

நேர்மையான, ஒழுக்கமான, அன்பான ஒருவனே கதாநாயகன் என்ற பிம்பத்தை மாற்றி அமைத்த தமிழ்த் திரைப்படம் ‘மந்திரி குமாரி’. இன்று வரை வெளியாகிவரும் ‘ஆன்டி ஹீரோ’ படங்களுக்கு இதுவே தொடக்கப் புள்ளி. எப்படி இது போன்ற ஒரு கதையை 1950-ல் தயாரித்தார்கள் என்று ஆச்சரியமாகவே இருக்கிறது. காதல் காட்சிகளில் பார்த்திபன் பேசும் வசனங்கள் அற்புதம். ஒரு பெண் தனது கணவனைக் கொலைசெய்யும் காட்சி வைத்தால் அந்தப் படம் ஒடாது என்று பலரும் படத்தை எதிர்த்துப் பேசினார்களாம். ஆனால், படம் பெரும் வெற்றி பெற்றது. கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான இந்தப் படம், அதன் வசனங்களுக்காகவே கொண்டாடப்பட்டது.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘குண்டலகேசி’யைத் தழுவி கருணாநிதி ‘மந்திரி குமாரி’யை நாடகமாக எழுதினார். ‘குண்டலகேசி’ ஒரு பௌத்த காப்பியம். இதை இயற்றியவர் நாதகுத்தனார். எழுதப்பட்ட காலம் 10-ம் நூற்றாண்டு என்கிறார்கள். தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகிய குண்டலகேசி என்னும் பெண்ணின் கதையைத்தான் இந்தக் காப்பியம் விவரிக்கிறது.
குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவளது இயற்பெயர் பத்தா தீசா. ஒருநாள் அவள் தன் வீட்டின் மாடத்திலிருந்து கொலைக்களத்துக்குக் கொண்டுசெல்லப்படும் சத்துவான் என்ற கொள்ளையனைக் காண்கிறாள். அவன் மீது காதல் கொள்கிறாள். அவளது தந்தை அவனை மீட்டு அவளுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் சத்துவான் கொள்ளையடிக்க முயல்கிறான். மனைவியைக் கொன்று நகைகளைப் பறிக்க அவளை மலையுச்சிக்கு அழைத்துப்போகிறான். ஆனால், எதிர்பாராமல் அவனை மலையிலிருந்து தள்ளிக் கொல்கிறாள். இதன்பிறகு, அவள் பௌத்த சமயத்தைத் தழுவி துறவியானாள் என்கிறது ‘குண்டலகேசி’.
இந்தக் காப்பியத்தில் தற்சமயம் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. ‘நீரில் குமிழி இளமை நிறை செல்வம் / நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில் / எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே’ என்ற மறக்க முடியாத பாடல் ‘குண்டலகேசி’யில்தான் இடம்பெற்றுள்ளது. இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையற்றது என்பதை ‘குண்டலகேசி’ அழகாக விளக்குகிறது. உண்மையில், அன்றைய அரசியலை விமர்சிப்பதற்கு ‘குண்டலகேசி’யின் கதைக்களத்தை கருணாநிதி பயன்படுத்திக்கொண்டார். அதனால்தான், படத்தில் ராஜகுரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.
இந்த நாடகத்தின் வெற்றியைக் கண்ட ‘மார்டன் தியேட்டர்ஸ்’ அதிபர் டி.ஆர்.சுந்தரம், அதைப் படமாக்க விரும்பி, கருணாநிதியைத் திரைக்கதை, வசனம் எழுதவைத்துத் தயாரித்தார். எம்.ஜி.ஆர். தளபதி வீரமோகனாக நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் இந்தப் படம் தனித்த இடம் கொண்டது. எஸ்.ஏ.நடராஜன், நம்பியார், மாதுரிதேவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். எல்லிஸ் ஆர் டங்கனும் டி.ஆர். சுந்தரமும் இணைந்து இயக்கியுள்ளனர். அமெரிக்கரான எல்லிஸ் ரோட்ரிக் டங்கன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சினிமா கற்றவர். தன்னோடு பயின்ற மாணிக் லால் டாண்டனோடு சேர்ந்து இந்தியாவுக்கு வந்து, திரைத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இந்திய சினிமாவில் பணியாற்றியிருக்கிறார். எம்.ஜி.ஆர். அறிமுகமான முதல் படம் ‘சதிலீலாவதி’; இதை இயக்கியவரும் டங்கன்தான். ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாத டங்கன், ஆங்கிலம் தெரிந்த தமிழ் உதவியாளர்களைக் கொண்டே தமிழ்ப் படங்களை இயக்கினார். யுத்த காலத்தில் நிறைய ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான ‘மீரா’ இந்திய சினிமாவின் தனிப்பெரும் சாதனையாகக் கொண்டாடப்படுகிறது.
ராஜகுருவின் மகன் பார்த்திபன் ஒரு கொள்ளைக்காரன். ஆனால், கொள்ளையடிப்பதை ஒரு கலை என்று சொல்பவன். அவனது தந்தை முல்லை நாட்டின் ராஜகுரு. அவரது கைப்பொம்மையாக அரசனை வைத்திருக்கிறார். ஆனால், ராஜகுரு நினைத்ததுபோல தன் மகனைத் தளபதியாக்க முடியவில்லை. இதனால், கோபமுற்ற பார்த்திபன் கொள்ளையில் ஈடுபடுகிறான். அவனைப் பிடிக்கும் பணி வீரமோகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொள்ளைக்காரனாக இருந்தாலும் பார்த்திபனுக்கு ஒரு காதல் கதை இருக்கிறது. அவன் ராஜகுமாரியைக் காதலிக்க முயல்கிறான். ஆனால், அவன் அனுப்பிய தூது தவறுதலாக மந்திரி மகள் அமுதவல்லியைச் சென்றடைகிறது. அவள் பார்த்திபன் மீது ஆசைப்படுகிறாள். உடனே அவளைக் காதலிப்பது என்று பார்த்திபன் முடிவெடுத்துவிடுகிறான். அவளை வைத்தே பதவியை அடைய நினைக்கிறான். பின்நவீனத்துவ சினிமாவில்தான் இது போன்ற காட்சி சாத்தியம். இப்படியான ஒரு காட்சியை அன்றைக்கே வைத்திருக்கிறார்கள். பார்த்திபன், அமுதவல்லியைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டி மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அப்போது ‘வாராய் நீ வாராய்’ பாடல் ஒலிக்கிறது. இந்தப் பாடல் ஒரே நேரத்தில் காதலையும் வஞ்சகத்தையும் வெளிப்படுத்துகிறது. திருச்சி லோகநாதனும் ஜிக்கியும் பாடிய ‘வாராய், நீ வாராய்’ பாடலை எப்போது கேட்டாலும் மனதை மயக்குவதாக இருக்கிறது. கா.மு.ஷெரிப், ஏ.மருதகாசி எழுதிய பாடல்களுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார். ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடலும் மிக அழகானது.
பார்த்திபனாக எஸ்.ஏ.நடராஜன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ராஜகுருவாக நடித்துள்ள நம்பியாரின் தோற்றமும் அவர் பேசும் வசனங்களும் சிறப்பானவை.
‘மார்டன் தியேட்டர்ஸ்’ ஆரம்பக் காலங்களில் உருவாக்கிய திரைப்படங்கள் பெரிதும் இலக்கியம் சார்ந்தும் எழுத்தாளர்களின் முக்கியமான பங்களிப்புடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பின்னாளில் அவர்கள் ஹாலிவுட் பாணியில் ஜேம்ஸ்பாண்ட் படங்களை உருவாக்கி, தங்களுக்கான தனித்துவமான பிம்பமாக மாற்றிக்கொண்டார்கள். ‘மார்டன் தியேட்டர்ஸ்’ படங்களுக்கென்றே தனித்துவமிக்க அரங்க அமைப்பு, இசை, பாடல்கள், ஒளிப்பதிவு இருந்தன. மாத ஊதியத்தில் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியில் இருந்தார்கள்.
இன்று சேலத்தில் ‘மார்டன் தியேட்டர்ஸ்’ இருந்த இடம் குடியிருப்பாக மாறிவிட்டது. தமிழ் சினிமாவுக்குப் பெரும் பங்களிப்பு செய்த ‘மார்டன் தியேட்டர்ஸ்’ பற்றி இது வரை யாரும் ஒரு ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அவசியம் செய்ய வேண்டிய பணி அது.
- எஸ்.ராமகிருஷ்ணன், ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com