Last Updated : 23 May, 2020 07:36 AM

Published : 23 May 2020 07:36 AM
Last Updated : 23 May 2020 07:36 AM

புத்தகங்களைக் காதலித்தவர்கள்: பதிப்புத் துறை நால்வர் நூற்றாண்டு!

தமிழ்ப் பதிப்புத் துறையின் வரலாறு நூறாண்டுகளைக் கடந்தது. எனினும், இன்றுவரை அது பெரிதும் லாபகரமான துறையாக இருந்ததில்லை. தனிமனித லட்சிய வேட்கைதான் பெரும்பாலும் இந்தத் துறையை ஒருவரை நாடச்செய்கிறது. இந்தத் துறையையும் லாபம் மிக்கதாகவும் மக்களுடன் நேரடியாக உறவு கொள்வதாகவும் மாற்றிய சாதனைப் பதிப்பாளர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், ‘பழனியப்பா பிரதர்ஸ்’ பதிப்பகத்தின் நிறுவனர் பழனியப்பா செட்டியார், ‘முல்லை’ பதிப்பகத்தின் நிறுவனர் முல்லை முத்தையா, ‘தமிழ்ப் பண்ணை’யின் சின்ன அண்ணாமலை, ‘பாரி நிலைய’த்தின் செல்லப்பன் ஆகியோர். இந்த நால்வரும் இந்த ஆண்டு நூற்றாண்டைக் காண்கிறார்கள் என்பதுதான் விசேஷம்.

பழனியப்பா செட்டியார்

புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் கிராமத்தில் 15.02.1920 அன்று பிறந்த பழனியப்பா செட்டியார், பர்மாவில் வணிகம் செய்துவந்த தன் தந்தையிடம் சிறு வயதிலேயே சென்றுவிட்டார். ஆறாவது வரை அங்கே படித்தார். பிறகு, தமிழ்நாடு திரும்பினார். சிறு வயதிலிருந்தே வீட்டாரின் எதிர்ப்பை மீறியும் புத்தகங்களின் மீது பெரும் காதலை வளர்த்துக்கொண்டார். ஆரம்பத்தில் திருச்சி கிளைவ் விடுதி அருகே எழுதுபொருட்கள் கடையைத் தொடங்கினார். பிற்பாடு புத்தகங்களும் விற்கத் தொடங்கினார். 1945-ல் பதிப்பகம் தொடங்கினார். ஒருமுறை சென்னைக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது, பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனாரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் விளைவாக உருவானவைதான் பிரசித்தி பெற்ற ‘கோனார் உரை’ நூல்கள். இன்றுவரை அந்த நூல்கள்தான் ‘பழனியப்பா பிரதர்ஸ்’ பதிப்பகத்தின் ‘பெஸ்ட் செல்லர்’கள் என்கிறார், பழனியப்பா செட்டியாரின் மகன் செல்லப்பன். தமிழ்ப் பதிப்பாளர்கள் இன்றுவரை கோட்டைவிட்டுக்கொண்டிருக்கும் இடம் சந்தைப்படுத்தல்தான். ஆனால், அதில் பழனியப்பா செட்டியார் ஒரு முன்னோடி. அப்போது தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாகியிருக்கவில்லை என்பதால், அந்தந்தப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் வெவ்வேறு பாடநூல்களைக் கொண்டிருந்தன. அங்கேயெல்லாம் தனது பதிப்பகத்தின் ‘கோனார் உரைகள்’, பாடநூல்கள் போன்றவற்றை எடுத்துச்சென்று வெற்றிகரமாகத் தனது நூல்களை அவர் சந்தைப்படுத்தினார்.

குழந்தை நூல்களின் பொற்காலத்தில் ‘பழனியப்பா பிரதர்’ஸுக்கும் முக்கியப் பங்குண்டு. லூயி ஃபிஷர் எழுதிய ‘காந்தி வரலாறு’ நூல் தி.ஜ.ர.வின் மொழிபெயர்ப்பில் ‘பழனியப்பா பிரதர்’ஸால் வெளியிடப்பட்டது, இந்தப் பதிப்பகத்தின் சாதனைகளுள் ஒன்று. பதிப்பகம் மட்டுமல்லாமல், பிற தொழில்களிலும் பழனியப்பா செட்டியார் ஈடுபட்டார். ஒசூரில் ஏசியன் பேரிங் லிமிடெட் நிறுவனத்தையும் தொடங்கினார். சென்னை அண்ணாசாலையில் அப்போது எல்.ஐ.சி.க்கு அடுத்தபடியாக உயரமான கட்டிடமாக இருந்த கண்ணம்மை கட்டிடத்தை அவர்தான் கட்டினார். 01.09.2005 அன்று பழனியப்பா செட்டியார் காலமானார். தன் காலத்திலேயே தன் பதிப்பகத்தை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக மாற்றியவர் அவர். அது இன்றும் தொடர்வதற்கு பழனியப்பா செட்டியாரின் உழைப்பும் சாமர்த்தியமும்தான் காரணம்.

முல்லை முத்தையா

தேவகோட்டையில் 7-06-1920-ல் பிறந்த முல்லை முத்தையா 15 வயதில் தனது தந்தை பர்மாவில் நடத்திய கடையைப் பார்த்துக்கொள்வதற்காகச் சென்றார். அங்கே தனது புத்தக வாசிப்பை விரிவாக்கிக்கொண்டார். இந்நிலையில், இரண்டாம் உலகப்போர் மூண்டது. முல்லை முத்தையா, வெ.சாமிநாத சர்மா, கண.முத்தையா போன்றோர் நடந்தே இந்தியாவுக்குத் திரும்பினார்கள். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, சாந்தோமில் இருந்த பாரதிதாசனை அடிக்கடி சந்திப்பது வழக்கம். பர்மாவில் இருந்தபோதே பாரதிதாசன் பாடல்களை அவர் விரும்பிப் படித்திருந்தார். ஆகவே, பாரதிதாசன் நூல்களைப் பிரசுரிப்பதற்காக ஒரு பதிப்பகம் தொடங்க நினைத்தார். இது தொடர்பாக பாரதிதாசனைச் சென்று சந்தித்தபோது, “பதிப்பகத்துக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?” என்று அவர் கேட்க, “கமலா பிரசுராலயம்” என்று முத்தையா கூறியிருக்கிறார். “கமலா வேண்டாம், முல்லை என்ற பெயரை வையுங்கள்” என்று பாரதிதாசன் கூறிய பிறகு உருவானதுதான் இந்தப் பதிப்பகம். போகப் போக ‘முல்லை’ என்பது அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டு, ‘முல்லை முத்தையா’ என்றே அழைக்கப்பட்டார்.

முதல் நூலாக பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’ கொண்டுவரப்பட்டது. ‘அமைதி’, ‘நல்ல தீர்ப்பு’, ‘பாண்டியன் பரிசு’, ‘தமிழியக்கம்’ உள்ளிட்ட நூல்கள் கொண்டுவரப்பட்டன. ராஜாஜியின் நூல்கள் வெளியிடப்பட்டன. எம்.எஸ்.உதயமூர்த்தி பிரபலமாகாதபோது தொடக்கத்தில் அவரது நூல்கள் ‘முல்லை’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. பேராசிரியர் க. அன்பழகனின் ‘கலையும் வாழ்வும்’ புத்தகத்தை ‘முல்லை’ பதிப்பகம்தான் வெளியிட்டது. ‘பாரதியார் கதைகள்’, ‘1,001 இரவுகள்’ போன்ற நூல்களை மலிவுப் பதிப்புகளாக வெளியிட்டார். புதுமைப்பித்தன், க.நா.சு. போன்ற முக்கியமான தமிழ் இலக்கிய ஆளுமைகளுடன் முல்லை பிஎல். முத்தையா நல்லுறவு கொண்டிருந்தார். பதிப்பாளராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும் அவர் அறியப்பட்டார். ‘அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்’, ‘தமிழ்ச்சொல் விளக்கம்’, ‘நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்’, ‘பஞ்சாயத்து நிர்வாக முறை’, ‘பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து’, ‘புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்’, ‘பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்’, ‘மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு’ உள்ளிட்ட நூல்களை அவர் எழுதியிருக்கிறார். முல்லை முத்தையாவின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. 2000-ல் காலமானார்.

சின்ன அண்ணாமலை

விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர், அரசியலர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர் சின்ன அண்ணாமலை. 18.06.1920-ல் காரைக்குடிக்கு அருகிலுள்ள சிறுவயல் கிராமத்தில் பிறந்த சின்ன அண்ணாமலை, சிறு வயதிலிருந்தே நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார். 1944-ல் ஒரு விழா நடத்தி, கவிஞர் நாமக்கல் வெ.ராமலிங்கத்துக்கு ரூ.20,000 பணமுடிப்பை ராஜாஜி தலைமையில் அளித்தார். அதுவரை அண்ணாமலையாக இருந்தவரை ‘சின்ன அண்ணாமலை’ என்று ராஜாஜி அழைத்ததால், அதுவே அவரது பெயராக நிலைத்தது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டு பல முறை போலீஸால் தேடப்பட்டவர் அவர். திருவாடானை சிறை உடைப்புச் சம்பவத்தில் அவர் பிரபலமானார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருக்கமான நண்பரும் ரசிகருமான சின்ன அண்ணாமலை, அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார். புத்தகங்கள் மீது இருந்த காதல் காரணமாக ‘தமிழ்ப் பண்ணை’ என்றொரு பதிப்பகத்தைத் தொடங்கினார். அதன் மூலம் ‘கண்டறியாதன கண்டேன்’, ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’, ‘கதைக்குள்ளே கதை’, ‘ராஜாஜி உவமைகள்’ உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டார். 18.06.1980-ல் அவரது 60-வது பிறந்த நாளன்று அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டபோது, உயர் ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்தார். சின்ன அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு அவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

‘பாரி நிலையம்’ செல்லப்பன்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் கிராமத்தில் 19.07.1920-ல் பிறந்தவர் ‘பாரி நிலையம்’ செல்லப்பன். பத்து வயதில் பர்மா சென்றார். அங்கேயே சில ஆண்டுகள் படித்துவிட்டு வேலை பார்த்தார். இரண்டாம் உலகப் போர் காரணமாக, 1942-ல் இந்தியாவுக்கு நடந்தே திரும்பினார். இந்தியா திரும்பும்போது காந்தியைச் சென்று சந்தித்து, அவரது ஆசிரமத்திலேயே சில காலம் இருந்தார். பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்தார். திருச்சியில் இருக்கும் ‘பழனியப்பா பிரதர்ஸ்’ பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

இவரும் முல்லை முத்தையாவும் நல்ல நண்பர்கள். “பதிப்பகம் ஆரம்பிக்கலாமே?” என்று அவர் கொடுத்த ஊக்கத்தில் 1946-ல் சென்னையில் தொடங்கியதுதான் ’பாரி நிலையம்’. பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, ராஜாஜி, தெ.பொ.மீ., கி.ஆ.பெ.விசுவநாதம், அ.கி.பரந்தாமனார், அழ.வள்ளியப்பா போன்றோரின் நூல்களை ‘பாரி நிலையம்’ வெளியிட்டிருக்கிறது. அண்ணாவின் ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ 21 நூல்களாக ‘பாரி நிலைய’த்தால் வெளியிடப்பட்டது, இந்தப் பதிப்பகத்தின் முக்கியமான மைல்கல். வையாபுரிப் பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சங்க இலக்கியத்தின் பிழையற்ற பதிப்பை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டதும் இந்தப் பதிப்பகத்தின் சாதனைகளுள் ஒன்று. 1996-ல் சிறந்த பதிப்பாளருக்கான மத்திய அரசின் விருதை ‘பாரி நிலையம்’ செல்லப்பன் பெற்றார்.

புத்தகங்களுக்குப் பிரதான இடம் இன்றுவரை சமூகத்தில் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆயினும், புத்தகங்கள் மீதான காதலில் பதிப்பகம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி, மலிவு விலையில் அந்தப் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசேர்த்தது இந்த முன்னோடிப் பதிப்பாளர்களின் பெரும் சாதனை. இந்த ஆண்டு அவர்கள் நூற்றாண்டு என்பதால், அவர்களை அரசு கௌரவிக்க வேண்டும் என்பது புத்தகக் காதலர்களின் எதிர்பார்ப்பு.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x