Published : 13 Jun 2020 06:55 AM
Last Updated : 13 Jun 2020 06:55 AM

மூச்சுத்திணற வைக்கும் வன்முறை!

தமிழ்நதி

ஆயிரம் சூரியப் பேரொளி
காலித் ஹுசைனி
தமிழில்: ஷஹிதா
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி - 642002.
தொடர்புக்கு: 99425 11302
விலை: 499

வீட்டுக்கு வெளியில் இல்லை வாசிப்பு. ஆனால், இந்த கரோனா காலத்தில் வாசிப்பும் நகராமல் ஓரிடத்தில் உறைந்துபோய், ஏதோவொரு நற்செய்திக்காகக் காத்திருக்கிறது. இந்த நாட்களில் வாசித்து முடித்த ஒரேயொரு நாவல், ஷஹிதாவால் மிகச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ மட்டுமே. காலித் ஹுசைனி எழுதி, சர்வதேசக் கவனம் பெற்ற நாவல் இது.

நாவலை அதனளவில் பார்க்கும்போது, அது நிகழும் நிலவெளியும் ஒடுக்குமுறையை நிகழ்த்தியவர்களும் (ஈழத்தில் பேரினவாதிகள்) பெண் ஒடுக்குமுறையின் சதவீதமும்தான் வேறு. மற்றபடி, ஈழத்தில் நடந்தேறிய போர், ஒடுக்குமுறை, ரத்தம், கண்ணீர், குண்டுவெடிப்புகள், சிதைவுகள், பிரிவுகள், அகதிகளாதல், அலைந்து திரிதல், உறவிழப்பு, மனவுளைச்சல், தனிமை, மரணம் இன்னபிற ஒன்றே.

பெண்கள் மீது தலிபான்களால் பிரயோகிக்கப்பட்ட வன்முறை உலகப் பிரசித்தம். அவ்விதமிருக்க, காலித் ஹுசைனி மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அதாவது, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், கீழைத் தேசங்களில் தமது நவகாலனித்துவ ஆதிக்க நகங்களை ஆழப் பதிப்பதற்கான எழுத்துக் கருவிகளாக காலித் ஹுசைனி போன்றோரைப் பயன்படுத்துகின்றன என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும். அதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும். ஏனெனில், ஓநாய்கள் ஆடுகளுக்காக ஒருபோதும் கண்ணீர் வடிப்பதில்லை. அவற்றுக்கு வேண்டியதெல்லாம் இறைச்சி மட்டுமே. மேற்குத்தேயத்தின் அல்லது முதலாளித்துவத்தின் நயவஞ்சக அரசியல் பாதைகளை ஓரளவு அறிந்தவர்கள்தான் நாம். ஆனால், இந்த நாவலின் பெண் கதாபாத்திரங்களாகிய மரியம், லைலா, அஸீஸா போல உடல், மனரீதியான வன்முறைகளுக்கு ஆப்கன் பெண்கள் ஆளாகவில்லை என்று சொன்னால், அது சகவுயிரி மீது கருணையற்றுக் கடந்துசெல்லும் நோய்க்கூறேயாகும்.

சில புத்தகங்களை வாசிக்கவும் முடியாது, மூடிவைக்கவும் முடியாது; அந்தரப்பட வேண்டியிருக்கும். இந்த நாவலில் மூச்சுத்திணற வைக்கும் அளவுக்குப் பெண்கள் மீதான வன்முறை பேசப்பட்டிருக்கிறது. குழந்தைகள் அனுபவிக்கும் பசியும் அத்தன்மையதே. வாசித்து முடித்து புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நெகிழ்ச்சியோடு சில நிமிடங்கள் இருந்தேன். அந்த நெகிழ்ச்சிக்குக் காரணம்: மரியம்-லைலா என்ற இரண்டு பெண்களுக்கு இடையிலான நேசம், ஒட்டுறவு! அது வன்முறைக்கு எதிரான கூட்டிணைவு. இதே நேசத்தை, ஷஹிதாவால் மொழிபெயர்க்கப்பட்ட, ஆலிஸ் வாக்கரின் ‘அன்புள்ள ஏவாளுக்கு’ நாவலிலும் காண முடிந்தது. அதேபோல, இந்த நாவலின் உச்சக் காட்சியானது பிரேமால் மொழிபெயர்க்கப்பட்ட, சிமாமந்தா எங்கோசி அடிச்சியின் ‘ஊதா நிறச் செம்பருத்தி’யின் முடிவுக் காட்சியை ஞாபகப்படுத்தியது. பெண்கள் தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் தற்காத்துக்கொள்வதில் எல்லா நிலங்களிலும் ஒரே தன்மையினராகவே இருக்கிறார்கள். பொதுமைப்படுத்துகிறேனோ?

ஆனால், பெண் ஒடுக்குமுறையைக் கலாச்சாரம், மதம், சாதி இன்ன பிற பொய்ப் பூச்சுகள் கொண்டு மறைத்து மூடும் நிலங்களிலுள்ள அனைத்து ஆண்களையும் இவ்விதம் பொதுமைப்படுத்த மாட்டேன். ரஷீத் என்பவன் மட்டுமல்லாது தாரிக்குகளாலும் ஆனது ஆப்கன். இந்த நாவல் நெடுகிலும் ஒரு மகத்தான காதல் இழையோடுகிறது. கட்டிட இடிபாடுகளுக்கு நடுவிலும், குற்றம் இழைத்தால் இதுவே கதி என அச்சுறுத்துவதற்காகத் தொங்கவிடப்பட்ட பிணங்கள் மத்தியிலும் வண்ணத்துப்பூச்சிகளும் முத்தங்களும் பறக்கின்றன. மாதுளைகள் பூக்கின்றன. கூடல்கள் நிகழ்கின்றன. “இந்த உலகின் எல்லைக்கே என்றாலும் நான் உன்னைத் தொடர்ந்துவருவேன்” என்று, முன்பல்லிழந்து உடலெல்லாம் காயங்களும் வடுக்களுமாய் இருந்த காதலியின் முன் நின்று சொல்லக்கூடிய ஒருவன் இருந்தான். அவசியம் வாசிக்கப்பட வேண்டிய, தவிர்த்தால் இழப்போம் எனும் அளவு காத்திரம் மிகுந்த நாவல் இது.

- தமிழ்நதி, ஈழ எழுத்தாளர், ‘பார்த்தீனியம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: tamilnathy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x