Published : 24 May 2020 08:09 AM
Last Updated : 24 May 2020 08:09 AM

வெண்ணிற நினைவுகள்: கண்ணீரே சாட்சி

எஸ்.ராமகிருஷ்ணன்

‘துலாபாரம்’ திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய சித்திகள் இருவரும் இரவெல்லாம் அழுதுகொண்டே இருந்தார்கள் என்பது எங்கள் வீட்டின் மறக்க முடியாத நினைவு. ஒரு சினிமா பார்த்துவிட்டு இவ்வளவு அழுவார்களா என்று கேட்கக்கூடும். ‘துலாபாரம்’ பார்த்துவிட்டு, திரையரங்கை விட்டு வெளியே வந்த அத்தனை பேரும் கண்ணைத் துடைத்துக்கொண்டுதான் வெளியே வந்தார்கள் என்பதே நிஜம். இன்று அந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் பலர் அழுதுவிடுகிறார்கள்.

இன்று சோகக் காட்சிகளோ சோகப் பாடல்களோ திரைப்படத்தில் இடம்பெறுவதில்லை. ஒருவேளை சோகக் காட்சி வந்தாலும் அரங்கில் அதைக் கண்டு வெடித்துச் சிரிக்கிறார்கள். கேலிசெய்கிறார்கள். குடியும் அடிதடிச் சண்டைகளும் மலினமான நகைச்சுவைகளுமே படத்தின் தரத்தை நிர்ணயிப்பதாக உள்ள சூழலில், வாழ்க்கைத் துயரைச் சொல்லும் படங்களை எப்படி வரவேற்பார்கள்? பார்வையாளர்களுக்குத் துயரக் கதைகள் பிடிப்பதில்லை என்கிறார்கள். அது உண்மையில்லை.

இருபது வயது பார்வையாளருக்கு அது போன்ற படங்கள் பிடிக்காமல் போகக்கூடும். ஆனால், சினிமா இருபது வயதினர் மட்டுமே பார்க்கும் கலை வடிவம் இல்லையே? மேலும், எல்லோரது வாழ்க்கையிலும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் வந்து போகத்தானே செய்கிறது? துயரமில்லாமல் சந்தோஷத்தை மட்டுமே எந்தக் குடும்பம் அனுபவித்திருக்கிறது? திரையில் சோகத்தை மிகை நாடகமாக்குவது தேவையில்லை என்று சொன்னால் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.

அ.வின்சென்ட் இயக்கத்தில் 1969-ல் வெளிவந்த திரைப்படம் ‘துலாபாரம்’. தோப்பில் பாசி எழுதிய நாடகத்தைத் திரைப்படமாக்கியுள்ளார்கள். மல்லியம் ராஜகோபால் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நான்கு மொழிகளில் வெளியாகி நான்கிலும் படம் வெற்றிபெற்றது. ஏ.வி.எம்.ராஜன், சாரதா, மேஜர் சுந்தர்ராஜன், பாலையா, நாகேஷ் நடித்துள்ளனர். சாரதாவுக்கு இந்தப் படத்தின் மூலமே ‘ஊர்வசி’ விருது கிடைத்தது. படத்தின் பாடல்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக, ‘பூஞ்சிட்டுக் கன்னங்கள்…’ எத்தனை அற்புதமான பாடல். ‘காற்றினிலே, பெரும் காற்றினிலே…’ பாடலும் அது படமாக்கப்பட்டுள்ள விதமும் பிரமாதம். ‘ஆண்டவனும் கோயிலில் தூங்கிவிடும்போது யாரிடத்தில் கேள்வி கேட்பது? ஏழைகளின் ஆசையும் கோயில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது? தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது?’ என்ற கண்ணதாசனின் வரிகள் என்றும் மனதில் ரீங்கரிப்பவை.

படம் நீதிமன்ற விசாரணையில் தொடங்குகிறது. வக்கீல் வத்சலா மூன்று கொலைகள் செய்த தனது தோழி விஜயாவுக்கு அதிகபட்சமாகத் தண்டனை தரப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிடுகிறாள். நிச்சயம் தூக்குத் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று நீதிமன்றத்தில் பேசிக்கொள்கிறார்கள். விசாரணைக் கூண்டில் விஜயா நிழலாகத் தோற்றம் தருகிறாள். மிக அழகான காட்சி அது. அவளது வாழ்க்கை நிலையின் அடையாளம்போலவே அந்த நிழல் இருக்கிறது.

தான் செய்த கொலைகளை அவள் மறைக்கவில்லை. மாறாக, தன்னையும் தூக்கிலிடும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறாள். ஏன் விஜயா அந்தக் கொலைகளைச் செய்தாள் என்ற கேள்வியிலிருந்து படத்தின் கதை தொடங்குகிறது. தனது தோழிக்கு மரண தண்டனை வாங்கித் தர தானே வாதிடுகிறோமோ என்ற கவலையில் காஞ்சனா நீதிமன்றத்தில் ஒதுங்கி நிற்பதும், தன்னைச் சுட்டிக்காட்டி விஜயா கடந்த காலத்தைப் பேசத் தொடங்கும்போது காஞ்சனா முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளும் மிகச் சிறப்பானவை.

கல்லூரிக் காதல் கதையாகத் தொடங்கி, படம் மெல்ல விஜயாவினுடைய வாழ்க்கையின் நெருக்கடிகளுக்குள் நுழைகிறது. காதலித்தவன் கைவிட்ட நிலையில், அவள் ராமுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். அந்தத் திருமணம் மிக எளிமையாக நடைபெறுகிறது. முதலிரவில் பட்டு மெத்தையின்றிக் கட்டிலின்றிப் பழைய பாய் ஒன்றில் அமர்ந்தபடியே ஏ.வி.எம்.ராஜன் பேசுவதும், வெறும் கையோடு வந்த தன் வாழ்க்கைக்கு இதுவே போதும் என்று சாரதா சொல்வதும் மிக அழகான காட்சி. வாழ்க்கைத் துயரம் விஜயாவின் கனவுகளைக் கலைத்துவிடுகிறது. அவளது தந்தை உண்மையில் ஏமாற்றப்படுகிறார். காதலன் அவளைப் புரிந்துகொள்ளவில்லை. தோழி ஒருத்திதான் அவளை உண்மையாக நேசிக்கிறாள். இந்நிலையில், அவளுக்கு ராமுவின் ஆதரவு புதிய வாழ்க்கைக்கான வெளிச்சமாகத் தோன்றுகிறது. ஆனால், அந்த வாழ்க்கையும் நிலைத்து நிற்கவில்லை.

ராமுவின் தொழிற்சங்க ஸ்டிரைக், அதைத் தொடர்ந்து ராமுவின் மரணம் எனக் கஷ்டங்கள் தொடர்கதையாகிறது. நிர்க்கதியான சாரதா, பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறார். கணவன் இல்லாமல் வாழும் பெண்ணைச் சமூகம் எவ்வளவு மோசமாக நடத்தும் என்பதற்கு விஜயா ஒரு உதாரணம். ஒருநாள் இரவில் பசித்த வயிற்றோடு உறங்கும் பிள்ளைகளைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறாள் விஜயா. பின்னணியாக, ‘பூஞ்சிட்டுக் கன்னங்கள்’ பாடல் ஒலிக்கிறது. பொன்னுலகம் காண வேண்டும் என்று அவர்கள் கண்ட கனவு இப்படியாகிவிட்டதே என்று விஜயா கண்ணீர் விடுகிறாள். அந்தக் காட்சியில் நடிகை சாரதாவின் முகத்தில்தான் எத்தனை அழுத்தமான உணர்ச்சிகள்! அவளது கண்ணீர்த் துளி ஒன்று உறங்கும் பிள்ளையின் முதுகில் விழுகிறது. அவளால் தன் மனவேதனையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அந்தத் துயரம் பார்வையாளர்களின் மனதை உலுக்கக்கூடியது.

‘துலாபாரம்’ படம் பார்த்த பெண்கள், தாங்கள் கேட்டு அறிந்திருந்த நல்லதங்காள் கதையை நினைவுகொண்டார்கள். பஞ்ச காலத்தில் குழந்தைகளைக் கிணற்றில் போட்டு, தானும் சாக முயன்ற நல்லதங்காளின் சோகக் கதை மறக்க முடியாதது. அது பாவைக்கூத்தில் நிகழ்த்தப்படுகிறது. நல்லதங்காள் பாவைக்கூத்து பார்த்து அழுதவர்கள் ஏராளம். ஆகவே, ‘துலாபார’த்தின் விஜயாவை நல்லதங்காளின் மறுவடிவம் போலவே தமிழ்ப் பெண்கள் உணர்ந்தார்கள். அதுதான் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக விளங்கியது.

தோப்பில் பாசி ஒரு கம்யூனிஸ்ட் என்பதால், தொழிற்சங்கத் தலைவனின் மரணம் அவனது குடும்பத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை மிகவும் யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். நான்கு மொழிகளிலும் சாரதாதான் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பொருட்செலவில் யதார்த்தமான கதையை நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். அதுதான் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் இன்றும் ‘துலாபார’த்தை மறக்க முடியாத படமாக வைத்திருக்கிறது.

- எஸ்.ராமகிருஷ்ணன்,

‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x