

செப்டம்பர் 22 - எஸ்.வைதீஸ்வரன் பிறந்த தினம்
சி.சு.செல்லப்பா தொடங்கி நடத்தி வந்த 'எழுத்து' சிற்றிதழே தமிழ்க் கவிதையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. புதுக் கவிதை என்ற வடிவத்துக்குக் கவனத்தையும் வாசக ஏற்பையும் பெற்றுத் தந்தது. அந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்திய முன்வரிசைக் கவிஞர்களில் எஸ். வைதீஸ்வரனும் ஒருவர். எழுத்து இதழில் எழுதியவர்களில் மிகுந்த சமகாலப் பொருத்தம் கொண்ட கவிஞரும் அவர்தான். பிற கவிஞர்கள் பிரத்தியேகமான பாடு பொருட்களைக் கவிதைக்காகத் தேடிக்கொண்டிருந்தபோது அன்றாட வாழ்வின் எளிய நிகழ்ச்சிகளிலிருந்து இவர் தன் கவிதையைக் கண்டெடுத்தார்.
கவிதைக்குள் அன்றாடப் பொருட்கள்
'எழுத்து' காலக் கவிஞர்களில் பலரும் புதிய கவிதையைச் செய்யுள் வடிவத்திலிருந்து விடுபட்டது என்றும் உரைநடையைச் சார்ந்தது என்றும் கருதியபோது பிரமிள், நகுலன், சுந்தர ராமசாமி. சி.மணி போன்றவர்கள் அதை முற்றிலும் புதிய உணர்வு நிலை என்று நிறுவினார்கள். அவர்களில் எஸ். வைதீஸ்வரனும் ஒருவர். முன் சொன்ன கவிஞர்களேகூடப் புழக்கத்திலிருக்கும் பொருட்களையோ இடங்களையோ தயக்கத்துடன் கவிதைக்குள் கொண்டுவந்தபோது மிகச் சுதந்திரமாக நடைமுறைப் பொருட்களைக் கவிதைக்குள் அனுமதித்தார் வைதீஸ்வரன். அச்சில் வெளியான அவரது முதல் கவிதையே இந்த ஜாலத்தை மிக இயல்பாக மேற்கொண்டது. பிற கவிஞர்களுக்கு நிலவு ஆகாயப் பொருளாக இருந்தபோது வைதீஸ்வனுக்கு அது நிலத்தில் கிடைத்தது. க.நா.சுப்ரமணியன் எழுதிய கவிதையொன்றில் நிலவு 'நாரியர் புடை சூழ மேக மண்டலத்தில் நடக்கிற' பெண்ணாகவே உருவகம் செய்யப்படுகிறது. வைதீஸ்வனிடம் 'கிணற்றில் விழுந்த நிலவு' கவிதைப் பொருளாகிறது.
'கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு
நனைந்த அவளுடலை நழுவாமல் தூக்கி விடு
மணக்கும் அவளுடலை மணல்மீது தோய விடு
நடுங்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்தி விடு'
என்ற கவிதையில் தென்படும் வித்தியாசமும் புதிய தொனியும் அன்று அதிர்ச்சியையும் திகைப்பையும் அளித்தன என்பதை இன்று விசுவாசமில்லாமல் நம்ப வேண்டியிருக்கிறது. இந்தக் கவிதையை ஒட்டியும் வெட்டியும் இன்னொரு 'எழுத்து' கவிஞரான தி.சோ.வேணுகோபாலன் 'ஒட்டு வெட்டு' என்ற கவிதையை எழுதினார். வைதீஸ்வரனின் கவிதையை முகாந்திரமாக வைத்து ஜெயகாந்தனும் 'எழுத்து'இதழில் வெளியான தனது ஒரே கவிதையை எழுதினார். எழுத்து இதழில் வெளியான கவிதைகளில் அன்றைக்கு உடனடிப் பார்வையில் மிக நவீனமானவையாக இருந்தவை வைதீஸ்வரனின் கவிதைகள் என்பதைப் பழைய கவிதை நூல்களை ஆராயும்போது காண முடிகிறது.
'மறந்து வைத்த பிளாஸ்டிக் பையாய்
மரத்தின் மேல் ஒரு தேன்கூடு'
என்ற உவமையும் 'எவர் சில்வர் நிலவு' என்ற சொற்சேர்க்கையும் புதுமையாகத் தொனித்தன. நகரத் தெருக்களும் ரிக்ஷாக்களும் இயல்பாகக் கவிதையில் இடம்பெற்றன. இன்று இந்தப் புதுமையின் கருக்கு அழிந்திருந்தாலும் எழுதப்பட்ட காலத்தில் மெருகு குன்றாமல் வாசிக்கப்பட்டன என்பது புரிகிறது.
எனது நகர வழிகாட்டி
புதுக் கவிதை என்ற இலக்கிய மாற்றமே நகர்ப்புற, படித்த, நடுத்தர வர்க்க இளம் மனதின் உருவாக்கம்தான். அதன் சரியான பிரதிநிதி என்று எஸ்.வைதீஸ்வரனைச் சொல்லலாம். நகர்ப்புறக் காட்சிகள், மனநிலை, அன்றாடப் பழக்கங்கள் ஆகியவற்றைக் கவிதையில் வலுவாக இடம்பெறச் செய்தவர் அவரே. கவிதை எழுத்தில் ஈடுபட்ட ஆரம்ப காலங்களில் என்னைப் பாதித்த பலருடைய கவிதைகளும் என் கவிதையாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியதை உணர முடிந்தது. அப்படி உணர்ந்ததும் வேகமாக விலகவும் முடிந்தது. ஆனால் யாரோ ஒருவருடைய நிழலான பாதிப்பைத் தொடர்ந்து உணர்ந்துகொண்டேயிருந்தேன். நான் நகரத்துப் பண்டம். எனவே என் கவிதைகளில் நகரத்தைச் சார்ந்த கூறுகள் படிந்திருப்பதை அறிய முடிந்தது. மரபு சாராத குறிப்பீடுகள், வட்டாரத் தன்மையில்லாத மொழி, பிரத்தியேகத் தன்மை யில்லாத படிமங்கள் என்று நான் பயன்படுத்தியிருந்தேன். ஆனால் இதை வேறு ஒருவரின் புலப்படாத தூண்டுதலாகவே பார்த்தேன். 'உதய நிழல்' என்ற தொகுப்பின் கவிதைகளை மொத்தமாக வாசித்தபோதுதான் எனது நகர வழிகாட்டியைக் கண்டுகொண்டேன் - எஸ்.வைதீஸ்வரனை.
இன்னொரு விதத்திலும் வைதீஸ்வரன் என்னை மறைமுகமாகப் பாதித்திருந்தார். அவரது கவிதைகளில் அதிகம் இடம்பெறும் பறவை கிளி. 'காற்றில் கிளி உருண்டு சிரிப்பொலியாய் சிறகு கொட்டுவதும், வெளியில் பல கிளிகள் மிதிபட்டுக் கிடப்பதும், பசிக்குரலின் உறுமலில் பசுங்கிளிகள் ஊமையாவதும்' அவர் கவிதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. அவரது கவிதை உலகில் அவ்வப்போது சிறகடித்துப் பறந்த கிளியை எனது கவிதைகள் சிலவற்றில் வாழ்வின் மீதான இச்சையைக் காட்டும் உருவகமாக மாற்றிக்கொண்டேன். இந்த இரண்டு நுண்ணிய பாதிப்புகளுக்காக அவரை எப்போதும் நினைத்துக்கொள்வேன். இவற்றை மீறி அவரை நான் நினைவுகூர்வது அசோகமித்திரனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'இன்னும் சில நாட்க'ளுக்கு எழுதிய கச்சிதமும் ஆழமுமான முன்னுரைக்காக.
வைதீஸ்வரன் அறுபதுகளில் எழுதத் தொடங்கியவர். அவரது முதல் கவிதை 'எழுத்து - அக்டோபர் - நவம்பர் 1961' இதழில் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து அதே இதழிலும் பிற சிற்றிதழ்களிலும் எழுதியிருக்கிறார். உதய நிழல் என்ற முதல் தொகுப்பு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்பே இரண்டாவது தொகுப்பான 'நகரச் சுவர்க'ளும் பின்னர் 'விரல்மீட்டிய மழை'யும் இறுதியில் அவரது மொத்தக் கவிதைகளின் தொகுப்பும் வெளிவந்தன. சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். 'கால் முளைத்த மனம்' அவரது சிறுகதைத் தொகுப்பு. எனினும் கவிஞராகவே அறியப்பட்டவர் அவர். அவரது கைரேகை படிந்திருப்பதும் கவிதைகளில்தான்.
நகர மத்தியதர வாழ்க்கையே கவிதைகளின் களம். அதன் சலனங்கள் பற்றிய பார்வையே அவர் கவிதைக்கான தூண்டுதல். எளிமையான மொழி. சாதாரணப் பொருட்களை அலகாகக் கொண்ட படிமங்கள். இயற்கை மீதான காதல். சமூக அவலம் பற்றிய கோபம். வாழ்வையும் மரணத்தையும் பற்றிய அலசல். இவைதான் வைதீஸ்வரன் கவிதைகளின் மையப் பொருட்கள். ஒருவகையில் எல்லாக் காலத்திலும் கவிதையின் நிகழ்கால அக்கறை இந்த மையங்களைச் சார்ந்ததுதான்.
நேற்றைய கவிதையின் உயிர்த் தொடர்ச்சி
வைதீஸ்வரனின் நீண்ட கவிதைகளைவிட என்னைக் கவர்ந்தவை அவரது சிறு கவிதைகள். சாதாரணமான ஒரு நிகழ்வை அவை அசாதாரணமான நிலைக்கு மிக இயல்பாக எடுத்துச் சென்றுவிடுகின்றன.
'இருட்டுக்குப் பயந்து
கண்ணை மூடிக் கொண்டேன்
உள்ளே புது இருட்டு
'உர்' ரென்றது' என்ற நான்கு வரிகள் பல விளக்கங்களுக்கு விரிகிறது. அவரது இன்னொரு கவிதையான 'பறக்கும் மலர்' எளிய வரிகளில் தீராத காட்சியைத் தீட்டிச் செல்கிறது - ஒரு ஜென் கவிதைபோல.
'கொடியில் மலரும் பட்டுப் பூச்சி
கைப்பிடி நழுவிக்
காற்றில் பறக்கும் மலராச்சு' .
எஸ் வைதீஸ்வரன் 1935-ம் ஆண்டு பிறந்தவர். அச்சில் அவரது முதலாவது கவிதை இருபத்தைந்தாம் வயதில் வெளியாகியிருக்கிறது. இன்றும் கவிதைகள் எழுதிக்கொண்டி ருக்கிறார். கட்டுரைகள் எழுதுகிறார். ஓவியரும் கூட.
இன்று அவரது கவிதையை வாசிக்காமலேயே புதிய தலைமுறைக் கவிஞன் ஒருவன் செயல்பட முடியும். அவரது கவிதைகளும் இன்று காலத்தின் முன் பழையனவாக மாறியிருக்கவும் கூடும். எனினும் இன்றைய கவிதை செயல்படும் நுண்ணுணர்வுத் தளத்தில் அவரது கவிதையாக்க அணுக்களும் இருக்கின்றன. இன்னும் இருக்கும். கவிதையின் உயிர்த் தொடர்ச்சியும் கவிஞனின் நிரந்தர இருப்பும் அதுதானே?
-சுகுமாரன், தொடர்புக்கு: nsukumaran@gmail.com