

பொதுவாக, சிறுகதையைக் காட்டிலும் ஒரு எழுத்தாளருக்கு நாவல்தான் பரந்த களத்தை அமைத்துக்கொடுக்கும். தி.ஜானகிராமன் விஷயத்தில் இது நேரெதிர். சிறுகதைகளில்தான் பல்வேறு கருப்பொருள்களையும் உணர்வுகளையும் அவர் கட்டியாண்டார்.
சிற்சில கதைகளில் கூறல் முறையில் தி.ஜா. பரிசோதனை முயற்சிகள் செய்திருந்தாலும் அவர் ஒரு மரபான கதைசொல்லியே. ‘நாடகத்தின் முதல் அங்கத்தில் ஒரு துப்பாக்கி காட்டப்பட்டால், நாடகம் நிறைவுக்கு வரும் முன்பு அது வெடித்தாக வேண்டும்’ என்ற ஆன்டன் செகாவின் இலக்கணத்தையே தி.ஜா. பெரிதும் தனது சிறுகதைகளில் பின்பற்றியிருக்கிறார். ஒரு துரோகம், வஞ்சம், ஏமாற்று வேலை, குற்றம், கொடுமையை அவரது கதை பேசும் என்றால், அந்தக் கதை முடிவதற்குள் அதற்கான பரிகாரம் கிடைத்துவிடும். அது பழிவாங்குதல், தண்டனை போன்றவற்றின் மூலம் ஈடுகட்டாமல் பெரிதும் மன்னிப்பு, குற்றவுணர்வு போன்றவற்றின் மூலம் ஈடுகட்டப்படுவதுதான் தி.ஜா. கதைகளின் சிறப்பு. இதற்கு ‘கடன் தீர்ந்தது’, ‘கங்கா ஸ்நானம்’, ‘கண்டாமணி’ போன்ற கதைகள் சிறந்த உதாரணம். ‘பாயசம்’ கதையில்கூட சாமநாது தன் வஞ்சத்தைக் கதையின் இறுதியில் வெளிப்படுத்தினாலும் உடனேயே அவருக்குக் குற்றவுணர்வு ஏற்படுத்தும் முள் ஒன்றும் அவர் மனதில் செருகப்படுகிறது. இது போன்ற மனித மனத்தின் அடிப்படை உணர்வுகள் நிகழ்த்தும் விளையாட்டைத் தன்னுடைய நெகிழ்வான, மொழியழகு மிக்க நடையால் கதை என்ற பெயரில் தி.ஜா. செதுக்கித் தருபவைதான் அவரது சிறுகதைகள்.
தி.ஜா.வின் முக்கியமான, ஆனால் அதிகம் பேசப்படாத கதை ‘இசைப் பயிற்சி’. சென்னையிலெல்லாம் பலருக்கும் சங்கீதம் சொல்லிக்கொடுத்துவிட்டுத் திருப்தியடையாமல் கிராமத்து அக்கிரகாரத்தில் வந்து குடியிருக்கும் பாகவதர் மல்லிக்கு சங்கீதம் சொல்லிக்கொடுக்க எந்த சிஷ்யரும் கிடைக்கவில்லை என்ற குறை உண்டு. தற்செயலாக ஒரு இளைஞருக்கு நல்ல குரல் வளம் இருப்பதை மல்லி கண்டடைகிறார். அவர் காலனியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இளைஞர். அந்த இளைஞனைத் தன் வீட்டுக் கொல்லைக்கு வரச் சொல்கிறார். தனக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே 40 அடி இடைவெளி விட்டு சங்கீதம் சொல்லித் தருகிறார். ஒரு பக்கத்தில் சேரி மக்களும், இன்னொரு பக்கத்தில் அக்கிரகாரவாசிகளும் இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறார்கள். “மீசையிலே படாம கூழும் குடிச்சாச்சு” என்று அக்கிரகாரத்தில் ஒருவர் சொல்ல, “நாளைக்கு உள்ள வச்சிண்டு பாடம் சொல்றேனா இல்லியா பாருங்கடா, ஒழிச மக்களா” என்று சொல்லிவிட்டு சுருதிப் பெட்டியைத் தூக்கியெறிகிறார் மல்லி. சக மனிதர் மீதான கருணை, இரக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும்போது ஒருவர் தன்னை மேலேயும், இரக்கத்துக்குப் பாத்திரமானவர்களைக் கீழேயும் வைத்துப் பார்க்கும் மனநிலையை இந்தக் கதை உடைக்கிறது. இரக்கம் (சிம்பதி) அல்ல, பரிவுணர்வே (எம்பதி) சாதிய மனநிலையை அகற்ற உதவும் என்பதை உணர்த்தும் கதை இது. நுட்பமாகக் கவனித்தால், கேலி பேசிய ஊராரைவிட சங்கீதம் கற்றுத்தரும் மல்லிதான் இந்தக் கதையின் வில்லன் என்பது புலப்படும். அநேகமாக தி.ஜா.வின் சமகால எழுத்தாளர்கள் யாரும் இதுபோன்ற சிறுகதை எழுதியதில்லை.
சிறுகதையின் பக்க அளவும் கால அளவும் குறைவு என்பதால் தி.ஜா.வின் நாவல் அளவுக்கு அவரது சிறுகதைகளில் வர்ணனை இடம்பெறுவதில்லை. எனினும் சில வரிகளில் ஒருவரின் தோற்றத்தை, குணநலனைச் சொல்லிவிடும் வித்தை அவருக்கு சிறுகதைகளில் கைகூடியிருக்கிறது. கதையை நடத்திச் செல்வதில் உரையாடல்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவரது நாவல்களும் சரி, சிறுகதைகளும் சரி; அலாதியான வாசிப்பனுபவத்தைத் தருபவை. மேலும் பல நூற்றாண்டுகளுக்கு அந்த அனுபவம் தொடரும் என்பது உறுதி!
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in