Last Updated : 30 May, 2020 07:17 AM

 

Published : 30 May 2020 07:17 AM
Last Updated : 30 May 2020 07:17 AM

இந்தியாவைப் பீடித்திருக்கும் வதந்தி நோய்!

இந்தியா ஏமாற்றப்படுகிறது
தொகுப்பு: பிரதீக் சின்ஹா, சுமையா ஷேக், அர்ஜூன் சித்தார்த்
தமிழில்: இ.பா.சிந்தன்
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002.
தொடர்புக்கு: 99425 11302
விலை: ரூ.320

இட்டுக்கட்டப்பட்ட கதைகள் ஒன்றும் புதிய விஷயமல்ல. அச்சுப் புத்தகங்களில்கூட தவறான அல்லது இல்லாத ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி திரித்து எழுவது வரலாறு நெடுக இருக்கிறது. பின்பு, அந்தத் தவறான தகவல்கள் வேறுவேறு இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டு, அதுவே உண்மை என்பதாக உலவத் தொடங்கிவிடும். அப்படியான விஷயங்கள் நம் சமூக வலைதள யுகத்தில் மேலும் சிக்கலாக மாறியிருக்கின்றன; ஒருவித நோய்மையாகப் பீடித்திருக்கின்றன. சமூக வலைதளங்கள் உருவாக்கியிருக்கும் புதிய களம், இந்த வதந்திகளை எப்படியான மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன என்பதை வெளிக்கொண்டுவருகிறது ‘இந்தியா ஏமாற்றப்படுகிறது’ புத்தகம்.

இணையம் மிக வேகமாக வளரத் தொடங்கியிருக்கும் இந்தத் தசாப்தத்தில் ‘ஃபேக் செய்தி’களும் அசுர வளர்ச்சியடைந்திருக்கின்றன. அதற்கு நாம் கொடுத்திருக்கும் விலையும் மிக அதிகம். தடுப்பூசிக்கு எதிரான வதந்தியால் நிறைய இளம் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தனர், குழந்தைகளைக் கடத்துவதாகத் தவறாகப் பரவிய செய்தியால் கும்பலாகக் கொலை செய்யும் அவலம் பல இடங்களில் அரங்கேறியது, தவறான செய்திகள் வழியாக அரசியல் தலைவர்களுக்கும் பிரபலங்களுக்கும் இழுக்கு ஏற்படுத்தியது, கலவரத்தை உருவாக்கியது, வரலாறு திரிக்கப்பட்டது, மதவெறி அதிகரித்தது, போலி மருத்துவம் அதிகரித்தது… இப்படி அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் தனிநபர் மனநிலையிலும் இவை பெரும் எதிர்மறைத் தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன. சமூக ஊடகங்களிலும் பத்திரிகை ஊடகங்களிலும் பரப்பப்படும் இப்படியான பொய்யான செய்திகள், வதந்திகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக ஒரு சிறு குழுவால் 2017-ல் ‘ஆல்ட் நியூஸ்’ எனும் இணையதளம் உருவாக்கப்பட்டது (இன்றும் அந்தப் பணியை ‘ஆல்ட் நியூஸ்’ தொடர்ந்துகொண்டிருக்கிறது). ‘ஆல்ட் நியூஸ்’ வெளிக்கொண்டு வந்த விஷயங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

என்ன செய்தி பரப்பப்பட்டது, எப்படிப் பரப்பப்பட்டது, உண்மை என்ன? இப்படி மூன்று பகுதிகளாகப் பிரித்து, 82 விஷயங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. வதந்திகளைப் பரப்புவதற்காகவே போலியான இணையதளங்கள் உருவாக்கப்படுவதும், தெரிந்தும் தெரியாமலும் பொய்யான செய்திகளை அரசியல்வாதிகளும் பிரபலங்களும் பகிர்வதும், அதைப் பத்திரிகை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதும் விவாதம் நடத்துவதும் எனப் பல அதிர்ச்சி தரும் விஷயங்களை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியிருக்கிறது. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x