Published : 13 Jun 2020 06:51 AM
Last Updated : 13 Jun 2020 06:51 AM

மா.அரங்கநாதன் பேசுகிறார்!

இன்மை - அனுபூதி - இலக்கியம்
மா.அரங்கநாதன் நேர்காணல்
சந்திப்பு: எஸ்.சண்முகம்
புது எழுத்து வெளியீடு
அண்ணா நகர், காவேரிப்பட்டினம்.
தொடர்புக்கு: 98426 47101
விலை: ரூ.150

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் தமிழ் வாழ்க்கையின் பண்புகள், இழைகளைத் தொடும் நவீன சிறுகதைகளை எழுதியவர் மா.அரங்கநாதன். 1932-ல் நாஞ்சில் நாட்டில் பிறந்து, 1950-களில் புதுமைப்பித்தனின் தாக்கத்தால் கதைகளை எழுதத் தொடங்கி, 2015 வரை சிறுகதைகளை எழுதியவர். 2017-ல் மறைந்துபோன மா.அரங்கநாதனின் இலக்கியப் பங்களிப்பை க.நா.சு., நகுலன், தமிழவன் ஆகிய படைப்பாளிகளும் விமர்சகர்களும் அவர் காலத்திலேயே அங்கீகரித்தாலும், தமிழ் வாசகர்கள் மத்தியில் போதிய கவனத்தைப் பெறவில்லை. மா.அரங்கநாதனின் முழுமையான ஆளுமையைத் தெரிந்துகொள்ள உதவும் நேர்காணல் நூல் இது. சங்கக் கவிதைகளிலிருந்து உணர்த்தப்படும் ‘இன்மை’ சார்ந்த அனுபவம் மா.அரங்கநாதன் என்ற நவீன படைப்பாளி வரை தொடர்கிறது என்பதை விமர்சகரும் மொழிபெயர்ப்பாளருமான எஸ்.சண்முகம் இந்த நேர்காணல் வழியாக நன்கு புலப்படுத்துகிறார்.

மா.அரங்கநாதனின் ஆரம்ப கால நாஞ்சில் நாட்டு வாழ்க்கை, குடும்பம், மரபான கல்வி, நவீன இலக்கியப் பரிச்சயம் தொடங்கி சங்கக் கவிதை, சைவ சித்தாந்தம், கதைகளில் தொடர்ந்து தென்படும் முத்துக்கருப்பன் கதாபாத்திரம் வரை இந்த நூலில் மா.அரங்கநாதன் தங்குதடையின்றிப் பதிலளிக்கிறார். தமிழில் ஒரு அவைதிக மரபு தொடர்ந்து இருப்பதாகக் கூறும் மா.அரங்கநாதன், முத்துக்கருப்பன் என்ற பெயர் அனைத்துச் சாதியினருக்கும் பொதுவான பெயர் என்கிறார்.

தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு முழுமையான நேர்காணல் நூல் அவசியம் என்பதை இந்தப் புத்தகம் நமக்கு முன்னுதாரணமாக உணர்த்தி நிற்கிறது. காத்திரமான காரியங்களைச் செய்தும் கவனிக்கப்பட வேண்டிய அளவு கவனிக்கப்படாமல்போன ஒரு மூத்த படைப்பாளிக்கு எஸ்.சண்முகம் செய்திருக்கும் படையல் இந்தப் புத்தகம். அரங்கநாதனின் கதைகளைப் படித்து முடிக்கும்போது ஏற்படும் ஒரு அமைதியையும் சொல்ல முடியாத ஒரு நிறைவுணர்ச்சியையும் இந்தப் புத்தகமும் தரும். பிழைகளின்றி, புகைப்படங்களோடு தரமாக இந்த நூலை ‘புது எழுத்து’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x