Published : 04 Jul 2020 07:51 am

Updated : 04 Jul 2020 07:51 am

 

Published : 04 Jul 2020 07:51 AM
Last Updated : 04 Jul 2020 07:51 AM

மதுரசுந்தரமான பஷீர்!

vaikom-muhammad-basheer

ஜீவன் பென்னி

பஷீர் நாவல்கள்
வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: குளச்சல் யூசுப், சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
தொடர்புக்கு:
96777 78863
விலை: ரூ.575

தனிமனிதரின் உலகம் மிகப் பெரிய வெளிச்சங்களைத் தன்னகத்தே மிக ஆழத்தில் வைத்திருக்கிறது. ஆழத்தில் படிந்திருக்கும் அதிசயங்களைத் திறந்து காண்பித்தவர் பஷீர். எண்ணங்களிலும் வாழ்விலும் என்றுமே குறைந்திடாத பேரன்புகளைக் குழந்தைமையின் மாசில்லா வார்த்தைகளில் இலக்கியமாக்கியவர். வெவ்வேறு தருணங்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பஷீரின் எட்டு நாவல்களையும் தொகுத்து ‘காலச்சுவடு’ வெளியிட்டிருப்பது தமிழ் வாசகர்களுக்கான
ஒரு அழகிய பரிசு.


பால்யகால சகி (1944)

குழந்தைப் பருவ ஞாபகங்களில் படர்ந்திருக்கும் நேசங்களைப் பின்னணியாகக் கொண்ட பரிபூரணக் காதல் கதை இது. மஜீதுக்கும் சுகறாவுக்கும் இடையிலான குழந்தைப் பருவ நட்பு, விளையாட்டு, சண்டைகளிலிருந்து தொடங்கி பிறகு தாபத்தில் காதலாக மலர்ந்து, குடும்ப வறுமைகளால் பிரிவின் துயரில் ஆழமாகக் கரைந்துபோக வைத்திடும் கதை இது. குழந்தைகளின் எளிமையான விளையாட்டுகளையும் கோபங்களையும் சண்டைகளையும் மிகப் பிரமாதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் பஷீர்.

சப்தங்கள் (1947)

பஷீரிடம் வலிந்து பேசும் தத்துவங்கள், போதனைகள் எதுவும் இருந்ததில்லை. அனுபவத்தின் வழியே கண்டடைந்த கொஞ்சம் கதைகளும் சொற்களும் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ஒரு நுட்பத்தின் பிரகாசத்தில் பளிச்சிடுகின்றன. கதாசிரியருக்கும் பட்டாளத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கதாபாத்திரத்துக்குமான உரையாடலாக, வெட்டி வெட்டி கதைசொல்லும் பாணியிலும் கொஞ்சம் நினைவுகளின் வழியிலும் சொல்லப்பட்டிருக்கும் நாவல் இது. கடவுள் என்பதை, பிரபஞ்சத்தின் தொடக்கம் என்பதை, நட்சத்திரங்கள், பூமி, உயிரினங்களின் படைப்புகளை, காதலை, யுத்த அரசியலை, மதக் கலவரங்களை, ஆண்/பெண் விலைமாதர்களின் நுகர்வுகளை இந்நாவலில் கேள்வி பதிலுமான கதை அமைப்பில் காண்பித்திருப்பார்.

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது (1951)

மரபுகள், மூடநம்பிக்கைகள், தற்பெருமைகள், குடும்பச் செல்வங்களின் அங்கலாய்ப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் காதல் கலந்த கதையாக விரிகிறது இந்நாவல். ஒரு காலத்தில் இஸ்லாத்துக்குள் நிலவியிருந்த மூடநம்பிக்கைகள், அது உருவாக்கும் காரணங்களற்ற பயங்களை மிகத் தெளிவான வகைமைக்குள் கொண்டுவந்து, அதற்கான பதில்களையும் அந்த மனங்களின் புரிதல்களையும் ஜன்னல் வழியான வெளிச்சம்போலப் பாய்ச்சுகிறார்.

மூணு சீட்டு விளையாட்டுக்காரனின் மகள் (1951)

ஒற்றைக்கண்ணன் போக்கர், அவனின் தங்கை ஸைனபா, மடையன் முத்தபா இவர்களைச் சுற்றி இன்னும் சில கதாபாத்திரங்கள் என பஷீர் தனக்கேயான மொழியில் சித்தரித்துத் தொடங்குகிறார். இவர்கள் இணைந்தும் பிரிந்தும் மறைந்தும் இக்கதையில் உலாவருகின்றனர். போக்கர் மூணு சீட்டில் எல்லோரையும் ஏமாற்றுபவன், முத்தபா சுமாரான ஜேப்படித் திருடன், ஸைனபாவும் அவளுக்கான வழியில் திருடுகிறாள். இவையெல்லாம் தொழில்முறையிலான ஒரு தனித்துவமான தன்மையாகவே இதில் சொல்லப்படுகின்றன. அழகி ஸைனபாவை மடையன் முத்தபா கல்யாணம் செய்துகொள்வதற்கான பந்தயம் ஒன்றில் எவ்வாறு வென்று திருந்துகிறான் என்ற முடிச்சின் சுவாரஸ்யத்தை மிக நேர்த்தியாகக் கடைசி வரை கொண்டுவருகிறார்.

ஆனைவாரியும் பொன்குருசும் (1953)

சமத்துவப் பார்வையுடையவர்களான ஆனைவாரி ராமன்நாயரையும் பொன்குருசு தோமாவையும் தோழர்கள் என அறிமுகப்படுத்துகிறார் பஷீர். இவர்களின் திருட்டுகளும் சச்சரவுகளும் ஸைனபா மற்றும் மடையன் முத்தபாவின் காதலும் குறித்த பஷீரின் விவரணைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவை. அதிலும் சிறிய சிற்றுண்டியின் கடன் பலகை சார்ந்த உரையாடல்களையும், சாணம் திருடுவதான சம்பவம் குறித்த அங்கலாய்ப்புகளையும் சிரிக்காமல் ஒருவராலும் வாசித்திட முடியாது. வெறும் தோமா தங்கச் சிலுவையைத் திருடுவதும், அதன் பிறகு அது குறித்து மிக முக்கியமான கேள்வியெழுப்புவதும், அதன் மூலம் சிலருக்கு நன்மைகள் செய்வதும் என பொன்குருசு தோமாவாக மாறுகிறார். வெறும் ராமன்நாயர் ஆனைவாரி ராமன்நாயர் ஆகிறார். இவர்களுடைய திருட்டுக் கதைகளை மிக சுவாரஸ்யமாகச் சொல்கிறார் பஷீர்.

பாத்துமாவின் ஆடு (1959)

நீண்ட அலைச்சலுக்குப் பிறகு கிராமத்துக்குத் திரும்பி, தனது பெரிய குடும்பத்துடன் வாழ்ந்திருந்த நாட்களின் ஒரு பகுதியை முழுக்க முழுக்க பஷீரின் பார்வையிலிருந்து மட்டுமே சொல்லப்படுவதான சுயசரிதை நாவல் இது. கோழிகள், காகங்கள், பூனைகள், ஆடுகள், செடிகள், மரங்கள், பழங்கள், நிலம், வீடு, வீட்டின் சகல உறுப்பினர்கள் என எல்லாவற்றையும் பேசுகிறார். அவரைச் சுற்றியிருக்கும் எல்லோருக்கும் எப்போதும் ஒரு தேவை இருந்துகொண்டே இருக்கிறது. எல்லோரும் அவர் முன் வந்து அந்தத் தேவைக்கென நின்றுகொண்டே இருக்கிறார்கள். பாத்துமாவின் ஆடும்கூட எல்லாவற்றையும் தின்கிறது. இருந்தபோதும் அதன் வயிறு நிறைந்தபாடில்லை. அந்த ஆடுதான் அங்கிருந்த எல்லோரின் பெரும் பசிக்கான, ஒருபோதும் நிரம்பிடாத பெரும் தேவைகளுக்கான குறியீடு. உறவுகளின் மன நெருடல்களினாலான சம்பவங்களைப் படித்து முடிக்கையில் பெரும் சோகம் நம்மை அப்பிக்கொள்கிறது.

மதில்கள் (1965)

பஷீரின் எழுத்துக்காக – ராஜதுரோக வழக்குக்காக – சிறை சென்றபோது நிகழ்ந்த கதை இது. மதில்கள் ஒரு பெரிய உலகின் சுதந்திர வெளியையும், சிறு சிறு தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலை வெளியையும் திடமாகப் பிரிக்கிறது. பெண்கள் பகுதி சிறையை மறைத்து நின்ற பெரிய மதிலின் இரண்டு புறங்களிலிருந்து பஷீருக்கும் நாராயணிக்கும் இடையே முகம் பார்க்காமல் தொடர்கிறது பிரியமான காதல் உரையாடல்கள். அந்த மதிலில் இருந்த ஒரு சிறு ஓட்டையும் சிமென்ட்டால் அடைக்கப்பட்டுவிடுகிறது. இப்போது அந்த மதில் ஆன்மா நிறைந்த ஒன்றாக மாறிவிடுகிறது. ஏக்கங்களால் நிறைந்திருக்கும் அந்த மனங்கள் சந்திப்பதற்காகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது, பஷீருக்கு விடுதலை உத்தரவு கிடைத்துவிடுகிறது. மனம் கனத்துப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, மிகப் பெரிய சிறையில் – சுதந்திர உலகில் அசைவற்று நிற்கிறார்.

காதல் கடிதம் (1943)

கேசவன் நாயருக்கும் சாராம்மாவுக்கும் இடையேயான மதுரசுந்தரமான காதல் கதை இது. எல்லா விதத்திலும் விவரமான சாரம்மா, கேசவனின் காதலைக் கண்டுகொள்ளாததுபோல் நடிக்கிறாள். மேலும், அவனது முதல் காதல் கடிதத்தை நிராகரித்துத் தூக்கியெறிகிறாள். தினமும் அவனைச் சீண்டுகிறாள். கேசவனோ அவளின் உள்மனதையும் காதலையும் அறியாதவனாய் இருக்கிறான். மிக இயல்பாக கேசவனின் மீதான சாராம்மாவின் காதலை மெல்லிய நூல்போல் சேர்த்துக் கடத்திவிடுகிறார் பஷீர்.
வைக்கம் முகம்மது பஷீரின் நுட்பமான எழுத்துகளையும், இழையோடும் நகைச்சுவையையும், வட்டாரச் சொற்களையும், பண்பாட்டுப் பின்புலங்களையும் பார்த்துப் பார்த்துச் செறிவாக மொழிபெயர்த்திருக்கிறார்கள் குளச்சல் யூசுப், சுகுமாரன். இந்தியப் புனைவெழுத்துகளில் தனித்தன்மை கொண்ட ஆளுமை பஷீர். ‘ஒண்ணும் ஒண்ணும் எத்தனைடா?’ என்பதற்கு, ‘கொஞ்சம் பெரிய ஒண்ணு’ என்று சொல்லும் பஷீரின் எளிமையான உலகில் நுழைந்துகொள்வதும், அந்த நெகிழ்வான மனதைப் புரிந்துகொள்வதும் மதுரசுந்தரமான அனுபவம்!

– ஜீவன் பென்னி, கவிஞர்.

தொடர்புக்கு: jeevanbenniepoems@gmail.com

ஜூலை 5: பஷீர் நினைவுநாள்Vaikom muhammad basheerமதுரசுந்தரமான பஷீர்பஷீர் நாவல்கள்வைக்கம் முகம்மது பஷீர்ஜீவன் பென்னி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x