Published : 31 May 2020 06:58 am

Updated : 31 May 2020 06:58 am

 

Published : 31 May 2020 06:58 AM
Last Updated : 31 May 2020 06:58 AM

எது நல்ல பொருளாதாரம்?

which-is-good-economy

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ‘ஏழைகளுக்கான பொருளாதாரம்’ என்ற புத்தகத்தை எழுதிய அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ தம்பதியின் இரண்டாவது புத்தகம் ‘குட் எகனாமிக்ஸ் ஃபார் ஹார்டு டைம்ஸ்’. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் புத்தகம் வெளியான நேரத்தில், அவர்களது பொருளாதாரப் பங்களிப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு மொத்த உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளையும், அவற்றுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதையும் இந்தப் புத்தகம் கேலிசெய்திருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

கார்ல் மார்க்ஸ், பால் சாமுவெல்சன் போன்று ஏறக்குறைய ஒரு இலக்கியப் பிரதியின் நடையில் எழுதப்பட்ட பொருளாதாரப் புத்தகம் இது. சத்யஜித் ராய் இயக்கிய திரைப்படங்கள், குர்த் வானிகட் எழுதிய ‘பிளேயர் பியானோ’ நாவல், டி.எஸ்.எலியட் தொடங்கி, பிரிட்டிஷ் சோமாலிய இளம் கவிஞர் வார்சன் ஷைர் வரையில் கட்டுரைக்கு மிகப் பொருத்தமான கவிதை வரிகள் என்று இந்தப் புத்தகத்தின் மேற்கோள்கள் பல வகைப்பட்டவை.


நம்பிக்கையை இழந்த பொருளியல்

‘தமது துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அதைக் குறித்துப் பேசும்போது எந்த அளவுக்கு அதை நம்புகிறீர்கள்?’ இந்தக் கேள்விக்கான பதில்களில் செவிலியர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள்: 84%. அரசியலர்களுக்கு 5%. பொருளாதார அறிஞர்களின் வார்த்தைகள் மீதான நம்பிக்கை 25% மட்டுமே. இப்படியொரு கருத்துக்கணிப்பைச் சொல்லித்தான் பானர்ஜியும் டஃப்லோவும் தங்களது புத்தகத்தைத் தொடங்குகிறார்கள். பொருளியல் அறிஞர்களின் ஆய்வுகளும் முடிவுகளும் சராசரி மக்களின் பார்வையிலிருந்து மாறுபட்டிருப்பதையே இந்தக் கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

தொலைக்காட்சி விவாதங்களின் வழியாக நமக்குப் பொருளியல் அறிஞர்களாக அறிமுகமாகும் நபர்கள், தாங்கள் சார்ந்த வங்கி அல்லது வணிக நிறுவனத்தின் குரலையே எதிரொலிக்கிறார்கள்; மக்களோடு அவர்களுக்கு எந்தப் பிணைப்பும் இல்லை. நிறுத்தி நிதானமாக விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு சாத்தியமில்லை என்பதால் பொருளியல் பேராசிரியர்களும் தொலைக்காட்சி விவாதங்களிலிருந்து விலகியே நிற்கிறார்கள். மேலும் பொருளியலாளர்கள், காரண காரியங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட அறிவியலாளர்களும் அல்ல. அவர்கள் பெற்ற அறிவாலும் அனுபவத்தாலும் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கிறார்கள். அவ்வளவே. அவர்களின் கணிப்புகளுக்கு எந்தச் சூத்திரமும் கிடையாது, வளர்ச்சி விகிதம் பற்றிய கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிவதற்கும் அதுவே காரணம்.

தவறுகளுக்குக் காரணம்

சந்தைப் பொருளாதாரத்தின் இந்தக் கோளாறுகளைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர்கள், நல்ல பொருளாதாரத்துக்கும்கூட அது பொருந்தக்கூடியதுதான் என்று கூறுகிறார்கள். புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் பல கட்ட மருத்துவப் பரிசோதனைகளைப் போலவேதான் பொருளாதாரத் தீர்வுகளுக்கும் அறிவியல்பூர்வமாக முயல வேண்டும். அவ்வாறு முயலும் நல்ல பொருளியலாளர்கள் இவ்வுலகைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்ன முடிவுக்கு எப்படி வருகிறார்கள் என்பதையும் விளக்க முயல்கிறது இந்நூல். வருமானமும் நுகர்வும் மட்டுமே மனிதனின் பொருளாதார நிலையை எடுத்துச்சொல்லிவிடாது. சமூக மதிப்பு, குடும்ப நலன்கள், கண்ணியம், மகிழ்ச்சி ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். வருமானத்தின் அடிப்படையிலேயே கணக்கிடுவதுதான் பொருளியல் அறிஞர்களைத் தவறான கொள்கை முடிவுகளை எடுக்க வைக்கிறது. மனிதனின் கண்ணியத்தை மீட்டெடுப்பதே இந்தப் புத்தகம் முன்வைக்கும் விவாதம். ஆசிரியர்களின் முடிவுகளிலிருந்து வேறுபட்டாலும் அவர்களின் நம்பிக்கையையும் அச்சத்தையும் சக பொருளியலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்நூல் விடுக்கும் வேண்டுகோள்.

குடியேற்றத்தின் கற்பிதங்கள்

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தற்போது குடியேற்றம்தான் மிக முக்கிய அரசியல் பிரச்சினையாக இருந்துவருகிறது. இந்தியாவும்கூட அதற்கு விதிவிலக்கு இல்லை என்பதற்கு அஸாம் ஓர் உதாரணம். தொழிலாளர்கள் புலம்பெயர்வதற்குக் காரணம் அவர்களுக்கு அயல்நாடுகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் அதிக ஊதியமும் மட்டுமல்ல, சொந்த நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவுவதும்தான் என்று மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்கள் இந்தப் பொருளியல் அறிஞர்கள். கூடுதலாக ஊதியம் கிடைக்கும் என்ற நிலையிலும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு நகராதவர்கள், நாட்டின் எல்லைகளைக் கடப்பது பாதுகாப்பான சூழலுக்காகத்தான்.

அதே நேரத்தில், குடியேற்றங்களைப் பொறுத்தவரைக்கும் தொழிலாளர்கள் அதிகம் கிடைப்பதால் கூலி குறைகிறது என்பது போன்ற தேவை-அளிப்பு விதிகள் பொருந்துவதில்லை என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறது ஒரு கட்டுரை. அதைப் போல, இறக்குமதியாகும் கச்சாப் பொருட்களுக்கும் உற்பத்திப் பொருட்களுக்கும் சுங்க வரிகளை உயர்த்துவதும்கூட பொருளாதார வளர்ச்சிக்குத் துணைசெய்வதில்லை என்பதை விவரிக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்புகளின் பின்னால் உள்ள அபத்தங்களைச் சொல்வதாகவும் இக்கட்டுரைகளைக் கொள்ளலாம்.

சமகாலப் பிரச்சினைகள்

பொருளியலாளர்கள் மக்களிடம் நிலவிவரும் நம்பிக்கைகளுக்கும், அவர்கள் அளிக்கும் முன்னுரிமைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது மற்றொரு கட்டுரை. மக்கள் தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் ஒருபோதும் தவறானவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. பொருளாதார வளர்ச்சியின் எல்லைகள், சமத்துவமின்மையால் ஏற்படும் துயரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் ஆகியவற்றை விவரிக்கும்போது மக்களின் விருப்பங்கள், அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியது பொருளியலாளர்களின் கடமை என்று வலியுறுத்துகிறார்கள் பானர்ஜியும் டஃப்லோவும்.

குடியேற்றம், சுங்க வரிகள், வரிவிகிதங்கள், செயற்கை நுண்ணறிவு என்று இந்த நூற்றாண்டில் பொருளியல் துறை எதிர்கொண்டுவரும் முக்கியப் பிரச்சினைகளையெல்லாம் ஆய்வுகளின் துணைகொண்டு விவாதிக்கிறது இந்தப் புத்தகம். உற்பத்தியாளர்-நுகர்வோர் என்று வரவு-செலவு கணக்கைப் பேசாமல், அரசு-குடிமக்கள் என்று அரசியலும் பேசாமல் செல்வந்தவர்கள்-வறியவர்கள் என்று மக்களைப் பற்றியே இந்நூல் முழுவதும் பேசுகிறது. மக்களை, அவர்களின் மேம்பாட்டைப் பேசுவதுதான் இந்தக் காலத்துக்கு மட்டுமல்ல, எந்தக் காலத்துக்கும் நல்ல பொருளியலாக இருக்க முடியும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

----------------------------------------------------------------------------------------------------------

குட் எகனாமிக்ஸ் ஃபார் ஹார்டு டைம்ஸ்

அபிஜித் வி.பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ

ஜகர்நாட் வெளியீடு

விலை: ரூ.699


எது நல்ல பொருளாதாரம்குட் எகனாமிக்ஸ் ஃபார் ஹார்டு டைம்ஸ்அபிஜித் வி.பானர்ஜிஎஸ்தர் டஃப்லோ

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x