Published : 05 Jul 2020 08:05 AM
Last Updated : 05 Jul 2020 08:05 AM

கோவை ஞானி: தமிழ்நேயர்!

சீனிவாச ராமாநுஜம்

மூத்த தோழர் ஞானியினுடைய தர்க்கத்தின் அடிப்படை மார்க்ஸியம். அது ஒரு மூலத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக வெளிப்படாமல் சமகாலப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கிறது. அதே சமயத்தில், மார்க்ஸியம் முன்வைக்கும் இறுதி நிலை என்பதன் மீது ஞானி நம்பிக்கை கொண்டிருக்கிறார். வேறு விதமாகச் சொல்வதென்றால், பல்வேறுபட்ட சிந்தனை மரபுகளை, குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய பல்வேறு போக்குகளை மார்க்ஸியச் சட்டகத்துக்குள்ளாகப் பொருத்தி அர்த்தப்படுத்த முயல்கிறார். நவீன சிந்தனையாளர்களான காந்தி, பெரியார், அம்பேத்கர், இராதாகிருஷ்ணன், ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ என்று அரசியல்ரீதியான, அரசியல் நீக்கம் பெற்ற, முரண்பட்ட சிந்தனைகளை ஒரு புள்ளியில் இணைத்துப்பார்க்க முயல்கிறார். இதில் இத்தகைய சிந்தனையாளர்களுக்கு இடையேயான வேறுபாடுகளை முதன்மைப்படுத்தாமல், இவர்கள் ஒன்றிணையும் புள்ளியை அடையாளம் காண முயல்கிறார். இது மிகக் கடினமான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இதனால்தான், இவரது மொழி சமகாலத் தமிழ் அறிவார்த்த உலகில் காணப்படும் மொழியிலிருந்து முற்றிலும் வேறானதாக இருக்கிறது.

ஞானி சமூகம் குறித்து, தத்துவம் குறித்து அவரது பார்வையை, கருத்துகளை முன்வைக்கும்போது இந்தச் சமூகத்துக்கு வெளியே, இந்த உலகத்துக்கு வெளியே, இந்தப் பிரபஞ்சத்துக்கு வெளியே அவரைப் பொருத்திக்கொள்ள மறுக்கிறார். இது மிக முக்கியமான ஒரு நிலைப்பாடு. புறவயமான அறிவு என்பது மனிதனை இந்த உலகுக்கு வெளியே பொருத்துகிறது என்றால், மனிதனை உலகத்தின் பகுதியாகப் பொருத்திப்பார்க்கும் பார்வை அகவயமான பார்வையாகிவிடுகிறது. முந்தையது அறிவியல்பூர்வமானதாகவும், பிந்தையது கற்பனாவாத லட்சியமாகவும் மாற்றப்படுகிறது. ஆனால், ஒரு தன்னிலையை உலகத்தின் பகுதியாகப் பொருத்திப்பார்க்கும் மொழி அறரீதியாகச் செழிப்பானதாக இருக்கிறது.

ஞானி, ‘நான்’ என்ற தன்னிலைக்குள் பிசாசு புகுந்துவிட்டது என்று சொல்கிறார். ‘நான்’ என்ற தன்னிலை திருக்குமாரனாக முடியும் என்றும் சொல்கிறார். ஒருவிதத்தில், இவரது முன்வைப்புகளை இவருக்குள்ளான உரையாடல்களாக நாம் வாசிக்க முடியும். அதாவது, இவரது உரையாடல்களை ஒரு தன்னிலைக்குள் புகுந்துகொண்ட பிசாசுக்கும், ஒரு தன்னிலையின் லட்சியமான திருக்குமாரனுக்கும் இடையேயான உரையாடல்களாய்ப் பார்க்க முடியும். இத்தகைய உரையாடல்கள் ஊடாகவே அவர் மதம், கடவுள், சமதர்மம், மதவாதம், மதநல்லிணக்கம், தமிழ் இலக்கியங்கள், தமிழ் ஆசான்கள், நவீனச் சிந்தனையாளர்கள் என்று மிகப் பரந்த தளத்தில் பல்வேறுபட்ட சிந்தனையாளர்களை இணைத்துப்பார்க்க முயல்கிறார். சமகாலச் சிந்தனையாளர்களிடம் நாம் காணக்கூடிய போதாமையை இவர் கடக்க முயல்கிறார். சமகாலக் களச்செயல்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் இந்தச் சமூகத்துக்கு வெளியே, இயற்கைக்கு வெளியே தங்களைப் பொருத்திக்கொள்கிறார்கள். ஒருவிதமான புறவய உண்மைகளை வெளிப்படுத்துவதாக பாவனை செய்கிறார்கள். ஒருவிதமான அரசியல் சரித்தன்மைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இந்தத் தொனி நிச்சயமாக ஞானியிடம் கிடையாது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு விஞ்ஞானி இயற்கையைப் புறவயத்தன்மையோடு அணுகுவதாக முன்வைக்கும் போலி பாவனையோடு சமூகத்தை, மனிதர்களை அணுகும் போக்கை ஞானியிடம் காண முடிவதில்லை. இதனால்தான், இவர் அரசியல் சரித்தன்மை என்பதற்குள் அவரைச் சுருக்கிக்கொள்ளாமல் இருக்கிறார். ஒருவிதத்தில், மரபான சிந்தனை முறை எவ்வாறு இந்த உலகத்தின், இயற்கையின், உடலின் ஓர்மையைச் சிதைக்காமல் இருந்ததோ அவ்வாறு ஒருவிதமான ஓர்மையை மீட்டெடுக்க முயல்கிறார். இவ்வுலகத்தின், சமூகத்தின், உடலின் ஓர்மை சிதைக்கப்படுவதைத்தான் நாம் நவீனச் சிந்தனையாகவும் முற்போக்குச் சிந்தனையாகவும் முன்வைத்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறோம்.

உலகத்தின், இயற்கையின் பகுதியாக ஒரு தன்னிலை தன்னைப் பொருத்திக்கொள்ளும்போது, புறவயத்தன்மை என்பது அர்த்தமிழந்துபோகிறது. அதாவது, வெளிப்பார்வைக்குப் பழமைவாதப் பண்பைக் கொண்டிருப்பதாகக் காட்சி தருகிறது. இத்தகைய போக்குக்கு ஆகச் சிறந்த உதாரணம் காந்தி. மேலும், ஞானி இந்தச் சமூகத்தின் போதாமைகளை இந்தச் சமூகம் சாத்தியப்படுத்திய மரபான சிந்தனை முறைகளை மார்க்ஸியத்தோடு இணைக்க முடியும் என்று பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார். இதனால்தான், கடந்த கால ஆசான்களைச் சமகாலப்படுத்த முயல்கிறார்.

ஞானியின் காந்தி குறித்த வாசிப்பு மிக முக்கியமானது. ‘காந்தியத்தை இனி எடுத்து நிலைநிறுத்தக்கூடிய எந்த இயக்கமும் இல்லை என்றாலும் காந்தியம் நம் பரிசீலனைக்கு உரியதாகிறது’ என்கிறார். மிக விரிவாக மார்க்ஸியப் பார்வையின் அடிப்படையில் காந்தியை விமர்சனபூர்வமாக அணுகுகிறார். பல மார்க்ஸியவாதிகளைப் போல் காந்தியைப் புறந்தள்ளவில்லை. மொத்தத்தில், ஞானியின் பார்வையை ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது, பல்வேறுபட்ட சிந்தனை முறைகளை ஒன்றிணைப்பதற்கான முனைப்பை, அதாவது வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தாமல் இணையும் புள்ளிகளை அடையாளம் காண்பதற்கான பெரும் முனைப்பைப் பார்க்க முடிகிறது. இந்தப் பண்பு மிக அரிதானது.

– சீனிவாச ராமாநுஜம், ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x