Published : 13 Jun 2020 06:49 AM
Last Updated : 13 Jun 2020 06:49 AM

கிராமங்களிலிருந்து தொடங்கட்டும் தற்சார்பு!

ஐம்பேரியற்கை
மாற்கு
தமிழினி வெளியீடு
சேலவாயல், சென்னை-51
தொடர்புக்கு: 86672 55103
விலை: ரூ.300

கரோனாவின் பரவலைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது மாநில எல்லைகளும் மாவட்ட எல்லைகளும் மட்டும் மூடப்படவில்லை. பல கிராமங்களும் தங்களது எல்லைகளை மூடிக்கொண்டன. அந்நியர்களுக்கு அனுமதி மறுத்தன. ஓராண்டுக்குத் தேவையான உணவு தங்களது இருப்பில் இருக்கிறது, ஊரடங்கு மேலும் தொடர்ந்தால் அடுத்த ஆண்டுக்கான உணவையும் விளைவித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இது. கிராமங்கள் ஒருசில ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, எப்போதுமே தற்சார்புடன் இயங்க முடியும் என்பதை மாற்கு எழுதிய ‘ஐம்பேரியற்கை’ நாவல் எடுத்துக்காட்டுகிறது.

2018-ல் வெளிவந்த இந்நாவல் நல்லூர் என்ற கற்பனைக் கிராமத்தைப் பற்றியது. அரசு உதவிகளைப் பெற மறுக்கிறார்கள் அவ்வூர் மக்கள். உண்மை நிலையறிய விரும்பும் மாவட்ட ஆட்சியர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பயணியாக அந்த ஊருக்குச் செல்கிறார். நல்லூரின் வாழ்க்கைமுறைதான் சரியானது எனத் தெளிந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார். மக்கள்விரோத கொள்ளைத் திட்டங்களுக்கு அனுமதியளிக்க மறுத்து, தனது பதவியிலிருந்தும் விலகிவிடுகிறார். மக்களுக்குத் தனது பதவியால் ஏதாவது நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்று உண்மையாகவே நம்பி, ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று உணரும் ஒரு இளம் அதிகாரியின் பார்வையிலிருந்தே இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.

தன்னிறைவும் தற்சார்பும் கொண்ட கிராமம் என்பது நிறைவேற்ற முடியாத கருத்தாக்கமல்ல; சாத்தியமே என்பதை ஒரு கொள்கைத் திட்டமாக விவரிக்கிறது ‘ஐம்பேரியற்கை’. இயற்கையோடு இயைந்த வாழ்வு, கூட்டுமுறை வாழ்க்கை, பொதுச் சமையலறை, திருமணம் தவிர்த்து ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கும் அனுமதி என்று விரிகிறது இந்த லட்சியக் கிராமம். அரசு அறிவிப்பதற்கு முன்பே பிளாஸ்டிக் பொருட்கள் அங்கு தடைசெய்யப்பட்டிருக்கின்றன. அரசின் திட்டங்களை மட்டுமல்ல, அதன் கல்விமுறைகளையும் மருத்துவத் திட்டங்களையும்கூட ஏற்றுக்கொள்ளாத ஊர் அது.

இயேசு சபை அருட்பணியாளராளரான மாற்கு, எப்போதும் தன்னை சமூகப் பணியாளன் என்றே அறிமுகப்படுத்திக்கொள்பவர். எழுத்தும் படைப்பும் அவருக்கு ஆன்ம ஈடேற்றத்துக்கான மார்க்கமோ, குருநாதரின் வழிகாட்டுதலோ அல்ல; சமூகப் பணிகளின் ஒரு பகுதி. ஏற்கெனவே 11 நாவல்களை எழுதியவர் என்றாலும், தன்னுடைய எழுத்துகளைப் பற்றி எப்போதும் அவர் வாய் திறந்ததில்லை. அருந்ததியரின் மானுடவியல் வரலாற்றை எழுதியவர். குருஞ்சாங்குளம், சிறுவாச்சி ஆகிய ஊர்களில் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் புலனாய்ந்து அறிக்கைகளாக வெளியிட்டவர். கிறிஸ்தவத்தில் தீண்டாமை குறித்தும் பஞ்சமி நிலப் போர் குறித்தும் ஆய்வு நூல்களை எழுதியவர். ‘ஐம்பேரியற்கை’யின் நல்லூரும் பஞ்சமி நிலத்தில் பூத்த கூட்டுறவுக் கனவுதான். சாதிய மேலாதிக்கத்தின் நிழல்கூட அதன் மீது படியவில்லை.

இன்றைய தமிழ்ப் புனைவுலகில் அனுபவம், கற்பனை எல்லாவற்றையும் தாண்டி உழைப்பே பிரதானமாகப் பேசப்படும் நிலையில், லட்சியங்களுக்கும் தவிர்க்கவியலாத ஒரு இடமிருக்கிறது என்பதை அழுத்தமாக நிறுவும் நாவல் இது. இத்தகைய கனவுகள் தமிழுக்குப் புதிதல்ல. வ.ரா.வின் ‘கோதைத்தீவு’ பெண்ணுரிமை பேசியது. இன்று அது நிறைவேறிக்கொண்டுதான் இருக்கிறது. நல்லூரும் அப்படி நனவாகட்டும். கரோனா காரணமாக இன்று எழுந்துள்ள தற்சார்பு முழக்கங்கள் ஏற்றுமதிக்கு வாய்ப்பின்றியும் இறக்குமதியைத் தவிர்த்து வாணிபச் சமநிலையைப் பேணவும் உருவானவை. இந்தியாவின் தற்சார்பும் தன்னிறையும் கிராமங்களிலிருந்தே தொடங்கட்டும். அதுவே சரியானது, நிலையானதும்கூட!

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x