Published : 14 Jun 2020 06:49 AM
Last Updated : 14 Jun 2020 06:49 AM

வெண்ணிற நினைவுகள்- சிறுவர்களின் கனவு

ஆண்டுக்கு முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டபோதும் சிறார்களுக்கான சினிமா என்று ஒன்றிரண்டுகூடத் தயாரிக்கப்படுவதில்லை. அனிமேஷன் படங்கள் உலக அளவில் பெரும் வசூலைப் பெற்றுவரும் இன்றைய சூழலில்கூட நம் மண்ணின் கதைகளை அனிமேஷன் திரைப்படங்களாக உருவாக்கும் முயற்சிகள் நடைபெறவே இல்லை. இந்திய நாட்டுப்புறக் கதைகளில் எத்தனையோ வித்தியாசமான, வேடிக்கை மற்றும் சாகசக் கதைகள் இருக்கின்றன. அவற்றை அனிமேஷன் படங்களாக உருவாக்கினால், நிச்சயம் குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள். சீனாவும் ஜப்பானும் தங்கள் கதைகளிலிருந்தே தங்களுக்கான அனிமேஷன் படங்களை உருவாக்கிவருகிறார்கள்.

குழந்தைகளை வைத்துத் திரைப்படம் எடுப்பதாலே அப்படம் சிறார் சினிமாவாக மாறிவிடாது. காரணம், குழந்தைகளைப் பெரியவர்கள்போலப் பேச வைத்து, மிகையாக நடிக்க வைத்தே இத்தகைய படங்கள் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான படம் என்பது குழந்தைகள் பார்த்து ரசிக்க வேண்டிய படங்களாகும். அதுவே இன்றைய தேவை. ஈரானில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் குழந்தைகளின் கனவுகளும், வறுமையான வாழ்க்கைச் சூழலும் சமகாலப் பிரச்சினைகளும் எப்படிச் சிறார்களைப் பாதிக்கின்றன என்பதும் யதார்த்தமாகச் சித்தரிக்கப்படுகின்றன. தமிழில் அப்படியான சில குறும்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், முழுநீளத் திரைப்படங்கள் இல்லை.

நமது கல்விக்கூடங்கள் பிள்ளைகளை வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக உருமாற்றிவரும் சூழலில் சிறார்களின் கற்பனையைச் செழுமைப்படுத்தவும், தங்களைச் சுற்றிய உலகைப் புரிந்துகொள்ள வைக்கவும் சினிமா உதவுகிறது. மேற்கத்திய நாடுகளில் பாடத்திட்டத்தின் பகுதியாகத் தரமான சினிமாவை அறிமுகப்படுத்துகிறார்கள். நாமோ தொலைக்காட்சி மற்றும் செல்போனிடம் நமது குழந்தைகளை ஒப்படைத்துவிட்டுப் பொறுப்பற்றவர்களாக ஒதுங்கிக்கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளுக்கான நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய அரசு ‘சில்ரன் ஃபிலிம் சொசைட்டி’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறது. ஆனால், அதில் ஒன்றிரண்டு தமிழ்ப் படங்களே உருவாக்கப்பட்டுள்ளன. அவையும் திரையரங்குக்கு வரவே இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் இருந்த கலைவாணர் அரங்கில் குழந்தைகளுக்கான திரைப்படங்களை வாரந்தோறும் திரையிடுவார்கள். இன்று அப்படித் திரையிடும் ஒரு அரங்குகூட தமிழ்நாட்டில் கிடையாது. அதுபோலவே பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய படங்கள் எனச் சில படங்களுக்கு வரிச் சலுகை அளித்துப் பள்ளியே அழைத்துப் போகும்படியாகவும் செய்திருந்தார்கள். காந்தி படத்தை அப்படித்தான் தமிழகமே பார்த்தது.

சென்னை கடற்கரையில் ஒரு திறந்தவெளி அரங்கை உருவாக்கி, மாலைதோறும் சிறார்களுக்கான சிறந்த படங்களைத் திரையிடலாம். அது கடற்கரைக்குச் செல்லும் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும். ஆண்டுதோறும் லக்னோவில் சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதன் தனிச்சிறப்பு, இங்கே சிறுவர்களே திரையிடப்பட வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கலந்துகொள்வதும் பெருமளவு சிறார்களே. அப்படி ஒரு திரைப்பட விழாவைக் கோடை காலத்தில் தமிழகத்தில் நடத்தினால் எத்தனை சிறப்பாக இருக்கும்.

ஒரு சிறுவனுக்கும், சிவப்பு வண்ண பலூனுக்கும் இடையேயான நட்பைப் பேசுகிறது ‘தி ரெட்’ பலூன் திரைப்படம். சர்வதேச அளவில் மிகப் பெரிய விருதுகளைப் பெற்ற படம் இது. இதுபோலவே பார்வையற்ற மொஹமத் பார்வையற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பயணத்தை மிகவும் உணர்ச்சிபூர்வமாக விவரிக்கிறது ‘கலர் ஆஃப் பாரடைஸ்’. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அலி, காலணிகளுக்காக ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் கட்டாயத்தைப் பேசுகிறது ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. இது போன்ற படங்கள் சிறுவர்களின் உலகை மிக உண்மையாகத் திரையில் பதிவுசெய்திருக்கின்றன.

ஈரானியப் படங்களுக்கு இணையாகத் தமிழில் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘காக்கா முட்டை’. ஒளிப்பதிவாளரான மணிகண்டன் எழுதி இயக்கிய படமே ‘காக்கா முட்டை’. சேரியில் வாழும் இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட நினைக்கும் ஆசையைப் படம் மிக யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிறது. இப்படி ஒரு கதையைப் படமாகத் தயாரித்த தனுஷ் மற்றும் வெற்றிமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சின்னக் காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என இரண்டு கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா அறியாத புதிய முகங்கள். அந்தச் சிறுவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பாட்டி, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் அற்புதம். பீட்ஸா என்பது வெறும் உணவில்லை; அது ஒரு அடையாளம். அதுவும் படித்தவர்கள், உயர் தட்டு மக்கள் என நகரவாசிகள் சாப்பிடும் உணவின் அடையாளம். இன்னும் சொல்வதாக இருந்தால், பன்னாட்டுச் சந்தை உருவாக்கி வைத்த உணவு மாற்றத்தின் அடையாளம்.

பீட்ஸா சாப்பிட ஆசைப்படும் அந்தச் சிறுவர்கள் ரயில் பாதையில் சிதறும் நிலக்கரியைச் சேகரித்து விற்றுக் காசு சேர்க்கிறார்கள். அலைந்துதிரிந்து காசு சம்பாதிக்கிறார்கள். சில்லறை சில்லறையாக அவர்கள் பணம் சேர்த்து முடித்து, பீட்ஸா சாப்பிடப்போனால், அழுக்கு உடையிலுள்ள அவர்களை பீட்ஸா கடையினர் விரட்டியடிக்கிறார்கள். காசு கொடுத்து ஒரு உணவை வாங்கிச் சாப்பிடுவதற்குள் எத்தனை விதமான அதிகாரம் இருக்கிறது என்ற உண்மையை அழுத்தமாகப் புரிய வைக்கிறார் மணிகண்டன்.

பேரன்களின் பீட்ஸா சாப்பிடும் ஆசையை அறிந்த பாட்டி, தோசையை பீட்ஸா மாதிரி சுட்டுக் கொடுக்கும்போது அது சிறுவர்களுக்குப் பிடிப்பதில்லை. பின்பு அவர்கள் பீட்ஸா சாப்பிடும்போது அது விளம்பரங்களின் வழியே ஏற்படுத்திய ருசியை நிஜத்தில் கொண்டிருக்கவில்லை என்பது அழகான முரண்.

மிகச் சிறிய கதை. ஆனால், அதை மணிகண்டன் திரைப்படமாக ஆக்கும்போது, தேர்ந்த கலைநுட்பத்துடன் உருவாக்கியிருக்கிறார். இயல்பான வசனங்கள், யதார்த்தமான நடிப்பு, மறக்க முடியாத கதாபாத்திரங்கள் என இப்படம் தனித்துவம் மிக்க திரையனுபவத்தைத் தருகிறது.

‘காக்கா முட்டை’ போன்ற படங்களின் தேவை அதிகமுள்ளது. இளம் இயக்குநர்கள் கொலை, கொள்ளை, வன்முறை கொண்ட கதைக்களன்களைத் தேர்ந்தெடுத்துப் படமாக்குவதைவிடவும் இதுபோல நிஜமான, தேவையான, உண்மையான கதைகளை அடையாளம் கண்டு படமாக்கினால், தமிழ் சினிமாவின் பெருமை உலக அளவில் பேசப்படும்!

- எஸ்.ராமகிருஷ்ணன், ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

(தொடர் நிறைவுபெற்றது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x