

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய உறவினரும், உளவியலில் பிஹெச்டி செய்தவருமான மேரி எல்.ட்ரம்ப் எழுதியிருக்கும் புதிய புத்தகம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. முக்கியமான காரணங்கள் இரண்டு: ஒன்று, அது டொனால்டு ட்ரம்பின் குடும்ப உறுப்பினர் எழுதும் வாழ்க்கை வரலாறு. இன்னொன்று, ‘உலகின் மிக அபாயகரமான மனிதனை எங்கள் குடும்பம் எப்படி உருவாக்கியது’ என்கிற துணைத் தலைப்பு.
மேரி எல்.ட்ரம்பின் ‘டூ மச் அண்ட் நெவர் எனஃப்: ஹவ் மை ஃபேமிலி கிரியேட்டட் தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் டேன்ஜரஸ் மேன்’ என்ற புத்தகத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சித்திரத்தைத் தீட்டுகிறார். ட்ரம்ப் பற்றிய வேறு புத்தகங்கள் வழி வாசகர்கள் அறிந்திருக்கும் சுயமோகி, தற்செயலான தலைவர் போன்ற சித்திரங்களுக்கு அப்பாற்பட்டு, வேறு சில இருண்ட பக்கங்களையும் வெளிக்கொண்டுவருகிறார் மேரி. குறிப்பாக, ட்ரம்பின் அப்பாவும் தாத்தாவும் ட்ரம்பின் ஆளுமையை உருவாக்குவதில் எப்படியான பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை வெளிக்கொண்டுவந்திருக்கிறார். “அப்பா ஃப்ரெட் ட்ரம்ப் அவருடைய பிள்ளைகள் மீதான அக்கறையை அவரது தேவை சார்ந்தே வெளிப்படுத்தினார். பிள்ளைகளின் தேவையை அவர் கண்டுகொள்ளவில்லை. அன்பு என்பதற்கு அவரது வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை. சமூகத்தை எதிர்த்து வாழும் பண்பு கொண்ட ஒருவருக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அவர். கீழ்ப்படிதலை மட்டுமே அவர் எதிர்பார்த்தார். அவ்வளவுதான்” என்று எழுதுகிறார் மேரி. ஃப்ரெட் ட்ரம்ப் அவருடைய ரியல்-எஸ்டேட் தொழிலுக்கு ஒரு வாரிசை உருவாக்குவதைத் தவிர, அவரது பிள்ளைகள் மீது வேறு அக்கறை தரவில்லை என்கிறார். டொனால்டு ட்ரம்பை அப்படியான வாரிசாக வளர்த்தெடுத்தார். அலுவலகத்தில் ட்ரம்ப் ஆணவம் காட்டுவதையும், வறியவர்களைக் கொடுமைப்படுத்துவதையும் ஃப்ரெட் ஆதரித்ததாகவும் எழுதுகிறார்.
“ட்ரம்ப் ஒரு சுயமோகி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சமூகத்தை எதிர்த்து வாழும் பண்பு கொண்ட அப்பாவால், உளவியல்ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் அவர்” என்று சொல்லும் மேரி, அமெரிக்க அதிபர் தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதிலிருந்தும் மற்றவர்களுடன் பரிவுகொள்வதிலிருந்தும் தடுக்கும் நோய்க்கூறுகளும் அவருக்கு உண்டு என்றும் சொல்கிறார். “அவர் ஒருபோதும் நேசிக்கப்படவில்லை என்பது அவருக்குத் தெரியும்” என்கிறார் மேரி. சொந்த விவகாரங்களைப் பழிதீர்த்துக்கொள்வதற்காக மேரி இப்படிச் செய்வதாகவும், இந்தப் புத்தகம் முழுக்கப் பொய்கள்தான் நிரம்பியிருக்கும் என்றும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். இந்தப் புத்தக வெளியீட்டைத் தடைசெய்யும் வேலைகளில் இறங்கினார் அதிபரின் சகோதரர் ராபெர்ட். அது நடக்கவில்லை. ஜூலை 28-ம் தேதி வெளிவருவதாக இருந்த இந்தப் புத்தகம், இரண்டு வாரங்கள் முன்னதாக ஜூலை 14 அன்றே வெளியாகிறது. ட்ரம்பின் குடும்பத்திலிருந்து ஒருவர் ட்ரம்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் முதல் புத்தகம் இது. கூடவே, இந்தப் புத்தகத்தின் வரவு அமெரிக்க ஜனநாயகத்தின் உயிர்த்தன்மையை மேலும் தூக்கிப்பிடிக்கிறது.