Published : 27 Jun 2020 07:24 AM
Last Updated : 27 Jun 2020 07:24 AM

வீடுதோறும் திருக்குறளைக் கொண்டுசேர்த்துவிட்டோம்!- சுப்பையா முத்துக்குமாரசாமி பேட்டி

சென்ற நூற்றாண்டில் தமிழ் மொழியும் தமிழ்ச் சமூகமும் அடைந்த நவீனத்துக்கு அறிவுப் பங்களிப்பைச் செய்த முதன்மையான பதிப்பகங்களில் ஒன்று திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ் இலக்கியம், சைவம், அறிவியல், வாழ்வியல் எனப் பல புலங்களில் 2,000 நூல்களுக்கு மேல் வெளியீட்டைக் கண்ட இந்தப் பதிப்பகத்தின் தற்போதைய மேலாண்மை இயக்குநர் சுப்பையா முத்துக்குமாரசாமியிடம் பேசினேன். 1999-லிருந்து பதிப்பகத்தின் செயல்பாடுகளைக் கவனித்துவரும் இவர், சென்னைப் புத்தகக் கண்காட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் முக்கியமான பணிகளை ஆற்றியுள்ளவர்.

நூற்றாண்டு கண்ட உங்கள் பதிப்பகத்தின் தலையாய வெளியீடுகள் என்று எதைச் சொல்வீர்கள்?

கழகத் தமிழ் அகராதி, கழகத் தமிழ் இலக்கணம், கழகத் தமிழ் கையகராதி, திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ் உரைகளைச் சொல்வேன். தமிழகம் முழுக்கப் பெரும்பாலான வீடுகளில் காணப்படும் மு.வரதராசன் உரை எழுதிய திருக்குறள் உரை, இதுவரை 200 பதிப்புகள் கண்டிருக்கிறது. அதற்கு முன்னர் அறிஞர்கள் மட்டுமே படிக்கும்படி பரிமேலழகர் உரை மட்டுமே கிடைத்துவந்தது. 1948-ல் திருக்குறளுக்கு மாநாடு ஒன்றை நடத்தியபோது, திருக்குறளுக்கு எளிமையான உரை வேண்டுமென்று பெரியார் கோரிக்கை வைத்தார். அதனால் உந்துதல் பெற்று, என் தாத்தா சுப்பையா பிள்ளை, மு.வரதராசனை வேண்டி எழுதச் சொன்னதுதான் திருக்குறள் தெளிவுரை. வீடுதோறும் திருக்குறளைக் கொண்டுசேர்த்துவிட்டோம்.

சைவம், தமிழ் இலக்கிய நூல்களுக்கு அப்பாற்பட்டு உங்கள் பதிப்பகம் செயல்பட்ட புலங்களைச் சொல்லுங்கள்?

இந்தியச் சிந்தனை மரபோடு உறவுள்ள மேற்கத்தியத் தத்துவவியலாளர் ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கை நூல்களைக் கொண்டுவந்திருக்கிறோம். பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார், ஷேக்ஸ்பியர் படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்த நூல்கள் வெளியாகியுள்ளன. அறிவியல் நூல்களிலும் கவனம் செலுத்தினோம். கணிப்பொறி அகராதியைத் தமிழில் முதலில் பதிப்பித்தது நாங்கள்தான். சிறுவர் இலக்கியம் சார்ந்து நாங்கள் வெளியிட்ட நூல்களை மீண்டும் தொகுத்துக் கொண்டுவர உள்ளோம். தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கிய 80-க்கும் மேற்பட்ட நூலாசிரியர்களில் எங்கள் கழக நூலாசிரியர்கள் மட்டும் 25 பேர்.

பதிப்பு தவிர்த்த மற்ற பணிகள்?

சென்னையில் உள்ள மறைமலையடிகள் நூல் நிலையத்திலிருந்து திருநெல்வேலி கீழ ரதி வீதியில் உள்ள சிவஞான முனிவர் நூல் நிலையத்திலும் மிக அரிய நூல்களின் சேகரிப்பைப் பாதுகாத்துவருகிறோம். பல்லாவரம் சாவடி தெருவில் உள்ள மறைமலை அடிகள் வாழ்ந்த வீட்டைப் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பை அளித்துள்ளனர். அரசியல் சாராமல் மொழி தொடர்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு இலவசமாக அந்த வீட்டைத் தருவதாக அறிவிப்பு வெளியிட்டோம். ஆனாலும், நகரின் மையத்திலிருந்து மிகவும் தூரத்தில் இருப்பதால் யாரும் கூட்டம் நடத்த முன்வரவில்லை.

தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் அமைத்துப் பாடநூல்களை வெளியிடுவதற்கு முன்னர் நீங்கள்தானே தமிழகம் முழுவதும் பாடநூல்களைப் பதிப்பித்தீர்கள்?

ஆமாம். தமிழில் சமீப காலம் வரைக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் படித்த பாடநூல்களுக்கான அமைப்பை உருவாக்கியவர்கள் நாங்கள்தான். எங்கள் அப்பர் அச்சகத்தில், வருடத்தில் மூன்று மாதங்கள் அந்த வேலைகளே முழுமையாக இருக்கும். அச்சடித்துப் பள்ளிகள் முழுக்க வழங்கிவிடுவோம். அடுத்த மூன்று மாதங்கள் முடிவதற்குள் அதற்கான பணம் எங்களுக்கு வந்துவிடும். அந்தத் தெம்பில் இலக்கிய நூல்களைப் பதிப்பிப்போம். பின்னர் இலக்கிய நூல்களை மட்டுமே பதிப்பிக்கும் நிலை வந்தபோது, அதன் விற்பனையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் செயல்பட்ட தமிழறிஞர்களின் உருவப்படங்களைப் பாதுகாப்பதையும் ஒரு பணியாகவே வைத்திருந்தீர்கள் அல்லவா?

அறிஞர் அண்ணா இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியபோது, அதில் இடம்பெற்ற கண்காட்சியில் நூறு தமிழறிஞர்களின் புகைப்படங்களை இடம்பெறச் செய்தவர் என் தந்தை இரா.முத்துக்குமாரசாமி. அவை சிறிய அளவில் இன்னமும் எங்களிடம் ஆவணமாக உள்ளன. கா.அப்பாத்துரையார், தேவநேயப் பாவாணர், அவ்வை சு.துரைசாமி, சோமசுந்தரனார், சங்குப் புலவர், புன்னைவனநாத முதலியார், அ.க.நவநீதகிருட்டினன், இளங்குமரனார், பி.எல்.சாமி, பா.ராமநாத பிள்ளை ஆகியோர் அவர்களில் அடக்கம்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உயர்ந்த அச்சுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புத்தகங்களை வெளியிட்டது கழகம். ஆனால், சமீபத்திய பதிப்புகளில் பழைய தன்மை தென்படுகிறதே?

புத்தக அச்சு, அட்டை, தாளின் தரம் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம். பழைய நூல்கள் சிலவற்றை ‘ஸ்கேன்’ செய்துதான் போட முடியும். அப்படி மட்டுமே அந்த நூல்களைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க முடியும். தொட்டாலே கிழிந்துவிடும் நிலையிலுள்ள நூல்களை எத்தனை ஆண்டுகள் நாங்கள் பாதுகாக்க முடியும் சொல்லுங்கள். ஆய்வாளர்களின் குறிப்புதவி நூல்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கு அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. பழைய நூல்கள் இந்த தலைமுறைக்குக் கிடைக்கும் வகையில் அச்சில் கொண்டுவந்துவிட்டோம் என்ற நிம்மதி மட்டும்தான் இருக்கிறது.

உங்கள் பதிப்பகத்தில் தற்போது வரவேற்பில் இருக்கும் நூல்கள், அடுத்த திட்டங்கள்?

14 சைவ சித்தாந்த சாத்திர நூல்களுக்கும் சிவஞான மாபாடியம் மறுஅச்சுக்கும் இன்னமும் வரவேற்பு உள்ளது. இளைஞர்களும் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றின் மூலநூல்களைத் தேடிவருகிறார்கள். காப்பியங்கள், சிற்றிலக்கிய வரிசைகளைத் தொடர்ந்து நாங்கள் முன்பு பதிப்பித்த சிறுவர் நூல்களையும் மறுபதிப்பு செய்வதில் கவனம் செலுத்தப்போகிறோம். தமிழக வரலாறு, சமயம் சார்ந்து மீண்டும் இளந் தலைமுறையினரிடம் தேடுதலும் வாசிப்பும் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறேன். அது அடுத்தடுத்த திட்டங்களுக்கான உற்சாகத்தைத் தருகிறது.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x