Last Updated : 04 Jul, 2020 07:58 AM

Published : 04 Jul 2020 07:58 AM
Last Updated : 04 Jul 2020 07:58 AM

அனுபவத்தின் ஞானத் தெறிப்பு

காஃப்காவின் நுண்மொழிகள்
தமிழில்: கே.கணேஷ்ராம்
நூல்வனம் வெளியீடு
ராமாபுரம், சென்னை-89.
தொடர்புக்கு: 91765 49991
விலை: ரூ.220

அதிகாரம் விளைவிக்கும் பதற்றம், அந்நியமாதல், இருப்பு சார்ந்த திகில் ஆகியவை காஃப்கா (1883-1924) புனைவுகளின் ஆதார அம்சங்கள். இவை கனவுத்தன்மையுடைய காட்சிகளாக அவர் கதைகளில் விரியும். வேறு எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத அங்கீகாரமாக அவருடைய எழுத்தின் சாராம்சம் சார்ந்த பெயரடையான ‘காஃப்காயெஸ்க்’ (Kafkaesque) ஆங்கில அகராதிகளில் 1939 முதல் இடம்பெறுகிறது. ‘குழப்பமூட்டும், அச்சுறுத்தும் சூழ்நிலையை, குறிப்பாக எவ்வித அர்த்தத்தையும் தராத சிக்கலான அதிகார அமைப்பின் விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளடங்கிய சூழ்நிலை’யைக் குறிக்கும் சொல் அது. ‘ஷேக்ஸ்பியரியன்’ (Shakespearean) என்ற பெயரடை அகராதிகளில் இல்லை; விமர்சன நூல்களில் மட்டுமே உண்டு.

காஃப்கா எழுத்தின் பொது குணத்துக்கு மாறானது இந்த ‘காஃப்காவின் நுண்மொழிகள்’ நூல். காசநோயின் தீவிரம் குறைய தன் தங்கை ஓட்லாவோடு ஒரு பண்ணையில் செப்டம்பர் 1917 முதல் ஏப்ரல் 1918 வரை தங்கியிருந்தபோது, காஃப்கா எழுதிய 109 நுண்மொழிகளின் (Aphorisms) தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல். அந்தச் சில மாதங்கள் அவர் வாழ்வின் மிகக் களிப்பான காலம். தொல்லைக்கு ஆளாக்கிய அப்பா, வேலை, காதலிகள் இல்லாத நாட்கள். ‘மகிழ்ச்சியின் பெண் தெய்வம் அவரை நோக்கிப் பாய்ந்து வந்த’ மாதங்கள். கீர்க்ககார்டின் இருத்தலியல் தத்துவம் மனதில் நிறைந்திருந்தது.

அனுபவத்தின் ஞானத் தெறிப்பு மணிச் சுருக்கமாக, பூடகமான மொழியில் வெளியாவதே நுண்மொழி. மூதுரையின், நீதிக் கதையின் சாயல்களும் இருக்கும். இறையியல் சார்ந்து காஃப்கா பேசுவது இந்த நூலில்தான். ‘நம் அந்தரங்கமான கடவுளை நம்புவதைவிட வேறு மகிழ்ச்சி உண்டா’ என்று ஒரு நுண்மொழி வினவுகிறது.

ஒற்றை வாக்கியம், ஒற்றைப் படிமச் சித்தரிப்பு, ஓரிரு பத்திகள் நீளும் கதையாடல் என்பவை இவற்றின் வடிவங்கள். பாவம், தீமை, தனிமனித மீட்சி, சொர்க்கம் போன்றவை அதிகம் பேசப்படுகின்றன.

/நாம் பாவிகள். ஏனென்றால், அறிவின் விருட்சத்திலிருந்து புசித்ததால் மட்டும் அன்று. ஜீவ விருட்சத்தினின்று இன்னும் புசிக்காமல் இருப்பதாலும்தான்./

/தீமையைச் செய்யுமாறு நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. நன்மை என்பது ஏற்கெனவே நம்முள் உள்ளது./

/நன்மை என்பது ஒருவகையில் ஆறுதலற்றது./

படிமச் செறிவுடன் வெளிப்படும் ஒரு நுண்மொழி: கூண்டு ஒன்று பறவையைத் தேடித் திரிந்தது.

சொர்க்கத்தில் ஜீவிக்கவே நாம் படைக்கப்பட்டோம். ஆனாலும், இன்னும் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் வேட்டை நாய்களின் சூறையிலிருந்து இரை விலங்கான நாம் ‘எத்தகைய வேகத்தில் காடுகளினூடே ஓடினாலும் தப்பிக்க இயலாது.’ இறுதி நுண்மொழி, நூலின் சுருக்கத் தொகுப்பு: ‘…நீ உன் வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டியதில்லை. உன் மேசை முன் அமர்ந்து சற்றே கவனி. கவனிக்கக்கூட வேண்டாம். சற்றே பொறுத்திரு. பொறுத்திருக்கவும் வேண்டாம். நிச்சலனமான தனிமையில் காத்திரு. உலகம் முழுவதும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள உன்னிடம் ஒப்படைத்துக்கொள்ளும். அதற்கு வேறெதுவும் செய்யத் தெரியாது. பரவசத்தோடு உனக்கு முன் உருகி நெளியும்.’ நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கே.கணேஷ்ராம் பொறுப்புடன் மொழிபெயர்த்துள்ளார்.

- ஆர்.சிவகுமார், ‘வசைமண்’ உள்ளிட்ட நாவல்களின் மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sivaranjan51@yahoo.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x