங்களுக்குள் வர விரும்பாத, பிற்போக்கான நடைமுறைகளில் சுகம் கண்ட மனத்தின் கூட்டுப் பிரக்ஞையானது சமூகத்துக்குள்ளும் திரைக்குள்ளும் செயல்படும் விதம் மிக நுட்பமாக எடுத்து வைக்கப்படுகிறது. பார்வையாளர்கள் மீது கருத்துகளைத் திணிப்பதற்காகப் படைப்பாளரும் திரைப் பிரதியும் செலுத்தும் ஆதிக்கங்களை விவாதிக்கும் விஷயங்களெல்லாம் வெகுவாகப் பொது உரையாடலுக்குள் வர வேண்டியவை. ஒருவழிப்பாதையில் சமூகத்தோடு தீவிரமாக உரையாடும் சினிமாவுக்கு இருக்க வேண்டிய தார்மீக அக்கறையை அலட்டல் இல்லாமல் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.

வேலைக்காரர்களைப் பொய் சொல்பவர்களாக, கோள் சொல்பவர்களாக, பேராசைக்காரர்களாக, திருடர்களாக சினிமாக்களில் சித்தரிக்கும் போக்கு சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையில் எப்படியான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்திருக்கும் நேரடி உதாரணம். கூட்டுப் பிரக்ஞைக்குத் தன்நினைவு இருப்பதில்லை. அதனால், அது உருவாக்கும் ஆபத்துகளை அது உணர்ந்திருப்பதில்லை. ‘எண்பதுகளின் தமிழ் சினிமா’ போன்ற புத்தகங்கள் அதை உணர்த்தும்போது திரைக் கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மறுபரிசீலனைக்கான ஒரு வாய்ப்பு உருவாகிறது. மேலும், எண்பதுகளின் சினிமாவிலிருந்து நெடுந்தூரம் நாம் பயணித்திருந்தாலும் மிக ஆதாரமான எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆக, சினிமாக்காரர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகமாகிறது.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x