Published : 30 May 2020 07:14 AM
Last Updated : 30 May 2020 07:14 AM

பூச்சிகள், பறவைகள், விவசாயிகள்!

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விளைநிலங்களை முற்றிலுமாக அழித்துக்கொண்டிருக்கிறது. விவசாயம் என்பது இயற்கையோடு மனிதன் நடத்தும் இடைவிடாத யுத்தம்தான். எட்டிப் பார்க்காத மேகங்கள், கொட்டித் தீர்க்கும் மழை என்ற வழக்கமான தட்பவெப்பச் சோதனைகளைத் தாண்டி அவ்வப்போது வெட்டுக்கிளிகள், எலிகள், பறவைகளும் விவசாயிகளைச் சோதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய வெட்டுக்கிளிகளைப் போல, அறுபதுகளின் இறுதியில் தஞ்சை மாவட்டத்தில் செறவி என்ற பறவையினம் பெருங்கூட்டமாகத் திரண்டுவந்து நெற்பயிர்களை அழித்தது. பர்மாவிலிருந்து கோடியக்கரைக்கு வழக்கமாக வருகை தரும் இந்தப் பறவையினம் சிறவி, சிறவை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

ஜூலை 14, 1967-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவசாயத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், செறவிகளின் படையெடுப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அன்றைய வேளாண் துறை அமைச்சர் ஏ.கோவிந்தசாமி, ‘சிறவை என்ற பறவை தஞ்சை மாவட்டத்தில் பயிர்களை நாசம் செய்துவிடுவதாகச் சொல்லப்பட்டது. பறவைகள் சரணாலயத்துடன் கலந்து ஆலோசித்து, அந்தப் பறவையை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்கலாம். அதுவரை பறவைகளை விரட்டுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாம்’ என்று விடையளித்திருக்கிறார். (ஏ.கோவிந்தசாமி சட்டமன்ற உரைகள், தொகுப்பு: எஸ்.எஸ்.மணியன்.)

அது அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த நேரம். உணவுப் பஞ்சத்தைப் போக்க, உடனடியாக உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கால நெருக்கடி. அது குறித்து விவாதிக்க விவசாயிகளை ஒருங்கிணைத்துக் கருத்தரங்குகளை நடத்தினார் அண்ணா. ஆகஸ்ட் 15, 1967-ல் மன்னார்குடியில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் விவசாயக் கூலி உயர்வு, உணவுப் பதுக்கல், வேதியுரங்களுக்கான மத்திய அரசின் மானியம் நிறுத்தப்பட்டது, நீர்ப் பாசனத் திட்டங்கள், கிராமங்களின் அடிப்படை வசதிகள், ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி தெளிப்பு ஆகியவற்றுடன் செறவிகளின் படையெடுப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்தக் கருத்தரங்கில் அண்ணா ஆற்றிய நிறைவுரையில் செறவிகளைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

‘பயிர்களை அழிக்கும் சிறவி பறவையைப் பற்றி விவசாயிகளுக்கு ஒரு மாதிரி அபிப்பிராயம். காட்டு இலாகா அதிகாரிகளுக்குத் தனி அபிப்பிராயம் இருக்கிறது. ஏதோ அந்தப் பறவைகளையெல்லாம் அழிக்கக் கூடாது என்று காட்டு இலாகாவிலே சொல்வதாக நண்பர்கள் சொன்னார்கள். அந்தக் காட்டு இலாகா அதிகாரிகளை நான் கலந்து பேச இருக்கிறேன். எதனாலே அவர்கள் அந்த சிறவை என்ற பறவை அழிக்கப்படக் கூடாது என்று கருதுகிறார்கள் என்பதற்கான காரணத்தை நான் அவர்கள் மூலமாகக் கேட்டறிய விரும்புகிறேன். இல்லை இது அபூர்வமான பறவைகள், அதனால்தான் அதை அழிக்கக் கூடாது என்ற ஒரு காரணத்தை மட்டும் அவர்கள் சொல்வார்களானால், இருப்பதிலேயே மனிதன்தான் அபூர்வப் பிறவி, அவன் பிழைக்கட்டும். சிறவை இல்லாவிட்டால் போகட்டும் என்று சொல்ல நான் தயாராக இருக்கிறேன் அல்லது வேறு ஏதாகிலும் காரணங்கள் அவர்கள் சொல்வார்களானால் அதை ஆலோசித்துப் பார்க்க வேண்டும்’ என்றார் அண்ணா.

சட்டமன்றத்திலும் விவசாயிகள் கருத்தரங்கிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்ட பறவைகளின் படையெடுப்பு இலக்கியத்திலும் பதிவாகியிருக்கிறது. ‘உயிர் எழுத்து’, ஏப்ரல் 2009 இதழில் பிரசுரமான சிவக்குமார் முத்தய்யாவின் ‘செறவிகளின் வருகை’ சிறுகதை, அதையே தலைப்பாகக் கொண்ட சிறுகதைத் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. சிவக்குமாரின் பெரும்பாலான கதைகளைப் போலவே மனித உறவுகளின் அந்தரங்க விழைவுகள்தான் இந்தக் கதையிலும் மையமாக இருக்கிறது. ஒரு ‘மஞ்சள் பிசாசு’ இழைக்கும் துரோகத்தைச் சொல்லும் இந்தக் கதை, பின்னணியில் பறவைகளின் படையெடுப்பையும் பதிவுசெய்திருக்கிறது.

கடல் திசையிலிருந்து இருநூறு, முந்நூறு எனப் பெருங்கூட்டமாக வந்து கடலோரக் கிராமங்களின் வயல்களில் இறங்கும் செறவிகள், ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் கைப்பிடியளவு நெல்மணிகள்கூட இல்லாமல் உருவித் தின்றுவிடுகின்றன. கறுப்பு நிறத்தில் காக்கையைவிடவும் சிறிதாக இருக்கும் இந்தப் பறவைகள், பெரும்புயலுக்குப் பின்னால் அழிந்துவிட்டதாக ஊர் மக்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சரியமாக மீண்டும் அவை ஊருக்குள் வர ஆரம்பிக்கின்றன. பறவைகளைக் கொல்லக் கூடாது என்ற வனத் துறையின் எச்சரிக்கையால், அவற்றைக் கொல்லாமல் உயிரோடு விரட்டியடிக்க முயல்கிறார்கள். சாதி பேதங்களை மறந்து ஊரிலுள்ள ஆண்களெல்லாம் அணியணியாகப் பிரிந்து, பறையடித்தும் நாட்டுவெடிகளை வெடித்தும் தினைப்புலம் காக்கிறார்கள் என்று நீள்கிறது கதை.

ஒருபக்கம் செறவிகளை விரட்டியடிக்க நிற்கும்போது, இன்னொருபக்கம் இருண்ட மழை மேகங்கள் திரண்டு நின்று அச்சுறுத்துகின்றன. இந்திய விவசாயம் பருவநிலையின் சூதாட்டம் என்றொரு வழக்குண்டு; அதில் விவசாயிகள்தான் பகடைக்காய்கள்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

செறவிகளின் வருகை

சிவக்குமார் முத்தய்யா

சோழன் படைப்பகம்

விற்பனை உரிமை: தோழமை வெளியீடு

தொடர்புக்கு: 94443 02967

விலை: ரூ.150

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x