

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் இருட்டுக்குள் கிடந்த தமிழர்க்கு வைகறைப் பொழுதானது. மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம், நெல்லையில் நூற்பதிப்புக் கழகம், சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் எனத் துறைதோறும் தமிழ் வளர்க்கும் சூழலுக்கு வித்துகள் இடப்பட்டன.
மறைமலையடிகளின் நாட்குறிப்புகளிலிருந்து 1917-லேயே அவருக்கும் நெல்லைச் சகோதரர்களுக்கும் இடையிலான அன்புப் பிணைப்பு வெளிப்படுகிறது. அதன் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்தே திருவரங்கம் மறைமலையடிகளின் மருமகனாகிறார். அடிகளின் புத்தங்களை விற்பதற்காகவே சென்னையில் புத்தகக் கடை திறக்கும் அந்தச் சகோதரர்கள் 1920-ல் நண்பர்களுடன் சேர்ந்து தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் தொடங்குகின்றனர். பதிப்புத் துறையில் இந்தியாவிலேயே முதல் கூட்டுப் பங்கு நிறுவனம் என்றாலும் கழகத்தின் நோக்கம் வணிகம் அல்ல. பங்குதாரர்களுக்கு 6%-க்கும் மேல் ஊதியம் கொடுப்பதில்லை என்று தொடக்கத்திலேயே உறுதியாக முடிவெடுக்கப்பட்டது. கழகத்தின் வருமானத்தில் பாதி அறப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு, அத்தொகையில் தென்னிந்திய தமிழ்ச் சங்கம், சைவ சித்தாந்த சங்கப் பணிகள் நடந்துவருகின்றன. சென்னையிலுள்ள மறைமலையடிகள் நூலகம் சைவ சித்தாந்த சங்கத்தின் சார்பில் செயல்பட்டுவருகிறது.
மறைமலையடிகள், நடுக்காவேரி நாட்டார், மா.இராசமாணிக்கனார், கா.அப்பாதுரையார், மு.வரதராசன், வ.சு.செங்கல்வராயபிள்ளை என்று இருபதாம் நூற்றாண்டின் தமிழறிஞர்களைப் பற்றி பேசுகிறபோதெல்லாம் கழகத்தின் நினைவும் வந்துசேர்வது தவிர்க்கவியலாதது. இந்தத் தமிழறிஞர்களின் நூல்களைக் கழகம் பதிப்பிக்க, அவர்களின் கட்டுரைகளைக் கழகத்தின் ‘செந்தமிழ்ச் செல்வி’ மாத இதழ் தொடர்ந்து வெளியிட்டுவந்தது. 1923-ல் வ.சுப்பையாவால் தொடங்கப்பட்ட ‘செல்வி’யின் ஆசிரியர் குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும் பங்குவகித்தனர். வ.சுப்பையாவும் அவ்விதழில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வேள்பாரியைப் பற்றி அவர் ‘செல்வி’யில் எழுதிய கட்டுரையொன்று ‘கலைபயில் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் கழகம் வெளியிட்ட தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
ஆராய்ச்சி இதழான ‘செல்வி’, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் காகிதத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது. இதழ்களை வெள்ளைக் காகிதத்தில் அச்சிடக் கூடாது என்ற கட்டுப்பாடு விதித்தது அன்றைய அரசு. தரம் குறைவான காகிதத்தில் இதழை வெளியிடக் கூடாது என்று முடிவெடுத்து 1944-47 ஆண்டுகளில் ‘செல்வி’ நிறுத்திவைக்கப்பட்டது. உள்ளடக்கத்தில் மட்டுமின்றி வெளியீட்டிலும் அந்தத் தரத்தைப் பின்பற்றியதற்கு இது ஒரு சான்று. இன்றைய ஆராய்ச்சி இதழ்களைப் போல கட்டுரைகளின் பதிப்புரிமை அதை எழுதியவர்களையே சாரும் என்ற குறிப்பை அன்றே வெளியிட்ட முன்னோடி ஆய்விதழ் ‘செல்வி’.
புலவர் பட்டத்துக்குப் படித்த அன்றைய தமிழ் மாணவர்களுக்குக் கழக வெளியீடுகளே பாடநூல்களாக இருந்தன. தமிழ் மாணவர்கள் சங்க இலக்கியங்களுக்கான எளிய உரை நூல்களைக் கையில் வைத்திருப்பதையே மதிப்புக்குறைவாக எண்ணிய காலம் அது. சைவமும் தமிழும் வளர்ப்பதே கழகத்தின் நோக்கம் என்றாலும், கிறிஸ்தவம், இஸ்லாமியம் பற்றிய புத்தகங்களுக்கும் ‘செல்வி’யில் மதிப்புரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கழகத்தின் முன்னெடுப்புகளும் பழந்தமிழ் இலக்கியத்தைத் தாண்டி அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாய் அமைந்தன. பல்லாயிரக்கணக்கானவர்கள் சட்டம் படித்து வழக்கறிஞர்களாய் இருந்துவரும் தமிழ்நாட்டில் அதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றிய சட்டவியல் குறித்து தமிழில் பரிந்துரைக்கத்தக்க ஒரே புத்தகம் மா.சண்முகசுப்பிரமணியம் எழுதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1984-ல் பதிப்பித்த ‘சட்ட இயல்’ மட்டுமே. 1962-ல் கழகம் வெளியிட்ட ‘சட்டவியல்’ நூலின் சற்றே விரிவுபடுத்தப்பட்ட வடிவம்தான் அது.
இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைப் பற்றி அறிஞர்களிடத்தில் கட்டுரைகளைப் பெற்று நூலாக வெளியிடும் வழக்கத்தையும் கழகம் தொடங்கிவைத்தது. ஜவாஹர்லால் நேரு குறித்து ‘இந்தியப் பேரொளி’ என்ற தலைப்பிலும், அண்ணாவைக் குறித்து ‘தமிழ்ப் பேரொளி’ என்ற தலைப்பிலும் நூல்களை வெளியிட்டது. பெரியாரின் நினைவாகவும் அவ்வாறு ஒரு நூல் தயாரானதாகவும், ஆனால், அது வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார் ந.சுப்பு ரெட்டியார். அண்ணாவைப் பற்றிய நூல் மட்டுமல்ல, நீதிக் கட்சித் தலைவர் தியாகராயரைப் பற்றிய முழுமையான வரலாற்று நூலையும் கழகம்தான் வெளியிட்டது. திராவிடர் கழகம் தற்போது வெளியிட்டுவருவது அதன் மறுபதிப்பே.
திராவிடர் கழகத்துக்கும் நூற்பதிப்புக் கழகத்துக்கும் இடையிலான நட்புறவு குறிப்பிடத்தக்க ஒன்று. கழகத்தை நிறுவிய திருவரங்கம் பிள்ளையின் இணையரும் மறைமலையடிகளின் மகளுமான நீலாம்பிகை அம்மையார் தலைமையில் 1938-ல் நடந்த மாநாட்டில்தான் பெரியார் என்ற பட்டமே அவருக்கு வழங்கப்பட்டது. பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தைக் கடுமையாக வெறுத்த மறைமலையடிகள் பின்பு அவரின் நண்பரானார். அடிகளின் பாடநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் விலக்கிக்கொள்ளப்பட்டபோது பெரியார் அதைக் கண்டித்தார். தனித்தமிழ் சைவத்தில் நிலைகொண்டது, திராவிட இயக்கம் கடவுள்மறுப்பை நோக்கி நகர்ந்தது என்றாலும் பண்பாட்டுத் துறையில் தனித்தமிழ் இயக்கமும் அரசியல் துறையில் திராவிட இயக்கமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகவே இயங்கின. கழகத்தின் நூற்றாண்டு விழா அதன் பங்களிப்புகளுக்காக அரசியல் அரங்கிலும் கொண்டாடப்பட வேண்டியது.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in