Published : 27 Jun 2020 07:22 AM
Last Updated : 27 Jun 2020 07:22 AM

நூற்றாண்டு கடந்து பறக்கட்டும் கழகக் கொடி!

கழகம் என்ற சொல்லின் இப்போதைய குறிப்பொருள் வேறு. ஒரு காலத்தில் அதன் குறிப்பொருள் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்பது. தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், தமிழ்நாடு பாடநூல் கழகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், திராவிடர் கழகம் என்று பல கழகங்கள் நூல்கள் வெளியிட்டிருந்தாலும், கழக வெளியீடு என்பது ஒற்றையாய் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதித்து வெளியிட்ட நூல்களையே குறிக்கும் வகையில், பதிப்புலகச் சிங்காதனத்தில் கொலு வீற்று நூலோச்சியது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

கழகத்தின் தொடக்கம் எளியது. திருசங்கர் கம்பெனி என்ற பெயரில் புத்தகக் கடை நடத்திய வ.திருவரங்கம் பிள்ளை தன் தம்பி வ.சுப்பையா பிள்ளையோடும், நண்பர் மா.திரவியம் பிள்ளையோடும் சேர்ந்து சைவமும் தமிழும் வளர்ப்பதற்காகத் தொடங்கிய திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மறைமலையடிகள், ச.சச்சிதானந்தம் பிள்ளை, கா.சு.பிள்ளை போன்ற சைவத் தமிழ் அறிஞர் தொடர்பால் கருத்துநிலை கெட்டிப்பட்டு, வெறும் நூல் வெளியீட்டு நிறுவனமாக இல்லாமல் ஓர் இயக்கத்துக்குப் பங்களிக்கும் பதிப்புக் கழகம் ஆயிற்று.

எழுத்தாளர்களே பதிப்பாளர்களாக இருந்து தங்கள் நூல்களைத் தாங்களே வெளியிட்டுக்கொண்ட காலத்தில், தொழில்முறைப் பதிப்பகமாகத் தொடங்கப்பட்டது கழகம். ரூ.10 முகமதிப்புக் கொண்ட 5,000 பங்குகளால் ரூ.50,000 திரட்டித் தொழில் முதலீடாக்கி, மட்டிட்ட (லிமிடெட்) நிறுவனமாகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டு திருநெல்வேலியில் தொடங்கியது அது. திருவரங்கம் பிள்ளை சென்னையில் நடத்திவந்த திருசங்கர் கம்பெனி, கழகத்தின் முதல் கிளைநிலையம் ஆனது. அப்போதைய பதிப்பகங்கள் பாடநூல் ஆணையை எண்ணியே புத்தகம் பதித்தன. இந்த நடைமுறைக்குக் கழகமும் விலக்கன்று; ஆனால், அதுவே அதன் இலக்கன்று. கழகத்தின் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த ச.சச்சிதானந்தம் பிள்ளை கழகத்துக்குச் சொன்ன அறிவுரை: ‘பாடநூல் பதிப்பில் பெரும் பணம் ஈட்டுங்கள்; அதைக் கொண்டு தமிழையும் சைவத்தையும் பட்டைத் தீட்டுங்கள்.’ (ஆ.இரா.வேங்கடாசலபதி, தி ப்ராவின்ஸ் ஆப் தி புக்). அப்படியே செய்தது கழகம்.

கழகம் தோன்றிய காலம், திலகரைப் போன்ற தேசியத் தலைவர்கள் ஒற்றைப் பண்பாட்டைக் கட்டியமைக்க முயன்றுகொண்டிருந்த காலம். மாக்ஸ்முல்லரை முன்வைத்து இந்திய நாகரிகம் சம்ஸ்கிருதத்தன்மை கொண்டது என்று ஒரு தரப்பு வேதமரபைக் கெட்டிப்படுத்த முயன்றபோது, மற்றொரு தரப்பு தனது அடையாளம் அழிந்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், கால்டுவெல்லை முன்வைத்துத் தமிழ்த்தன்மையை அடிக்கோடிட்டு, சிந்துவெளி ஆய்வின் அடிப்படையில், சைவ சமயம் வேதமரபுக்கும் முந்தையது என்னும் எதிர்வை நிகழ்த்தியது.

இந்தத் தரப்புகளை காங்கிரஸ் = பிராமணர்கள் = தேசியம் சார்ந்த இலக்கியம் = இந்தி ஆதரவு = வேதாந்தச் சார்பு எனவும், நீதிக் கட்சி = பிராமணர் அல்லாத மேற்சாதியார் = தமிழின் தனித்தன்மை பேசும் இலக்கியங்கள் = இந்தி எதிப்பு = சைவ சித்தாந்த ஆதரவு எனவும் சமன்படுத்திக் காட்டுகிறார் க.பூரணச்சந்திரன். இவ்விரண்டில் கழகம் எடுத்த நிலைப்பாடு வெளிப்படை. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற தோத்திரங்களுக்கும் சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கும் ஒளிநெறிக் கட்டுரைகளும் உரைகளும் பதித்து வெளியிட்டதோடு மட்டுப்படுத்திக்கொள்ளாமல், தமிழையும் இயக்க அரசியலையும் பிடித்துக்கொண்டதே கழகத்தின் பெருவீச்சுக்குக் காரணம்.

1943-ல் கழகம் நடத்திய முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் தேவநேயப் பாவாணர் கலந்துகொண்டு பேசியதாக ஒரு குறிப்பு. உணர்ச்சி கிளர்த்தியதோடு விட்டுவிடாமல் இலக்கிய மாநாடுகளும் நடத்தி, அவற்றில் ஆற்றப்படும் சொற்பொழிவுகளை நூலாக்கித் தமிழியக்கம் நடத்தியது கழகம். தமிழ்க் கூட்டத்தை மட்டுமே அல்லாது சைவக் கூட்டத்தையும் கூட்டியது. சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய நெருக்கடியே அதற்குக் காரணம். பிராமணர் அல்லாதார் எழுச்சி என்ற பொதுப்புள்ளியில் சுயமரியாதை இயக்கத்தோடு சேர்ந்து நின்றாலும், வைதிகத்தையும் வைணவத்தையும் பகடிக்குள்ளாக்கிய பெரியார் கூடவே சைவத்தையும் பகடிக்குள்ளாக்கியபோது, சைவத் தரப்பின் எதிர்வினையை ஆற்ற வேண்டிக் கழகத்தின் சார்பு அமைப்பான திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்தச் சங்கத்தின் முன்முனைப்பில், 1929-ல் சைவப் பெரியார் தனிக்கூட்டம் நடத்தப்பட்டது. சைவ சமயம் தன்னுடைய அடிப்படைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான கலகத்தை சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்த, அதற்கு மறுவினை ஆற்றுவதில் கழகம் குறிப்பிடத்தக்க கருவியாய் இருந்தது (ஆ.இரா.வேங்கடாசலபதி, திராவிட இயக்கமும் வேளாளரும், காலச்சுவடு பதிப்பகம்).

கழகத்தின் பங்களிப்புகளில் ஒன்று அதன் அகராதிப் பணி. நிகண்டுகளை விலக்கிப் பார்த்தால் தமிழுக்குத் தமிழிலேயே பொருள் சொல்லும் அகராதி மரபு, பதினெட்டாம் நூற்றாண்டில் ‘தமிழகராதியின் தந்தை’ வீரமாமுனிவரால் எழுதப்பட்டுப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சதுர் அகராதியில் தொடங்குகிறது. அவரே வட்டார வழக்குத் தமிழகராதி ஒன்றையும் செய்துதந்தார். யாழ்ப்பாணத் தமிழ் அகராதி, படங்களோடு கூடிய இராமநாதன் தமிழ் அகராதி, காரனேசன் தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, ச.பவானந்தம் பிள்ளையின் தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி (1925), மதுரைத் தமிழ்ப் பேரகராதி உள்ளிட்ட பெருங்கொண்ட அகராதிகளுக்குப் பின்னால், எளிதில் கையாளத்தக்க கழகத் தமிழ்க் கையகராதியை 1940-ல் வெளிக்கொண்டு வந்தது கழகம் (சுந்தர.சண்முகனார், தமிழ் அகராதிக்கலை, சந்தியா பதிப்பகம்). சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியை ஒட்டியே சொற்களுக்குப் பொருள் குறிக்கப்பட்டிருப்பதாக அதன் பதிப்புரை குறிக்கிறது.

கழகத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டவர் தேவநேயப் பாவாணர். அவர் எழுதிய ‘இயற்றமிழ் இலக்கணம்’, ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’, ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’, ‘பழந்தமிழ் ஆட்சி’, ‘முதல் தாய்மொழி’, ‘தமிழ்நாட்டு விளையாட்டுகள்’, ‘வேர்ச்சொல் கட்டுரைகள்’ ஆகிய நூல்களைக் கழகமே வெளியிட்டது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியின் பொருள் விளக்கங்களில் ஒவ்வாமை கொண்டு, ‘சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடுகள்’ என்று நூல் வெளியிட்ட தேவநேயப் பாவாணர், மேற்படி அகராதியை ஒட்டியே செய்யப்பட்ட கழகத் தமிழ்க் கையகராதி குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.

கழகத்தின் அகராதி ஈடுபாடு தமிழ்க் கையகராதியோடு நின்றுவிடாமல், சிறிய கழகத் தமிழ் அகராதி, பெரிய கழகத் தமிழ் அகராதி, ஆட்சித் துறைத் தமிழ் (அகராதி), சட்டத் தமிழ் (அகராதி), தொகை அகராதி, கழக ஆங்கில தமிழ்க் கையகராதி, கழகச் சிற்றகராதி (ஆங்கிலம்-தமிழ்), கழகப் பழமொழி அகரவரிசை, சிலேடை அகரவரிசை, மேற்கோள் விளக்கக் கதை அகரவரிசை என்று தொடர்ந்தது.

புத்தகப் பதிப்போடு நின்றுவிடாமல், அறிவுப் பரப்பிலும் ஈடுபட்டது கழகம். 1958-ல் கழகத்தால் தொடங்கப்பட்ட மறைமலையடிகள் நூல் நிலையம் தமிழ் ஆய்வுலகுக்கு ஆற்றிய பங்கு அரியது. 1900-க்கு முந்தைய நூற்றுக்கணக்கான பதிப்புகள், அரிய கடிதங்கள், ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்களோடு அது ஓர் ஆவணக் காப்பகமாகவே இருந்ததை அதன் துணை நூலகராகவும் கொஞ்சக் காலம் பணியாற்றிய ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி சுட்டுகிறார். தமிழ் ஆய்வுலகுக்குக் கழகத்தின் மற்றொரு பங்களிப்பு அது நடத்திவந்த ‘செந்தமிழ்ச் செல்வி’ திங்கள் இதழ். அதன் சிறப்புகளைச் சொல்லி இதழை ஆதரிக்குமாறு பெரியார் தனது ‘குடிஅரசு’ ஏட்டில் 1926-ல் எழுதினார்.

நல்லது. 2010-ல் தஞ்சாவூரில் சைவ மரபுப் பாதுகாப்பு மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று: ‘சைவ மக்கள் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்களாகக் கொள்ள வேண்டும்.’ எதிர்வினைக்காகத் திரும்பிப் பார்த்தால், கழகங்கள் துவண்டு கிடக்கின்றன. இயக்கத்தையே காற்றாக்கி உயிர்த்துப் பறந்த கழகத்தின் நூற்றாண்டுக் கொடி இனியும் பறக்கட்டும்.

- கரு.ஆறுமுகத்தமிழன், மெய்யியல் துறை உதவிப் பேராசிரியர், ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x