Published : 28 Jun 2020 07:57 AM
Last Updated : 28 Jun 2020 07:57 AM

தி.ஜா. : மனத்தின் நிர்வாணத்தை எழுதியவர்

கல்யாணராமன்

இளம் வயதில் தி.ஜானகிராமனைப் படிக்கும் வாய்ப்பு நேர்ந்ததைப் பெறற்கரிய பேறாகவே நினைக்கிறேன். முதலில் அந்த எழுத்து, வாசிப்பவர் அனைவரையும் தொந்தரவுபடுத்துகிறது என்பதைத்தான் அதன் தனித்துவமாகக் கவனப்படுத்த வேண்டும். அந்தத் தொந்தரவு, நம் மரபில் பாலுணர்வுக்கும் சுதந்திர மணத் தேர்வுக்கும் தரப்பட்டுள்ள இடம் பற்றியது. நம் வாழ்வில் பாலியலை நாம் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் அல்லது பெண்களை ஆண்களும், ஆண்களைப் பெண்களும் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நாணுமாறு நமக்கு தி.ஜா. காட்டுகிறார். என் தாய்/தந்தை இப்படியிருந்தால், என் மனைவி/கணவன் இப்படியிருந்தால், என் மகள்/மகன் இப்படியிருந்தால் எனத் ‘தான் கலந்து’ வாசிப்பவர்களைத் தொந்தரவுபடுத்துகிறது தி.ஜா.வின் எழுத்து.

பண்பாட்டுப் போர்வைக்குள் ஊடுருவிப் பார்க்கும்போது மிஞ்சுவது என்ன என்ற வினாவை தி.ஜா. வலிமையாக எழுப்புகிறார். மரபு எவ்வளவு வலிமையானதோ, அதைவிட வலிமையானது இயல்புணர்வு என்கிறார். பெண்ணுக்கான கெளரவத்தையே தம் படைப்புகளில் அவர் கோரினார். ஆண்-பெண் என்ற இடத்தைக் கடந்து, உயிர் என்ற இடத்தை நோக்கி அவர் நகர்ந்தார். குடும்பமும் இயல்பு. மீறலும் இயல்பு. குடும்பத்திலிருந்தபடியே மீறுவதும், மீறலைச் செய்தபடியே குடும்பத்துக்குள் மீள்வதும் என இரண்டுக்குமே ஜானகிராமனிடம் இடமுண்டு. இவற்றில் எந்த ஒன்றையும் புனிதப்படுத்தாதவர் அவர். நிஜமான அன்பைத் தேடியவர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற லட்சிய நிலையையும், வேண்டும் காதல் கிடைக்காதபோது அதைத் தேடியலைவதையும் சமமாகப் பாவித்தவர். மனிதர்களும் அவர்களின் உணர்வுகளும் இப்படிப்பட்டவைதான் என்பதே அவரது கடைசிப் புரிதல்.

பாலியல் பிரச்சினைகளையும் உறவுமீறல்களையும் எழுதியவராக தி.ஜா.வைக் காண்பதும் மதிப்பிடுவதும் மேலோட்டமானவை; மிகைப்படுத்தப்பட்டவை. அடிப்படை யான மானுட உணர்வுகளின் எல்லையின்மையைத் தன் படைப்புகளில் பிடிக்க முனைந்தவராக தி.ஜா.வைத் தடமறிவது இன்னும் ஆழமுடையதாகும். அனுசுயா - அம்மணி; பாலி - பட்டு; யமுனா - ருக்கு; அமிர்தம் - பார்வதி; தங்கம்மா - டொக்கி; புவனா - மரகதம்; அலங்காரம் - பங்கஜம்; இந்து - குஞ்சம்மா; செல்லம் - ரங்கமணி; சந்திரா - செங்கம்மா எனப் பல்வகைப் பெண்களைச் சாயலொருமையுடனும் கூடவே பாவவேறுபாட்டுடனும் புனைந்தார். பாபு - அப்பு; ரங்கண்ணா - கோபாலி; ராமையா - அனந்தசாமி; சபேச முதலியார் - தங்கராஜன்; ரங்கன் - பழனி; நடேசன் - ப்ரூஸ்; சட்டநாதன் - காமேச்வரன்; ராஜா - பட்டாபி; தண்டபாணி - துரை; கோபாலசாமி - செல்லப்பா எனப் பல்வகை ஆண்களையும் சுழல்கோணப் பிம்பங்களாகக் கலைத்தடுக்கினார்.

கடுமையான விமர்சனங்களைத் தாண்டி சகல தரப்பினராலும் விரும்பிப் படிக்கப்பட்டுக் காலத்தால் அங்கீகரிக்கப்பட்டவராக தி.ஜா. திகழ்வதற்கு, மனித மனத்தின் நிர்வாணத்தை எழுதிவிட அவர் முயன்றதுதான் காரணம். இதில் அவருக்கு முழு வெற்றி கிடைத்ததா என்பதைவிடப் புதையுணர்வுகள் மீது பேரொளி பாய்ச்சினார் என்பதே முக்கியம்.

- கல்யாணராமன், ‘ஆரஞ்சாயணம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: sirisharam73@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x