Last Updated : 11 Jul, 2020 07:36 AM

 

Published : 11 Jul 2020 07:36 AM
Last Updated : 11 Jul 2020 07:36 AM

ஆயிரங்காலத்துப் பயிர் 

பெங்காலி கல்ச்சர்: ஓவர் எ தவுசண்ட் இயர்ஸ்
குலாம் முர்ஷித்
ஆங்கிலத்தில்: சர்பாரி சின்ஹா
நியோகி புக்ஸ் வெளியீடு
புதுடெல்லி - 110020
விலை: ரூ.995

ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் எப்படித் தோன்றின, எப்படி மாற்றம் பெற்றன, எப்படி மறைந்தன என்ற வரலாற்றை விவரிப்பதானது அந்தச் சமூகத்தின் வரலாற்றைக் கூறுவதாகவே அமைந்துவிடும். பொதுவாகவே, வரலாறு என்பது அரச (ஆளும்) பரம்பரையைப் பேசுவதாகவே இருந்துவரும் நிலையில், ஓர் இனத்தின் பண்பாட்டு வரலாற்றை எழுதப் புகுவது எளிதான ஒன்றல்ல. சாதாரண மக்களின் அன்றாட உரையாடல்களில் இந்த வரலாறு இடம்பெறும்போதுதான் அடுத்தவர் குறித்த வெறுப்புணர்வை அவர்களிடையே விதைக்க முனைவோரைப் புறந்தள்ள முடியும். அவ்வகையில், கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு எண்ணற்ற பங்களிப்புகளைச் செய்துள்ள வங்க மக்களின் மொழி, உணவு, உடை, கல்வி, இலக்கியம் உள்ளிட்ட எல்லா பண்பாட்டுக் கூறுகளின் வரலாற்றை, சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பேராசிரியர் குலாம் முர்ஷித் மனமாரப் பாராட்டப்பட வேண்டியவர்.

லண்டனில் வசித்துவரும் வங்க மொழிப் பேராசிரியரான முர்ஷித்திடம் வங்கப் பண்பாடு குறித்த தொடர் நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்துத் தருமாறு கேட்டது பிபிசி ரேடியோ. இதற்கான விரிவான தயாரிப்புகளைச் செய்துவந்தபோதுதான் அதைத் தனியொரு நூலாக எழுதவும் அவர் திட்டமிட்டார். பிரதி தயாராகிவந்தபோது, வங்க தேசத்திலிருந்து வெளிவரும் ‘ப்ரதம் ஆலோ’ நாளிதழின் ஆசிரியர் சாஜத் ஷெரீஃப் தனது பத்திரிகையில் தொடராக வெளியிட முன்வந்தார். பரவலான மக்களைச் சென்றடைந்தது. டாக்கா, கொல்கத்தா, ராஜ்ஷாஹி, ஜஹாங்கீர்நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளிலும் விவாதத்துக்கு உள்ளாயின.

அடிப்படையில், வங்கப் பண்பாடு என்பது அந்த மொழியின் அடிப்படையில் அமைந்தபோதும் இந்து, முஸ்லிம் இரு பிரிவினரும் இதைப் பின்பற்றுகின்றனர் என்பதே இதன் தனிச்சிறப்பாகும். அவரவர்களுக்கே உரித்தான மதரீதியான தனித்தன்மைகள் இருந்தபோதும் வங்கப் பண்பாடு என்று வரும்போது அவை ஒன்றிணைந்து புதியதொரு பரிமாணத்தை எட்டுகின்றன. வரலாறு, மொழி, இலக்கியம் எல்லாமே இருவராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டுவருகின்றன. அவ்வகையில், வங்க தேசம் என்ற தனியொரு நாடு உருவாகவும் இதுவே காரணமாக அமைந்தது. கி.பி. 4-ம் நூற்றாண்டில் தொடங்கிய காளிதாசரின் ‘ரகுவம்சம்’ முதல் கி.பி. 13-ம் நூற்றாண்டின் இறுதியில் மார்கோபோலோவின் குறிப்புகள் வரை கவுர் என்ற புவிப் பகுதியை மையமாகக் கொண்டு, வங்க பூமியின் வரலாறு படிப்படியாக விரிகிறது.

அன்று இந்தியாவில் பரவலாகப் பேசப்பட்டுவந்த பிராகிருத மொழிக்கு உள்ளேயே ஒரு வட்டார மொழியாகக் கிளைத்த வங்க மொழி, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. எனினும், 18-ம் நூற்றாண்டில் இருந்தே பங்க்ளா (வங்காளி) என்ற சொல்லாக்கம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கி.பி. 1204-ல் பக்தியார் கில்ஜி இப்பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை இந்தப் புவிப்பரப்பில் மொழி, காதல், திருமணம், பெண்களின் பண்பாடு, இசை, சமூகம், மதம், கட்டிடக் கலை, கைத்தொழில், உடை, உணவு எனப் பண்பாட்டுக் கூறுகளில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களைத் தனித்தனிப் பிரிவுகளாக இந்நூல் விவரிக்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் அறிமுகமான நாடகம், சினிமா போன்றவை வளர்ச்சி பெற்ற வரலாற்றையும் எடுத்துக்கூறுகிறது.

உதாரணமாக, தொடக்கக் காலத்தில் இருந்த பௌத்த, சமண விஹாரங்கள், பள்ளிகள் காலப்போக்கில் இந்து தெய்வங்களில் கோயில்களாக மாறியபோதும் புத்தர், சமண குருமார்களின் சிலைகள் தொடர்ந்து மையமாக இருந்ததைக் காண முடிகிறது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் உருவான முஸ்லிம்களின் ஆட்சியிலும்கூட இந்து கோயில்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. குறிப்பாக, 16-ம் நூற்றாண்டில் சைதன்யர் பரப்பிவந்த கருத்துகளின் தாக்கத்தால் வைணவக் கோயில்கள் பெருகின. உள்ளூர் கட்டிடக் கலையைப் பின்பற்றி மசூதிகளும் உருவாயின. பிரிட்டிஷ் காலத்தில் உள்ளூர் கலை மட்டுமின்றி முகலாய, ஐரோப்பிய கட்டிடக் கலையின் அடிப்படையில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் உருவாயின. இதுபோன்று பண்பாட்டின் ஒவ்வொரு கூறிலும் படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்களை இந்நூல் மிக நுணுக்கமாக விவரிக்கிறது. அதேபோன்று மேற்கு வங்கம், வங்க தேசம் என இன்று பிரிந்துகிடந்தபோதும் வங்காளி என்ற தேசிய இன அடையாளத்தின் தனித்துவம் குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. நவீன யுகத்தில் தொழில், உடை, உணவு போன்றவற்றில் எத்தகைய தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் வங்காளிகள் அவர்களுக்கேயுரிய பண்பாட்டுச் சின்னங்களை உலகமெங்கும் பரப்பிவருகின்றனர் என்பதையும் தெளிவுறக் கூறுகிறது.

இந்நூலின் இறுதிப் பகுதியில் வழங்கப்பட்டுள்ள நூல் விவரப் பட்டியலானது வங்காளிகள், அவர்களது பண்பாட்டுக் கூறுகள், அரசியல், வரலாறு பற்றி கடந்த இரு நூற்றாண்டுகளில் வெளியான நூல்களை அகரவரிசைப்படி வழங்கும் அதே நேரத்தில், தனித்துவமான நூல்கள் குறித்த ஆசிரியரின் பரிந்துரையையும் சேர்த்து வழங்குகிறது. குறிப்பிட்ட பண்பாட்டுப் பிரிவு குறித்து மேலும் ஆழமாகப் பயிலும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் வங்க மொழியில் வெளிவந்து பல பதிப்புகளைக் கண்ட இந்நூலின் தனிச்சிறப்பை உணர்ந்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முன்வந்து, அதை மிகச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார் சர்பாரி சின்ஹா.

தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு கூறுகளைப் பற்றி தனித் தனியாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும், இந்நூலைப் போன்று வரலாற்றுப் பின்னணியோடு அவற்றை ஒரே இடத்தில் முன்வைக்க வேண்டியதன் தேவையை இது நமக்கு நினைவூட்டுகிறது.

- வீ.பா.கணேசன், தொடர்புக்கு: vbganesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x