வெண்ணிற நினைவுகள்- கிராமத்தின் முகம்

வெண்ணிற நினைவுகள்- கிராமத்தின் முகம்

Published on

கிராமம் என்றாலே ஒன்றிரண்டு குடிசை வீடுகள், ஏர்க்கலப்பையைத் தோளில் சுமந்த விவசாயி, மண்கலயத்தில் சோறு கொண்டுபோகும் மகள், மாட்டுவண்டிகள், பஞ்சாயத்து நடக்கும் ஆலமரம் என்றிருந்த தமிழ் சினிமாவைப் புரட்டிப்போட்ட திரைப்படம் ‘16 வயதினிலே’. அதுவரை ஸ்டுடியோக்களுக்குள் இருந்த தமிழ் சினிமாவை உண்மையான கிராமங்களை நோக்கி திசைதிருப்பியவர் இயக்குநர் பாரதிராஜா. இன்றுவரை தமிழில் வெளியாகியுள்ள கிராமிய அழகு சார்ந்த திரைப்படங்களுக்கு அவரே பிதாமகர். பாரதிராஜா என்ற பெருங்கலைஞனின் மூலம் தமிழ் சினிமா தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டது.

‘16 வயதினிலே’ படம் கிராமிய வாழ்க்கையை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறது. மயிலும் சப்பாணியும் பரட்டையும் குருவம்மாளும் தமிழர் மனதில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டார்கள். ‘16 வயதினிலே’ படத்தில் வரும் மயிலு அந்தக் கிராமத்திலே அதிகம் படித்தவள். பத்தாம் வகுப்பு படித்து முடித்த பெண் என்பது சாதாரண விஷயமில்லை. 1977-ல் படம் வெளியாகியிருக்கிறது. அன்று வரை கிராமப்புறங்களில் பெண் கல்வி என்பது அபூர்வமான விஷயமே. பெரும்பான்மை விவசாயக் குடும்பங்களில் பெண்கள் பருவம் எய்திய ஒன்றிரண்டு ஆண்டுகளில் திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். ஆரம்பக் கல்வி பயின்றதோடு அவர்களின் பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்துவிடும். ஆனால், மயிலு அந்தக் கிராமத்திலே பத்தாம் வகுப்பு பாஸாகிவிட்டாள். அதைத் தெரிந்தவர்களிடம் சொல்லி மகிழ்கிறாள். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பதுபோல பேசுகிறவள் மயிலின் தாய் குருவம்மாள் மட்டுமே.

மயிலு பத்தாம் வகுப்பு பாஸாகிவிட்டாள் என்றதும் ஒரு கிராமவாசி, “அப்போ பயாஸ்கோப்புல போயி நடிக்கச் சொல்லு” என்கிறான். அது வெறும் வசனமில்லை. அழகான படித்த பெண்கள்தான் சினிமாவில் நடிக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடு. மயிலு தந்தையில்லாத பெண். குருவம்மாள் என்ற பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பு நடத்தும் தாய் அவளைப் படிக்க வைக்கிறாள். உண்மையில், மயிலு ஒரு கனவுகாண்கிறாள். படிப்பு அவளை வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கொண்டுசென்றுவிடும் என்று உள்ளூர நம்புகிறாள். தோழிகள் ஊருக்கு வரும்போது அவள் தன் வீட்டை அலங்கரித்துக்கொள்கிறாள். படித்தவளாகத் தன்னைக் காட்டிக்கொள்வதில்தான் எத்தனை ஈடுபாடு.

அவள் தன் சந்தோஷத்தை சப்பாணியிடம் மட்டும்தான் பகிர்ந்துகொள்வதில்லை. முதற்காட்சியிலே சப்பாணியை, “வாடா மருமகனே” என்றுதான் குருவம்மாள் அழைக்கிறாள். குருவம்மாளுக்கும் சப்பாணிக்குமான உறவு அழகானது. அவள் ஒருத்திதான் சப்பாணியைப் புரிந்துகொண்டவள். படத்தின் ஆரம்பக் காட்சியில் வெள்ளைக் கோழியைக் காணவில்லை என்று குருவம்மாள் சண்டையிடும்போது அவளது ஆளுமை வெளிப்படத் தொடங்கிவிடுகிறது. குருவம்மாளின் கடந்த கால வாழ்க்கை, படத்தில் சொல்லப்படாத அடிநாதமாக இருக்கிறது.

அதுபோலவே சப்பாணி. அவன் பெயரைக்கூட யாரும் சொல்வதில்லை. ஒரு காட்சியில் மயிலுதான் அவனது பெயர் கோபால் என்று சொல்லி, அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிடாதவர்களைக் கன்னத்தில் அறையும்படி சொல்கிறாள். அப்படியே செய்கிறான் சப்பாணி. சப்பாணியால் கோபாலாக மாற முடியவே இல்லை. ஆனால், அவன் மனதுக்குள் தனது பெயரை மீட்டுத் தந்து, தனக்கான அடையாளத்தை உருவாக்கியவள் மயிலு என்பது ஆழமாகப் பதிந்துபோயிருக்கிறது.

அதுபோலவே கிராமத்துக்கு வரும் கால்நடை மருத்துவர். அவர் வெறும் மருத்துவரில்லை. படித்த, நாகரிகமான, நகர வாழ்க்கையின் அடையாளம். வெளியாட்கள் கிராமத்துக்கு வரும்போது எப்போதும் கிராமம் அவர்களை வியந்து பார்க்கவும்செய்யும். சந்தேகம் கொள்ளவும் செய்யும். இந்தப் படத்தில் வரும் டாக்டர் கண்ணாடி அணிந்திருக்கிறார். அநேகமாகப் படத்தில் கண்ணாடி அணிந்த ஒரே கதாபாத்திரம் அவர்தான். நானே என் சிறுவயதில் கண்டிருக்கிறேன். எனது பள்ளி ஆசிரியர்களில் கண்ணாடி அணிந்தவர்களுக்குக் கிடைத்த மரியாதை, கண்ணாடி அணியாத ஆசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை. அதிலும் கண்ணாடி அணிந்த பெண் என்பது கிராமவாசிகளுக்கு ஆச்சரியமானது. தலைமை ஆசிரியை கண்ணாடி அணிந்து வருகிறார் என்பது கிராமவாசிகள் கூடிப் பேசும் விஷயமாக இருந்தது. ஒருவகையில், படித்தவர்கள்தான் கண்ணாடி அணிவார்கள் என்று கிராமவாசிகள் நம்பினார்கள்.

பரட்டை என்ற பெயரிலே அவன் கட்டுப்பாடு இல்லாமல் வாழ்பவன் என்ற நிஜம் புலப்பட்டுவிடுகிறது. பரட்டை சீட்டு விளையாடுகிறான். அதில் ஏமாற்றுகிறான். எதிர்ப்பவர்களுடன் வம்புச்சண்டை செய்கிறான். ‘இது எப்படியிருக்கு’ என்று அவன் அடிக்கடி சொல்வது, தன்னை ரசித்துக்கொள்ளும் வசனமே. படத்தின் தொடக்கக் காட்சியில் ஆளற்ற ரயில் நிலையத்தில் மயிலு காத்திருக்கிறாள். முடிவற்ற தண்டவாளம் நீண்டு செல்கிறது. அவள் யாருக்காகக் காத்திருக்கிறாள் என்று தெரிவதில்லை. ஆனால், அவள் முகபாவத்தில் அவள் யாரையோ தேடி ஏமாந்து நிற்பது உணர்த்தப்படுகிறது. ரயில் வந்து கடந்துபோகும்போது, கடைசிப் பெட்டியின் முதுகு வரை காட்டப்படுகிறது. ரயில் பாரதிராஜாவின் படங்களில் ஒரு குறியீடுபோலவே தொடர்ந்து இடம்பெறுகிறது. பாரதிராஜா அதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட மனிதர்களைப் போலின்றி, நிஜமான மனிதர்களை, அவர்களின் இயல்பான தோற்றத்தைத் திரையில் பதிவுசெய்திருக்கிறார். ஒரு படத்தின் நாயகன் இப்படிக் கோவணத்துடன் நடந்துவருவான் என்பது அதுவரை சினிமாவில் காண முடியாதது. ஆனால், கிராம வாழ்க்கையில் மிக உண்மையான காட்சி.

வித்தியாசமான காட்சிக் கோணங்கள். தனித்துவமான கதை சொல்லும் முறை. உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து வெளிப்படுத்தும் விதம். யதார்த்தமான கதாபாத்திரங்கள். சிறந்த இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என பாரதிராஜா தனக்கான திரை அழகைத் தனது முதல் படத்திலிருந்தே உருவாக்கியிருக்கிறார். அது ஒரு சாதனை. பின்னாளைய படங்களில் அவரது கலைநுட்பம் மேலும் மெருகேறி இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக அவரைக் கொண்டாடச் செய்தது. கமல், ரஜினி, ஸ்ரீதேவி மூவரும் கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்து நடித்திருக்கிறார்கள். அவர்கள் உடல்மொழியிலும் பேச்சிலும் தனித்துவம் மிளிர்கிறது. இளையராஜாவின் இசை கிராமத்தின் ஆன்மாவை உயிர்த்துடிப்புடன் பதிவுசெய்திருக்கிறது. கங்கை அமரனின் அற்புதமான பாடல்கள், நிவாஸின் நிகரற்ற ஒளிப்பதிவு, கலைமணியின் வசனம் எனச் சிறந்த பங்களிப்பு படத்தை அரிய அனுபவமாக்குகிறது.

பாரதிராஜா ஒரு இயக்குநர் மட்டுமில்லை. ஒரு பெரும் திரை இயக்கம். அவரால் உருவாக்கப்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் சிறந்த அடையாளங்களாக இன்றும் இருக்கிறார்கள். கிராமங்களை நோக்கி பாரதிராஜா திருப்பிய கேமராவின் தொடர் வளர்ச்சியே இன்றைய யதார்த்தப் படங்கள். அதற்காகத் தமிழ் சினிமா என்றும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.

- எஸ்.ராமகிருஷ்ணன், ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in