Published : 07 Jun 2020 07:09 AM
Last Updated : 07 Jun 2020 07:09 AM

பிளேக் சிந்து

அ.கா.பெருமாள் 

‘சீதாதேவி எறிந்த எலியைக் கூரைக்குக் கொண்டுபோன கழுகு பயமில்லாமல் உட்கார்ந்திருந்தது. கருடாச்சாரியார் தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தார். கழுகு, கழுகு, கழுகு… நீலவானம் நிறைய மிதந்துகொண்டும் பறந்துகொண்டும் வட்டமாகச் சுற்றிக் கீழே பாய்ந்து வந்துகொண்டிருந்தன. எல்லா இடங்களிலும் கழுகுகள். காக்கைகள், கழுகுகள் தவிர மனிதர்களைக் காண முடியாத அந்த அக்ரஹாரத்தில் பிராணேஷ் ஆச்சாரியார் ஒருவரே மிச்சமிருந்தார்’ - கர்நாடகத்தில் பாரிஜாதபுரம் என்னும் பிராமணர் கிராமத்தில் பிளேக் வந்த நிகழ்ச்சியின் வருணனை இது. யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவலின் ஒரு பகுதி. பெரும்பாலும் 1890-1900-க்கு இடைப்பட்ட நிகழ்வு இது.

தமிழகத்தில் பிளேக்

இதே காலகட்டத்தில் தமிழகத்திலும் பிளேக் பாதித்திருக்கிறது. 1893 முதல் 1925 வரை திருப்பத்தூர் (1900), நாமக்கல் (1910), சேலம் (1911, 1917), கோயம்புத்தூர் (1911, 1916), பொள்ளாச்சி (1911), குடியாத்தம் (1913), எடப்பாடி (1917) எனச் சில இடங்களில் பிளேக் பரவியதால், மரணமும் அழிவும் நிறைய நடந்திருக்கிறது. இக்காலங்களில் சப்தமில்லாத மரண ஓலம். இறந்தவர்களைப் பற்றிய துக்கம், தங்களின் உடலில் ஏற்பட்ட மாற்றம், மருத்துவ வசதியில்லை, அரசு ஆதரவு இல்லை, அரசு ஆட்களே ஓலை வீடுகளுக்கு நெருப்பு வைத்தார்கள், எதுவுமே இல்லாமல் குடிபெயர்ந்த மக்கள்; இவற்றை எல்லாம் இந்தக் கால மாவட்ட கெசட்தீர்கள் துல்லியமாகப் பதிவுசெய்யவில்லை. ‘சம்ஸ்காரா’ போன்ற படைப்புகளும் வரவில்லை.

சிந்துப் பாடல்கள்

1893-க்கும் 1926-க்கும் இடைப்பட்ட 33 ஆண்டுகளில் வெளிவந்த 14 சிந்துப் பாடல்களில் கோயம்புத்தூர், தேனி, மதுரை மாவட்டப் பகுதிகளில் பரவிய பிளேக் நோய் குறித்த செய்திகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் பெரும்பாலும் நேரடியாகப் பார்த்து எழுதப்பட்டவை. இந்த சிந்துப் பாடல்களை எழுதியவர்கள் சொந்த அனுபவம் உடையவர்கள். சிலர் கேட்ட செய்திகளை எழுதினர், சிலர் குடிபெயர்ந்தவர்கள் சொன்ன செய்திகளை எழுதினர். இந்த 33 ஆண்டுகளில் கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, சேலம் மாவட்டங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் வாய்மொழியாகச் சொன்ன செய்திகள் மற்றவர்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன. ஒரு சிந்துப் பாடல் 1896-ல் பம்பாய், பெங்களூர் என இரண்டு நகரங்களிலும் பிளேக் பரவி அழிவுசெய்ததைப் பாடுகிறது. இது குடிபெயர்ந்தவர்கள் சொல்லிய செய்திகள். ‘மகாம்மாரிச் சிந்து’ என்ற இச்சிறு பிரசுரம், 1900-ல் திருப்பத்தூரில் வெளியானது. எழுதியவர் பெருமாள் நாடார். இவர் பம்பாய் நகரத்துக்குச் சென்றவர்கள், திரும்பியவர்கள்வழி கேட்ட செய்திகளை இதில் சொல்லுகிறார்.

வெள்ளப்பெருக்கு

இந்த சிந்துப் பாடல்களில் கும்மி அல்லது அலங்காரம் என்னும் வகையைச் சார்ந்தவையே அதிகம். ஒரு சிந்து மட்டும் பிளேக் பரவிய சமயத்தில், மழையால் குளம் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும் மக்கள் அடித்துச் செல்லப்பட்டதையும் கூறும். இது எடப்பாடி ஊரில் நடந்த நிகழ்வு. வெங்கடராமச் செட்டியார் என்பவர் எழுதிய பிளேக் சிந்தும் அலங்கோலச் சிந்தும் 1917-ல் அச்சாயின. வெள்ளப்பெருக்கில் எலிகள், பிணங்கள், விலங்குகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டதால் பிளேக் ஒழிந்துவிட்டது என்பதை நகையுடன் இது விவரிக்கிறது.

காலராச் சிந்து

மருதமுத்துப் பிள்ளை எழுதிய ‘கடுகூர் காலராச் சிந்து’ (1914) கடுகூரிலும் பக்கத்து ஊர்களிலும் பிளேக் மட்டுமல்ல, காலரா பரவியதையும் விவரிக்கிறது. இந்தப் பாடலாசிரியர் உத்தமபாளையத்துக்காரர். பிளேக்கும் காலராவும் சேர்ந்து பாதித்ததால், ஊரில் பாதிப் பேர் இறந்தனர். எஞ்சியவர் குடிபெயர்ந்தனர் எனக் கூறும். பொதுவாக, சிந்துப் பாடல்கள் 12 பக்கங்களிலிருந்து 30 பக்கங்கள் இருக்கின்றன. பெரும்பாலும், பிளேக் பாதித்த வருடத்திலோ அடுத்த வருடத்திலோ எழுதப்பட்டதால் இவற்றில் மிகைப்படுத்தல் இல்லை.

ஜோதிடச் சிந்து

பிளேக்கும் காலராவும் மக்களைப் பயமுறுத்திக்கொண்டிருந்த இதே காலகட்டத்தில், மக்களைப் பயமுறுத்திய இன்னொரு விஷயத்தை நான்கு சிந்துகள் பாடுகின்றன. இவை ஜோதிடச் சிந்துகள். பிளேக் பாதித்த காலகட்டத்தில் இந்தச் சிந்துகளும் வெளியாகியிருக்கின்றன (1897-1926). இந்த சிந்துகள் பிளேக் பரவியதற்கு, இத்தனை சாவு வந்ததற்குக் கிரகங்களின் சேர்க்கையும் பஞ்சாங்க மாறுதலும் காரணம் என்கின்றன. ஆனால், பிளேக் தொடர்பான 14 சிந்துகளும் பிளேக் பரவலுக்கு எலிகளும் தெள்ளுப் பூச்சிகளும் காரணம் என்கின்றன. இந்தச் சிந்துப் பாடல்களை வெளியிட்டவர்கள் எல்லோருமே சோதிடர்கள் அல்லது சோதிடர் சொல்ல எழுதப்பட்டவை. அழகர் ஆசாரி ஜோதிடர் வெளியிட்ட ‘விநோதக் கும்மி சிந்து’ 1900-ல் வெளியானது. திண்டுக்கல்லில் அச்சானது. 30 பக்கங்கள். இதில், விகாரி வருடத்தில் பல தீயவிளைவுகள், நோய்கள் பரவுகின்றன. இவை தொடரும் என்ற பயமுறுத்தல் தொடக்கத்தில் வருகிறது. இந்த பயம், தோஷம் போக நிவர்த்தியும் சொல்லுகிறது இந்தச் சிந்து.

கலி வரும் சிந்து

ராமச்சந்திர ராவ் எழுதிய ‘ஐயாயிரம் பிரளிக்கும்மி’ கலி வரப் போகிறது என்ற பயத்தை உருவாக்கும் தோரணையில் ஆரம்பிக்கிறது. இது 1897-ல் வந்தது. இதே காலத்தில் பிளேக் கொங்குநாட்டுப் பகுதியில் பரவ ஆரம்பித்துவிட்டது. 16 பக்கங்கள் கொண்ட இந்தச் சிந்து, பொதுமக்களைப் பயமுறுத்துவதற்கென்று எழுதப்பட்டதுபோல் உள்ளது.

குரோதன ஆண்டு

காங்கேயம் கோவிந்த சாமி எழுதிய ‘கொடுமை அதிகரித்த சிந்து’ 1926-ல் வந்தது. குரோதன ஆண்டில் மக்கள் அடையப்போகும் துன்பத்தைப் பயமுறுத்தும் விதத்தில் கூறப்படுவது இந்தச் சிந்து. இந்த நூல் வந்த காலத்தில்தான் கொங்குப் பகுதியில் பிளேக் ஓய்ந்திருந்தது. இதே காலத்தில் ‘கலி கால விபரீதச் சிந்து’ (1926) வந்தது. இதுவும் நோய், வெள்ளப்பெருக்கைக் கலிகாலத்துடன் இணைக்கிறது. இதுபோல் 1925, 1926-களிலும் பயமுறுத்தும் ஜோதிடச் சிந்துகள் வந்துள்ளன. இத்தகு சிந்துகள் எட்டுக்கு மேல் வந்துள்ளன. இவை எல்லாமே பிளேக்கையும் சுற்றிவருகின்றன.

அந்தோணிப் பிள்ளை

பிளேக் சிந்து ஒன்றை மாதிரிக்குப் பார்ப்போம். பெரியகுளம் அருகே உள்ள அனுமந்தன் பட்டியில் பிறந்த அந்தோணி முத்துப் பிள்ளை வெளியிட்ட ‘பிளேக் சிந்து’ 1921-ல் உத்தமபாளையத்தில் அச்சிடப்பட்டது. 1920ல் தேனிபாளையம் பகுதியில் பிளேக் பரவியதையும், ஆயிரக்கணக்கான பேர் இறந்ததையும் பாடுவது. இந்தச் சிந்து 276 வரிகள் கொண்டது. ரவுத்ரி வருடம் அதர்மத்தின் உச்சம், அதனால் பிளேக் வந்தது என்றெல்லாம் சொன்னாலும், எலிகளின் உடம்பில் தோன்றிய தெள்ளுப் பூச்சியால் வந்தது இந்த பிளேக், இதற்கு மருந்து கிடையாது என்று கூறுகிறது.

பிளேக் வகைகள்

பிளேக்கைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமலேதான் மொத்த மக்களும் இருந்தனர். சிந்துப் பாடகன் பிளேக்கின் வகைகளாகச் சிலவற்றைச் சொல்லுகிறான். அக்கினி பிளேக், எருமை பிளேக், நித்திரை பிளேக், ரத்த பிளேக், வெறி பிளேக் போன்றவை பல வகைகளில் பரவியதாகப் பாடகன் கூறுகிறான். மக்கள் அவர்களாகப் பெயரிட்ட பிளேக் வகைகள் இவை. என்றாலும் காய்ச்சல் வருதல், உடலில் கொப்பளம், கட்டி தோன்றுதல் என்னும் அறிகுறிகள் பிளேக் வரும் முன் தோன்றும் என்று அறிந்திருக்கின்றான். இவையும் வாய்மொழியாகப் பரவியவை. அரசு இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அப்போது தொழில் காரணங்கள் இல்லை. அதனால், ஊரில் பறையறைந்து செய்தி சொல்லச் செய்திருக்கின்றனர். சின்னமனூர், கோம்பை போன்ற இடங்களில் அரசு அதிகாரிகள் வரவே இல்லையாம்.

குடிபெயர்தல்

வருவாய்த் துறை அலுவலர்களும் போலீஸ்களும் ஊர் மக்களை ஊரைவிட்டுக் குடிபெயர்ந்து செல்லுமாறு கட்டாயப்படுத்தினர். மருத்துவ உதவி இல்லை, கிடைத்த கிழங்கு காய்கறிகளைப் பச்சையாகத் தின்றனர். வீட்டைப் பிரித்து, கம்புகளை எடுத்துப் பாடைகட்டி அதில் குழந்தைகளைச் சுமந்துகொண்டு நடந்தனர். காட்டு விலங்குகள் ஊரில் திரிந்தன. கோயில்கள் நாய்நரிகளின் கூடாரமாயின. தடுப்பூசி போடாததே பிளேக் பரவக் காரணம் என அரசுத் தரப்பில் கூறியதாகச் செய்தி பரவியது. இறப்பு எண்ணிக்கையைச் சிந்துப் பாடகன் தயக்கமில்லாமல் சொல்லுகிறான். தேனியில் ஒரு நாளில் 70, உத்தமபாளையத்தில் 120 எனப் பட்டியலிடுகிறான். ஒரே குழியில் பிணங்கள் எல்லாவற்றையும் போட்டனர், நாய் நரிகள் பிணங்களை இழுத்துச்சென்றன என்கிறான். அப்பா ஓர் குழிக்குள் ரெண்டு மூன்று பிணமே/ சப்பாத்திக் கள்ளிமேலே சில பிணமே/ முல்லையாற்றில் சில பிணமே/ ஆட்களில்லா வீட்டிலும் பிணமே கிடக்க… இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகிறான்.

எப்படி வந்தது?

சிந்துப் பாடகன் இப்படியாகப் பார்த்த செய்திகளைச் சொல்லிய சமயத்தில் ‘எப்படி வந்தது பிளேக்?’ என்ற சிறுபிரசுரம் தேனியிலிருந்து வெளியானது (1922). சாமுர்வெல் எழுதிய இத்துண்டுப் பிரசுரம், அறிவியல்பூர்வமான செய்திகளைச் சொல்வதாகக் குறிப்பிடுகிறது. பிளேக் லத்தீன் சொல். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயால் பம்பாயில் ஒரு லட்சத்துக்கும் மேல் இறந்தார்கள் என இப்படிப் பல செய்திகள்.

இருபதாம் நூற்றாண்டின் கால்பகுதி கடந்த பின், இயல்பு வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது என 1928-ம் ஆண்டு சிந்து ஒன்று கூறும்!

- அ.கா.பெருமாள், நாட்டாரியல் ஆய்வாளர்.

தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x