Published : 05 Jul 2020 08:12 AM
Last Updated : 05 Jul 2020 08:12 AM

முரண்பட்ட சிந்தனையாளர்களை ஒன்றிணைத்தவர் ஞானி!

தமிழில் எழுத்தாளர்களைப் போலவே விமர்சகர்களின் எண்ணிக்கையும் மிகப் பெரிது. இரண்டு பாத்திரங்களையும் ஒருசேர வகிப்பவர்கள் அதிகம் இருப்பதால் அப்படியிருக்கலாம். ஆனால், அபிப்ராயவாதிகளைத் தள்ளிவைத்துவிட்டு, கருத்தியலின் வழிநின்று திறனாய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தன்னுடைய மற்றும் தான் சார்ந்த குழுவினரின் படைப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாகச் சிற்றிதழ் நடத்துபவர்களை விலக்கிவிட்டுப் பார்த்தால், கருத்தியல் சார்ந்த விவாதங்களுக்காகவும், அவற்றைப் பற்றி அறிவுச் சேகரங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும், தெளிவுபெறுவதற்காகவும் சிற்றிதழ் நடத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதுபோலவே, தமிழ்நாட்டு அரசியலிலும் தமிழ்த் தேசியவாதிகளின் நோக்கும் போக்கும் இன உணர்ச்சி என்னும் சிமிழுக்குள் அடைத்துவிடக் கூடியவை. உலகு தழுவிய மார்க்ஸிய விஞ்ஞானமோ கட்சி அரசியலுக்குள் சிக்கித் தவிக்கிறது. தமிழ்த் துறை அறிஞர்கள் எனப்படுபவரோ பதவுரை, பொழிப்புரைகளுக்குள்ளேயே தங்களைச் சிறைவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியொரு சூழலில்தான் மார்க்ஸியத் திறனாய்வாளராக, சிற்றிதழாளராக, தமிழ்த் தேசியராக, மார்க்ஸிய அறிஞராக, தமிழறிஞராக கோவை ஞானி என்ற மாபெரும் ஆளுமையின் பங்களிப்புகள் நம்மை மலைப்போடு திரும்பிப்பார்க்க வைக்கின்றன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கத்தை நோக்கி நகர்ந்த நாட்களில் அங்கு படித்த ஞானி, தியானத்தில் மனத்தைச் செலுத்துபவராகத்தான் இருந்திருக்கிறார். தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து நடக்கிற கோவைச் சூழலே பொதுவுடைமை இயக்கத்தை நோக்கி அவரை உந்தித் தள்ளியிருக்கிறது. நாம் வாழும் காலத்தின் மாபெரும் அறிஞர்களான எஸ்.என்.நாகராசனும் எஸ்.வி.ராஜதுரையும் ஞானியின் இளம்வயது நண்பர்களாக வாய்த்தது அவருக்குக் கிடைத்த பெரும்பேறு. எஸ்.என்.நாகராசனை ஞானியும் ஞானியை எஸ்.வி.ஆரும் ஆசான்கள் என்று சொல்லிக்கொள்வதை மரியாதை நிமித்தமாகவே கொள்ள வேண்டும். கொடுக்கவும் கொள்ளவும் ஒவ்வொருவரிடத்திலும் அறிவின் பொற்குவியல் நிரம்பியே இருந்திருக்கிறது.

எஸ்.என்.என்., எஸ்.வி.ஆர். ஆகியோருடன் இணைந்து மார்க்ஸியத்தின் பல்வேறு பரிமாணங்களைக் கற்ற ஞானி, கட்சி மார்க்ஸியரிடமிருந்து விலகியே இருந்தார் என்பதில் வியப்பொன்றும் இல்லை. ஒட்டி உறவாட நினைத்தாலும் வெட்டியெறியப்பட்டிருக்கக்கூடும். வானம்பாடி இயக்கத்திலும் அவருக்கு அப்படித்தான் நிகழ்ந்தது என்று அறிய முடிகிறது. அந்தக் காலகட்டத்தில் கல்லிகை என்னும் காவியம் ஒன்றைக் கவிஞருமான ஞானி எழுதியிருக்கிறார். எனினும், அவருக்கு யார் மீதும் எந்த இயக்கத்தின் மீதும் தனிப்பட்ட விரோதங்கள் எதுவுமில்லை. அவையெல்லாம் கட்சிகள், இயக்கங்களில் உள்ள பொதுக் குணாம்சங்கள் என்ற புரிதலுடனேயே அவர் இருந்திருக்கிறார்.

ஞானியின் பொதுவாழ்வு அறுபதுகளின் மத்தியிலிருந்து தொடங்கியது. 1965-ல் நண்பர்களுடன் இணைந்து ‘சிந்தனை மன்றம்’ என்ற பெயரில் மாதாந்திரக் கூட்டங்களை நடத்துகிறார். மார்க்ஸியத்தைப் பற்றிய ஆழமான உரையாடல் களமாக அது அமைகிறது. காவல் துறையின் பார்வைக்கு உள்ளானதன் காரணமாக அந்தச் சந்திப்புகள் நிறுத்தப்படுகின்றன. ஆனால், 1967-ல் நண்பர்களுடன் இணைந்து ‘புதிய தலைமுறை’ மாத இதழைத் தொடங்குகிறார். மாவோவின் சிந்தனைகள் பற்றிய உரையாடல்களாக அமைந்ததால் அந்த இதழும் காவல் துறையின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி நிறுத்தப்படுகிறது. அது நக்ஸல்பாரி இயக்கம் தீவிரமாக வேர்பாய்ச்சிக்கொண்டிருந்த காலம். எனவே, மார்க்ஸியம் சார்ந்த உரையாடல்கள் தீவிரமாக ஒடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால், கட்சி சார்ந்த கட்டுப்பாடுகளும்கூட ‘புதிய தலைமுறை’ இதழை நிறுத்துவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்ற ஞானியின் நேர்காணல் குறிப்பொன்றும் முக்கியமானது.

‘புதிய தலைமுறை’யைத் தொடர்ந்து மார்க்ஸியத்தை வெவ்வேறு அறிவுத் துறைகளின் வெளிச்சத்தில் அறிந்துகொள்ளும் முயற்சியாக ஞானியும் அவரது நண்பர்களும் இணைந்து ‘பரிமாணம்’ என்ற சிற்றிதழைக் கொண்டுவந்தனர். அதுவும் ஒருசில ஆண்டுகளில் நின்றுபோனது. ஞானியே ஆசிரியராகப் பொறுப்பேற்று ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ என்று இரண்டு சிற்றிதழ்களை நடத்திவந்தார். மேற்கொண்டு செலவழிக்க தனது பொருளாதார நிலை இடங்கொடுக்காது என்ற நிலையில், ‘தமிழ்நேயம்’ இதழை 67 தொகுப்புகளோடு நிறுத்திக்கொண்டார். சொந்தப் பணத்தில் சிற்றிதழ் நடத்திய அவர், தொடர்ந்து இதழை நடத்துவதற்கு சந்தாக்களையோ நன்கொடைகளையோ நம்பவில்லை.

இலக்கிய அனுபவங்கள் மகோன்னதமாய்ப் பேசப்பட்டுவந்த காலத்தில், ‘நிகழு’ம் ‘தமிழ்நேய’மும் குழு அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழின் மிகச் சிறந்த படைப்பிலக்கியங்களைப் பற்றிய திறனாய்வுகளைச் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’யையும், ஜெயமோகனின் ‘விஷ்ணுபுர’த்தையும் மட்டுமல்ல, க.ரத்னத்தின் ‘கல்லும் மண்ணும்’, ரா.சு.நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’ நாவல்களைப் பற்றியும் ஞானி எழுதியிருக்கிறார். கட்சி மார்க்ஸியர்களிடமிருந்து விலகி நிற்பவர் என்பதால், ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குர’லை அவரால் துணிந்து பாராட்ட முடிந்தது. மார்க்ஸியத்தைத் தமிழ் மரபில் தரிசிப்பவர் என்பதாலோ என்னவோ ‘கொற்றவை’யைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடவும் செய்தார். ஞானி அளவுக்கு ஜெயமோகனைக் கொண்டாடிய விமர்சகர்கள் தமிழில் வேறு யாருமில்லை. ஜெயமோகனுக்கு ஏகப்பட்ட குருமார்கள் இருந்தாலும் இலக்கியப் பரப்பில் பெரும் அங்கீகாரத்தை முதலில் அளித்தவர் ஞானி.

இளம் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, இளம் ஆய்வாளர்களுக்கும்கூட ஞானியின் இல்லம் அறிவுநிழல் வழங்கும் ஆலமரம். 1988-ல் பார்வை பாதிக்கப்பட்ட பிறகு ஆசிரியர் பணியிலிருந்து விடுவித்துக்கொண்டார் எனினும் அவரது ஆய்வுப் பணியும் ஆசிரியர் பணியும் தொடரத்தான் செய்கின்றன. ஆய்வு மாணவர்களின் உதவியோடு ஆய்வுகளைத் தொடர்கிறார். அவர்களை வாசிக்கச் சொல்லிக் கேட்கிறார். ஆனால், அவர்களுக்கு வழிகாட்டுவதாக அவர் சொல்லிக்கொள்வதில்லை. அவர்களுடன் சேர்ந்து தானும் கற்றுக்கொள்வதாக அவர் கூறுகிறார். வாசிப்பில் நிறைவுகொள்ளாத ஒரு மாணவரின் அந்த உற்சாகம்தான் அவரது இந்த இடைவிடாத இயக்கத்தின் ஊக்கசக்தியாக இருக்க வேண்டும். தமிழோடு ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டதாலேயே மார்க்ஸியம் சார்ந்த அறிவுத் துறை விவாதங்களை அறிந்துகொள்ள நேர்ந்தது என்கிற ஞானியின் கூற்று, தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடமும்கூட. தமிழைப் படித்து, தமிழைப் படிப்பித்து வாழ்பவர்கள் மொழி எல்லைக்குள்ளேயே மூடுண்டுபோவதற்கு மொழித் தடைகளே முக்கியக் காரணமாகிவிடுகின்றன.

தனது படைப்புகளையும் கட்டுரைகளையும் அறிவுசார் சொத்தாகப் பார்ப்பவரல்ல ஞானி. வாழும் காலத்திலேயே தனது படைப்புகள் அனைத்தையும் அனைவரும் பயன்பெறும் வகையில் இணையதளத்தில் முழுமையாக வெளியிட்டிருக்கிறார். ‘kovaignani.org’ என்ற இணையதளத்தில் அவர் எழுதிய நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன. அரசியல் துறையிலும் இலக்கியத் துறையிலும் ஆர்வம் கொண்ட அனைவருக்குமான பாடநூல்கள் அவை.

ஞானி, தமிழ் செவ்வியல் இலக்கியங்களின் வெளிச்சத்தில் நவீன இலக்கியங்களைப் பார்த்தார். இலக்கியங்களை மார்க்ஸிய அழகியலின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார். இலக்கியங்களை மட்டுமல்ல, அரசியலையும்கூட அப்படித்தான் அணுகினார் என்பதுதான் அவரின் தனிச்சிறப்பு. தமிழ்த் தேசியத்தை மார்க்ஸிய விஞ்ஞானத்தின் துணையோடு விரித்தெடுத்த ஞானி, மார்க்ஸியத்தின் அடிப்படைகளைத் தமிழ் செவ்வியல் இலக்கியங்களிலும் எடுத்துக்காட்டினார். மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக அவர் முன்னிலைப்படுத்தியது தமிழறத்தைத்தான். பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட இன்றைய அனைத்து முக்கிய சிக்கல்களுக்கும் தமிழறத்தில் தீர்வு இருக்கிறது. அது மார்க்ஸியத்துக்கும் இணக்கமானது. தமிழ்த் தேசியர்கள் கவனம் கொள்ள வேண்டிய புள்ளி இது. ஞானி என்னும் ஐம்பதாண்டு கால தனிநபர் இயக்கம் சொல்லும் செய்தி வெகு எளிமையானது. தமிழறம்.

– செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

ஜூலை 1: கோவை ஞானியின் 85-வது பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x