Published : 06 Jun 2020 07:17 AM
Last Updated : 06 Jun 2020 07:17 AM

வீரேந்திர குமார் விற்பனைக்கு இல்லை என்று சொன்னேன்!- ‘மாத்ருபூமி நாயகர்’ கடைசிப் பேட்டி

என்.பி.செக்குட்டி

எம்.பி.வீரேந்திர குமார் (83) நம் காலத்து ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். கேரளத்தின் முதுபெரும் சோஷலிஸ்ட்டுகளில் ஒருவர். மலையாளத்தின் பெருமைக்குரிய ‘மாத்ருபூமி’ பத்திரிகையின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொது வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டவர். வயநாட்டில் அரசியலராக இருந்த தன் தந்தை எம்.பத்மபிரபா கவுண்டரைப் பின்பற்றி சோஷலிஸ அரசியலுக்கு வந்தவர். அவரது தாத்தாவும் அரசியலர். மூத்த அரசியலர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சந்திரசேகர், வி.பி.சிங், லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் உள்ளிட்ட பலருடன் நெருக்கமான உறவில் இருந்தவர் அவர். தன் வாழ்க்கை முழுவதும் ஒரு இடதுசாரியாக இருந்த வீரேந்திர குமார் சமீபத்தில் காங்கிரஸ் தலைமையிலான ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’யில் இணைந்தார். பிறகு, அப்படியே நேர்மாறாக ‘இடதுசாரி ஜனநாயக முன்னணி’க்கு மறுபடியும் வந்தார். ஆனால், அரசியல் என்பது பன்முகம் கொண்ட அவரது ஆளுமையில் ஒரு பகுதிதான். அவர் ஒரு எழுத்தாளர், பேச்சாளர், புதுப்பிக்கத் தக்க வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் அக்கறைகளுக்கும் இடையறாது குரல் கொடுத்தவர். அவருடைய கடைசிப் பேட்டி இது.

உங்கள் சோஷலிஸ அரசியலைப் பற்றிப் பேசலாமா? ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த உங்களுடைய சோஷலிஸத்தின் நம்பகத்தன்மையைப் பலரும் கேள்விக்குள்ளாக்கலாம். சோஷலிஸ அரசியலுக்குள் எப்படி வந்தீர்கள்?

நாங்கள் வயநாட்டில் சிறிய எண்ணிக்கையில் உள்ள சமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் மூதாதையர் கர்நாடகத்திலுள்ள ஹசன் மலைகளிலிருந்து இங்கே வந்தவர்கள். என் தாத்தா மணியன்கோடே கிருஷ்ண கவுண்டர் தேசியராக இருந்தார். 1920-களில் சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூக்குரல் விடுத்தவர் அவர். 1930-களில் தேசிய இதழான ‘மாத்ருபூமி’ பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது அந்தப் பத்திரிகைக்குப் பெரிய அளவில் கடன் கொடுத்தவர் அவர். அவரது இரண்டு மகன்களில் இளையவர் பத்மபிரபா, சோஷலிஸக் கட்சியில் இருந்தார்; ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா இருவரோடும் நெருக்கமாக இருந்தார். சித்தாந்த அடிப்படையில் மட்டும் அல்லாது வாழ்க்கையிலும் சோஷலிஸ்ட்டாக வாழ்ந்தவர் அவர். தனது சொத்துகள் எல்லாவற்றையும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் சரிசமமாகப் பிரித்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். அவரிடமிருந்துதான் சோஷலிஸ அரசியலை நான் கற்றுக்கொண்டேன்.

இந்திய அரசியலில் 1950-கள் மிகவும் துடிப்பான ஆண்டுகள். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மாறுபட்ட பார்வையை சோஷலிஸ்ட்டுகள் தந்தார்கள். என்னுடைய தந்தை மதறாஸ் மாகாண சட்டமன்றத் தேர்தலில் 1951-ல் போட்டியிட்டபோது அவருடைய பிரச்சாரத்துக்காக ஊர் ஊராகச் சுற்றியதுதான் எனது அரசியல் வாழ்வின் தொடக்கம். ஒரு சமயம் ஜெயப்ரகாஷ் நாராயண் வயநாட்டுக்கு வந்திருந்தபோது அவரிடம் எனது தந்தை என்னை அறிமுகப்படுத்திவைத்தார். “ஏ, சின்னப் பையா, உனக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும்?” என்று ஜேபி கேட்டார். “உங்களிடமிருந்து சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை எனக்கு வேண்டும்” என்றேன். அப்படித்தான் அந்தக் கட்சியின் உறுப்பினர் ஆனேன்.

பிறகு, நான் தத்துவத்தில் முதுகலை படிப்பதற்காக கல்கத்தா சென்றேன். அதன் பிறகு, எம்.பி.ஏ. படிப்பதற்காக சினிசினாட்டி சென்றேன். பம்பாயில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸைச் சந்தித்தபோது அவர் பிரபலமான தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். சோஷலிஸ்ட் கட்சியின் செயலாளரான ரபி ராயிடம் அவர் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் என்னை டெல்லி சென்று லோஹியாவைச் சந்திக்கச் சொன்னார். நானும் அப்படியே செய்தேன். 1960-களின் முற்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக வயநாடு வந்த லோஹியா எங்கள் வீட்டில் மூன்று நாட்கள் தங்கினார். அப்போது தீவிரமான விவாதங்கள் நடக்கும். அதெல்லாம் எனக்கு இந்திய அரசியலிலும் சமூகத்திலும் உள்ள சிக்கல்கள் குறித்த ஆழமான பார்வையைத் தந்தன. ‘இந்தியாவின் பிரதானமான பிரச்சினை சாதி – அதற்கு முகம் கொடுக்காமல் சமூகத்தின் ஆழமான பிரச்சினைகளை நம்மால் கையாள முடியாது’ என்பதை முழுமையாக உணர்ந்தேன்.

“உன்னுடைய மகள் வேறொரு சாதியைச் சேர்ந்த பையனைத் திருமணம் செய்துகொள்வதை நீ அனுமதிப்பாயா?” என்று லோஹியா என்னிடம் கேட்டார். அந்த நாட்களில் அப்படியெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்பதால், “அதைப் பற்றி நான் யோசிக்க வேண்டும்” என்று சொன்னேன்; அடுத்த நாள், “மகிழ்ச்சியுடன் சம்மதிப்பேன்” என்று அவரிடம் கூறினேன். என் வாழ்நாள் முழுதும் அதை நான் கடைப்பிடித்தேன் என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். என் பிள்ளைகள் வெவ்வேறு சமூகங்களில் தங்கள் வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். முக்கியமாக, என்னுடைய மகன் ஸ்ரேயம்ஸ் குமாருடைய மைத்துனர் ஒரு முஸ்லிம். இதுவெல்லாம்தான் எனது சோஷலிஸ நம்பிக்கைகளும் மரபும்.

உங்கள் அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடிநிலை காலகட்டம்தான் மிகவும் முக்கியமானது. அந்த நாட்களின் சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

1975-ல் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது கேரளத்தின் இடதுசாரிக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். ஜேபி உட்பட பல்வேறு தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். எது வந்தாலும் வரட்டும், எங்கள் அரசியல் செயல்பாடுகளை வெளிப்படையாகவே செய்வது என்ற முடிவுக்கு வந்தோம். அந்த சமயத்தில் மார்க்ஸிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன் கோழிக்கோடுக்கு வந்தார். 1950-களில் மதராஸின் காங்கிரஸ் அரசாங்கம் சேலம் சிறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் மலபாரைச் சேர்ந்த விவசாய சங்கத் தொழிலாளர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள். அந்தத் துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து நாங்கள் நடத்திய போராட்டங்களுக்காக ஏ.கே.கோபாலன் வயநாடு வந்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அந்தச் சந்திப்பின்போது தலைமறைவாக அரசியலில் ஈடுபடும்படி எங்களுக்கு ஆலோசனை சொன்னார் அவர். அது நடைமுறையில் சாத்தியப்படாது என்று நாங்கள் உணர்ந்தோம். எங்கள் கட்சி சிறியது என்றும், மறைந்து வாழுமளவுக்கு எங்களிடம் நிதி உள்ளிட்ட ஆதாரங்கள் இல்லை என்றும் கூறினோம். தனது கட்சி எங்களுக்கு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்... ஆகவே, ஏழு மாதங்கள் நான் தலைமறைவு வாழ்க்கை நடத்தினேன். அதன் பிறகு, மைசூரில் நான் கைதானேன். மீதமுள்ள காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருடன் கண்ணூர் சிறையில் இருந்தேன்.

பத்து மாதங்கள் சிறையில் இருந்தீர்கள். உங்கள் குடும்பம் அந்தச் சூழலை எப்படிச் சமாளித்தது?

எனது குடும்பத்துக்கு அது சிரமமான காலம். என்னுடைய சொத்துகள் எல்லாம் அரசாங்கத்தால் ஜப்திசெய்யப்பட்டன. என் குடும்பத்தினருக்கு ஒரே ஒரு அறையை மட்டும் விட்டுவிட்டு வீட்டையும் பூட்டிவிட்டார்கள். பிள்ளைகளுக்குத் தூங்கக்கூட இடம் இல்லாததால் என் மனைவி உஷா மிகுந்த துயரத்தை அனுபவித்தார். அந்தச் சூழலில்தான் குடும்பத்தின் நிலையை எண்ணி, என் மாமனார் மாரடைப்பால் மரணமடைந்தார். அந்த நாட்களில் காவல் துறையினர் எங்கு பார்த்தாலும் என்னைத் தேடினார்கள்; என் குடும்பத்தைத் தொல்லைகளால் துளைத்தார்கள். என்னைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று பல இடங்களிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

உங்கள் வாழ்க்கையின் ஒரு அம்சம் ஆரம்ப காலத்திலிருந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நீங்கள் காட்டிய அக்கறை. 1980-களில் நாயனார் அரசில் வனத் துறை அமைச்சராக இருந்தபோது மரங்களை வெட்டுவதற்கு நீங்கள் தடை விதித்தீர்கள். அடுத்த நாளே நீங்கள் உங்கள் பதவியை ராஜிநாமா செய்யும்படி வலியுறுத்தப்பட்டீர்கள். இது போன்ற பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு நடைமுறை அரசியல் எந்த விதத்திலாவது பயன்படுகிறது என்று கருதுகிறீர்களா?

மரம் வெட்டுவதற்கு நான் தடை விதித்தது அதுபோன்ற அதிரடி நடவடிக்கை தேவை என்று நான் உணர்ந்ததாலும், நான் எடுத்த நடவடிக்கை சரியானது என்று உணர்ந்ததாலும்தான் பதவி விலகும் முடிவுக்கு வந்தேன். எனது ராஜிநாமாவைக் கொடுத்தபோது முதல்வர் நாயனார், “என்ன பைத்தியக்காரத்தனம் இது? இந்த விவகாரத்துக்காக நீங்கள் ஏன் வெளியேற வேண்டும்?” என்று கேட்டார். “இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளெல்லாம் நம் வாழ்க்கையில் மிகவும் தீவிரமானவையாக மாறும் காலம் வரும்” என்று அவரிடம் கூறினேன், இப்போது அந்த நாட்கள் வந்துவிட்டன இல்லையா!

சுற்றுச்சூழலைப் பேசும்போது பிளாச்சிமடா போராட்டம் நினைவுக்குவருகிறது. நீங்களும் உங்கள் பத்திரிகையும்தான் இந்த விவகாரத்தை தேசிய முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக மாற்றினீர்கள். இப்போது திரும்பிப் பார்க்கும்போது அது எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக, வளர்ச்சிக்காக இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாகச் சுரண்டுவது இன்னமும் நமது அரசுக் கொள்கைகளில் இருக்கத்தானே செய்கிறது.

இயற்கை வளங்களைச் சுரண்டும் கொள்கைகள் நம்மைவிட்டுப் போயாக வேண்டும். அவற்றுக்கெதிராக எப்போதும் மக்கள் போராட்டம் நாடு முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கும். இதுதான் பிளாச்சிமடாவிலும் நடைபெற்றது. கோகோ கோலா நிறுவனம் பெரும் அளவில் நிலத்தடிநீரை உறிஞ்ச ஆரம்பித்த பிறகு அந்தக் கிராமத்தில் தண்ணீரே இல்லாமல் போய்விட்டது. அந்தக் கிராமத்துக்கு நான் சென்ற பிறகு மயிலம்மாவையும் ஏனையோரையும் சந்தித்தேன். குடிப்பதற்குகூட தண்ணீர் இல்லை என்றார்கள் அவர்கள். தண்ணீர் கொண்டுவர அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. கிருஷ்ணன் என்றொரு பழங்குடித் தலைவர் இருந்தார். ஒரு நாளைக்கு ஆயிரம் பராக்கள் (பரா என்பது தோராயமாக இரண்டு கிலோ) நெல்லை அறுவடை செய்யும் அளவுக்கு அங்குள்ள நிலம் அவ்வளவு வளமாக முன்பு இருந்திருக்கிறது; ஆனால், கோலா நிறுவனம் நுழைந்த பிறகு நூறு பராக்கள்கூட கிடைப்பதில்லை என்றார் அவர். தண்ணீருக்கு அந்த அளவுக்குப் பஞ்சம். அதனால்தான், அந்தப் போராட்டத்தை நாங்களும் முன்னெடுத்தோம்.

அந்த அனுபவம் எப்படி இருந்தது? தனது இருப்புக்கு விளம்பரங்களையே சார்ந்து இருக்கும் ஒரு பத்திரிகை குழுமத்துக்கு ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்துக்குச் சவால் விடுப்பதென்பது எளிதாக இருந்திருக்காது இல்லையா?

ஆபத்தான விவகாரமாகத்தான் அது இருந்தது. எனினும், நாங்கள் எங்கள் அடிப்படை அக்கறைகளை விற்றுவிட்டு விளம்பரங்களிடம் சரணடைந்துவிடுவதில்லை. விளம்பர வருவாய் என்ற வகையில் நிறைய – கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்களை- எங்கள் பத்திரிகை இழக்கவே செய்தது. எனக்கேற்பட்ட இழப்பையும் உங்களுக்குச் சொல்கிறேன். அந்த நிறுவனத்தின் இடைத்தரகர்கள் சிலர் ஒரு பேரத்துடன் என்னை அணுகினார்கள். அவர்களுக்கு நான் சிறிய உதவி செய்தால் அங்குள்ள அவர்களின் நிலையத்திலிருந்து வரும் வருவாயில் 5% எனக்குத் தருவதாகப் பேசிப்பார்த்தார்கள். பேரம் என்னவென்றால் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்றும், எங்கள் தரப்புக்காக வாதாடுவதற்கு அவர்கள் கூறும் வழக்கறிஞரையே நியமிக்க வேண்டும் என்பதும்தான். நான் அவர்களிடம் சொன்னேன்: “நன்றி. எனக்கு உங்கள் பணம் வேண்டாம். வீரேந்திர குமார் விற்பனைக்கு இல்லை!”

உங்கள் வாழ்க்கையின் மற்றுமொரு முக்கியமான அம்சம் மதச்சார்பின்மை கோட்பாடுகள் மீதான உங்களின் உறுதியான ஈடுபாடு. நம் தேசத்தின் மதச்சார்பின்மைக் கோட்பாடுகளுக்குத் தற்போது எழுந்துள்ள அச்சுறுத்தல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நமது மதச்சார்பின்மை அம்சங்களை அச்சுறுத்தும் குறிப்பிட்ட சில போக்குகள் தலைகாட்டத் தொடங்கியிருப்பது உண்மைதான். எனினும், நம் மரபுகளை வலுவாகக் காப்பாற்றும் சக்திகள் நமது பொது வாழ்க்கையிலேயே காணப்படுகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும். இதுதான் முன்னே செல்வதற்கான சரியான பாதையை அறிவதற்கான தொடர்ச்சியான போராட்டம். இந்தப் போராட்டம் நமக்கு வெளிச்சத்தையும் வெற்றியையும் இறுதியில் தரும் என்று நம்புகிறேன்.

சரி… ஆனால், மகாத்மா காந்தியின் பெருமைகளைப் பற்றி அவரது 150-வது பிறந்தநாளில் எழுத வி.டி.சாவர்க்கரின் மிகப் பெரிய சீடரை உங்கள் பத்திரிகை தேர்ந்தெடுத்தது பெரும் சர்ச்சையானது. என்ன விதமான கொள்கை இது?

அந்த நாளன்று நடுப்பக்கக் கட்டுரை எழுதுவதற்கு ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பாகவத்தைத் தேர்ந்தெடுத்தது தீர்மானகரமான முடிவே. நமது சமூகத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் பற்றிய விவாதமொன்றை உருவாக்க நாங்கள் விரும்பினோம். காந்திஜி இன்று எங்கே இருக்கிறார்? ஏன் நாம் கோட்சேவுக்குக் கோயில்களைக் கட்டிக்கொண்டிருக்கிறோம்? இந்த விஷயங்களெல்லாம் திரும்பத் திரும்ப விவாதிக்கப்பட வேண்டும். நாங்கள் எடுத்த முடிவு பெரும் அளவிலான சர்ச்சையையும் மக்களிடையே விவாதங்களையும் ஏற்படுத்தியதால் அந்த முடிவு சரியே. ஒரு ஜனநாயக சமூகத்தில் ஒரு பத்திரிகையிடமிருந்து நிச்சயமாக இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

1977-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஜனதா கட்சியில் ஆர்எஸ்எஸ் பின்னணியுள்ளவர்களையும் சேர்த்துக்கொள்வதாக ஜே.பி. முடிவெடுத்ததன் பின்னணியிலும் இதே மாதிரியான தர்க்கம்தான் சொல்லப்பட்டது. ஆனால், பிற்பாடு அது ஜனதா கட்சிக்குள்ளும் அதன் அரசாங்கத்துக்குள்ளும் தீவிரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியது உங்களுக்குத் தெரியும். இது போன்ற கொள்கைகள் சந்தர்ப்பவாதம்தான்… இல்லையா?

ஜே.பி. அப்போது எந்தத் தவறையும் செய்யவில்லை. எந்தப் பதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை. தார்மீக சக்தியைத் தவிர எந்த சக்தியையும் அவர் பிரயோகிக்கவில்லை. இந்திரா காந்தி 1977-ல் தேர்தலை நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தபோது எங்களில் பெரும்பாலானோரும் சிறையில் இருந்தோம். வெவ்வேறு கட்சிகளின் கூட்டணிதான் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை அமைத்தது. ஜனதா கட்சி என்பது அதற்குப் பின்னால்தான் உருவாக்கப்பட்டது... இரட்டை உறுப்பினர்முறை குறித்து மது லிமாயே உள்ளிட்ட தலைவர்கள் கட்சியில் கேள்வி எழுப்பியபோது நானும் அரங்கில் ஸ்ரீதரனையும் போன்றவர்கள் லிமாயேவை ஆதரித்தோம்.

நீங்கள் ஒரு சோஷலிஸ்ட், உங்கள் வாழ்க்கை முழுவதும் காங்கிரஸை எதிர்த்துவந்தீர்கள், அப்படியும் ஒருகட்டத்தில் இடதுசாரிக் கூட்டணியை விட்டுவிட்டு காங்கிரஸ் தலைமையிலான ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’யில் இணைந்தீர்கள். இதுபோன்ற அரசியல் அந்தர்பல்டிகளை எப்படி விளக்குவீர்கள்?

ஆமாம், அது நடக்கத்தான் செய்தது. நமது அரசியலில் கஷ்டமான தருணமொன்றில் அப்படி நடந்தது.

இந்திய ஊடக உலகில் உங்கள் பணியைப் பற்றிப் பேசுவோம். பல தசாப்தங்களாக ஒரு செய்தித்தாளை நீங்கள் நடத்திவருகிறீர்கள்; நாடு தழுவிய ஊடக அமைப்புகளான பிடிஐ, ஐஎன்எஸ் போன்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்திருப்பதால் இந்திய ஊடகங்களின் அதிகாரபூர்வக் குரலாகவும் இருந்துவந்திருக்கிறீர்கள். இன்றைய இந்திய ஊடகங்களின் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கேயும் உலக அளவிலும் ஊடகங்களில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்களெல்லாம் சமூகம், தொழில்நுட்பம், ஊடகம் இயங்கும் விதம் என்று பல அடுக்குகளிலும் நிகழ்ந்தவை. பிடிஐயை ஒரு எடுத்துக்காட்டாகப் பாருங்கள். தற்போது உள்ளது நாம் அறிந்த பழைய பிடிஐ அல்ல. அதேபோல, பத்திரிகைகளும் மாற்றமடைந்திருக்கின்றன. செய்தித்தாள்கள் பலவும் தவிர்க்கவியலாத அழிவைச் சந்திக்க பல காரணங்கள். ஆங்கிலச் செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டால், மலிவு விலைப் போட்டி எனும் தற்கொலை முயற்சியில் அவை ஈடுபட்டிருக்கின்றன. அது அவர்களுக்குப் பேரழிவையே கொண்டுவரும். சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தங்களை மீள்தன்மை கொண்டவையாக ஆக்கிக்கொண்டு இன்னமும் தங்களைத் தக்கவைத்திருக்கும் பிராந்திய மொழிகளின் பத்திரிகைகள் மேம்பட்டவை என்று சொல்வேன். ஊடகச் சுதந்திரம் என்பது உங்கள் கையிலும் இருக்கிறது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் பிடிஐ தலைவராக இருந்தேன். அயோத்தியை நோக்கி கரசேவகர்கள் போய்க்கொண்டிருந்தார்கள், பதற்றம் அதிகரித்துக்கொண்டிருந்தது, ஒருநாள் பிடிஐ அலுவலகத்துக்குப் பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. டிசம்பர் 6-ம் தேதி நிகழவிருக்கும் சம்பவங்களைக் குறித்து செய்தி தரும்போது எச்சரிக்கையாக இருக்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டதாக பிடிஐ பொதுமேலாளர் என்னிடம் கூறினார்.

டிசம்பர் 6 அன்று அயோத்தியில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்துப் பிரதமருக்குத் தெரிந்திருப்பதை உணர முடிந்தது. “என்ன நடக்கப்போகிறது என்பதைத்தான் பார்த்துவிடுவோமே. எப்படியிருந்தாலும் இன்னும் டிசம்பர் 6 வரவில்லைதானே!” என்றேன் நான். அயோத்தியில் கரசேவகர்கள் அதற்கு முந்தைய நாளில் கூடியிருந்தபோது மீண்டும் பிரதமர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நான் என் பொதுமேலாளரிடம் சொன்னேன், “பிரதமர் நாட்டை நடத்தட்டும், நான்தான் பிடிஐயை நடத்தப்போகிறேன்!” அயோத்தியில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் எனக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று என் அலுவலகத்தில் சொல்லியிருந்தேன். அடுத்த நாள் மதியம் ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது’ என்று எங்களுக்கு செய்தி வந்தது. அந்தச் செய்தியை ஒரு மாற்றமும் இல்லாமல், உடனடி முக்கியச் செய்தியாக அப்படியே எங்கள் கம்பிச் சேவைகள் வழியாகவும், எங்களுடன் ஒப்பந்தத்தில் இருந்த ராய்ட்டர்ஸின் கம்பிச் சேவைகள் வழியாகவும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பும்படி சொன்னேன். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி அது. ஆனால், எங்கள் போட்டி நிறுவனங்கள் ‘பாபர் மசூதி மிகவும் சேதப்படுத்தப்பட்டது’ என்று மட்டுமே கூறின. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளைப் பல தடவை நான் எடுக்க வேண்டிவந்தது, இதனால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்பேற்கவும் வேண்டியிருந்தது. இப்போது இது மாதிரி விஷயங்களெல்லாம் மேலும் கடினமாகின்றன.

நம் ஊடகங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஊடகங்கள் நீடிக்கவே செய்யும். எனினும், அவையெல்லாம் உள்ளடக்கத்திலும் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும் மாபெரும் மாற்றத்துக்கு உள்ளாகும்.

இறுதியாக, வாழ்க்கையில் உங்களுக்கு ஏதேனும் வருத்தங்கள் உண்டா? இதை வேறு விதமாகச் செய்திருக்கலாம் என்று எதையாவது நினைத்ததுண்டா? உங்களுக்கு வேதனையை ஏற்படுத்தும் ஏதாவது இருக்கிறதா?

வாழ்க்கையைப் பொறுத்தவரை வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. ஏனெனில், வாழ்க்கையென்பது ஒரு பயணத்தைத் தவிர வேறொன்றுமில்லை; அதன் வழியில் நல்லது கெட்டது என்று எது வேண்டுமானாலும் வரலாம். நிச்சயமாக, திரும்பிப் பார்க்கும்போது சில விஷயங்களை வேறு விதமாகச் செய்திருக்கலாம் என்றும், சில செயல்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தோன்றவே செய்யும். என் வாழ்க்கையில், நான் எப்போதும் துயர உணர்வுடன் நினைத்துப் பார்க்கும் விஷயம் ஒரு முக்கியமான கட்டத்தில் என் மனைவியை நான் நடத்திய விதமே. ஸ்ரேயுவுக்கு முன்பு எங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அப்போதெல்லாம் குடும்பத்துடன் செலவிட எனக்கு நேரமே இருக்காது. ஒருநாள் தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் புறப்பட்டுக்கொண்டிருந்தபோது எங்கள் ஒரு வயதுக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று என் மனைவி என்னிடம் கூறினார்.

ஆனால், நானோ பக்கத்திலுள்ள பனமரம் என்ற ஊரில் உள்ள ஒரு மருத்துவரைப் போய்ப் பார்க்குமாறு என் மனைவியிடம் கூறிவிட்டு விரைந்து சென்றேன். மாலையில் வீட்டுக்கு வரும்போது சில கார்களும் மக்கள்திரளும் வீட்டு முன்முற்றத்தில் இருப்பதைப் பார்த்தேன். என் மகன் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், தகனம் முடிந்த அடுத்த நாளே மறுபடியும் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றுவிட்டேன். தனது மகனை இழந்த வேதனையில் இருந்த தாயான என் மனைவியிடம் எவ்வளவு கடுமையாக நான் நடந்துகொண்டிருந்திருக்கிறேன் என்பதை உணர்வதற்குப் பல ஆண்டுகள் ஆயின. அவள் துக்கத்தில் இருக்கும்போது நான் அவளுக்குத் துணையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், நானோ அதைச் செய்யத் தவறிவிட்டேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு என் மகன் இதைப் பற்றி எழுதியபோது அவர்கள் என்னை இன்னும் மன்னிக்கவில்லை என்பதை உணர முடிந்தது. ஆனால், அதுதான் வாழ்க்கை, வருத்தப்படுவதில் பயனில்லை.

© https://www.kochipost.com/

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

என்.பி. செக்குட்டி எடுத்த இந்தப் பேட்டி ‘தி கொச்சி போஸ்ட்’ இதழில் முதலில் வெளியானது; முறையான அனுமதியோடு இங்கு வெளியிடப்பட்டிருக்கிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x