Published : 17 May 2020 07:13 am

Updated : 17 May 2020 07:15 am

 

Published : 17 May 2020 07:13 AM
Last Updated : 17 May 2020 07:15 AM

வேள்வித் தீயும் மோடியின் பெருமிதமும்

modi-about-mvv

எட்டாண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடந்த ‘துக்ளக்’ வார இதழின் ஆண்டு விழாவில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையில் வாழும் சௌராஷ்டிரர்களைப் பற்றிய தமது பெருமிதத்தை அவர் பகிர்ந்துகொண்டார். குஜராத்திலிருந்து தமிழகத்தில் குடியேறி, இன்று தமிழர்களாகவே மாறிவிட்ட சௌராஷ்டிரர்கள் தமிழகத்தின் பொருளாதாரத்துக்கும் பண்பாட்டுக்கும் இலக்கியத்துக்கும் பங்களிப்புசெய்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும், இலக்கியப் பங்களிப்பு என்று மோடிக்கு உரை எழுதியவர்கள் உள்ளோட்டமாகக் குறிப்பிட்டது எம்.வி.வெங்கட்ராமைத்தான்.

ஒரு எழுத்தாளன் தன்னுடைய சாதியின் இலக்கியப் பிரதிநிதியாக இருந்துவிடக் கூடாது என்று தன்னுடைய இலக்கியப் பாதையை முன்கூட்டியே தெளிவாகத் தீர்மானித்துக்கொண்டவர் எம்.வி.வி. பட்டுநெசவுத் தொழிலையும் செய்துவந்தவர் என்றபோதிலும் ‘வேள்வித் தீ’ நாவலிலும் சில சிறுகதைகளிலும் மட்டுமே அதைப் பற்றி எழுதியிருக்கிறார். ‘வேள்வித் தீ’ நாவலின் முக்கிய கதை மாந்தர்கள் பட்டுநெசவுக்காரர்கள் என்றபோதும், ஒருசில இடங்களில் மட்டுமே அவர்களது வழக்குமொழி இடம்பெற்றிருக்கிறது. முக்கியக் கதாபாத்திரமான கண்ணன் இயற்கையோடும் வறுமையோடும் கடன்களோடும் போராடுகிறான். கூடவே, தனக்குள் காமத்தை எதிர்த்து ஒரு அகப் போராட்டத்தையும் அவன் நடத்துகிறான். புறத்தை வென்றுவிடுகிறான். ஆனால், அகம் அவனை வென்றுவிடுகிறது.


எதிர்பாராத இரவு மழையால் கண்ணனின் வீட்டிலிருக்கும் இரண்டு தறிகளும் சேதமடைவதிலிருந்து கதை தொடங்குகிறது என்றாலும், அடுத்துவரும் 10அத்தியாயங்களுக்குப் பட்டு நெசவாளர்களின் துயரம்தான் விவரிக்கப்பட்டிருக்கிறது. நாவலின் பிற்பாதி மீண்டும் கண்ணனின் அகவுலகத்துக்குத் திரும்புகிறது. கஜினி முகம்மது காலத்தில், தங்களுடைய வழக்கங்களை விட்டுக்கொடுக்க மனமின்றித் தெற்கு நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் சௌராஷ்டிரர்கள். அவர்களின் தொழில்திறனைப் பாராட்டி வரவேற்ற விஜயநகரம், மைசூர், மதுரை, தஞ்சாவூர் மன்னர்கள் தங்களது நாட்டில் தங்க வைத்து வசதிகளைச் செய்துகொடுத்தார்கள். இப்படி தஞ்சைக்கு வந்த சௌராஷ்டிரர்கள், கும்பகோணம் அரசலாற்றங்கரையில் குடியமர்ந்தார்கள்.

பொதுவாக, எம்.வி.வி. கதைகளில் அரசியல் இடம்பெறுவதில்லை என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், கவனமாகப் படித்தால், அந்தக் காலகட்டத்து அரசியலைப் பற்றிய தனது கருத்துகளைக் கொஞ்சம்தான் என்றாலும் அழுத்தமாகவே பதிவுசெய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. ‘வேள்வித் தீ’யின் கதை அறுபதுகளில் நடக்கிறது. கண்ணனுக்குத் தோழனாய், சக தொழிலாளியாய், கணக்காளனாய் இருக்கும் சாரநாதன் திராவிட முன்னேற்றக் கழக அனுதாபியாக இருக்கிறான். அவனது வார்த்தைகளின் வழியே அன்றைய அரிசிப் பஞ்சமும் ஆட்சியில் இருப்பவர்கள் அதைச் சரிசெய்ய முயலவில்லை என்ற குற்றச்சாட்டும் வெளிப்படுகிறது. கண்ணனோ, கழக அரசியலில் ஆர்வமில்லாதவன். ‘பகுத்தறிவுவாதிகளின் ஆதிக்கம் மற்ற சமூகத்தைப் போலவே இச்சமூகத்தையும் ஊடுருவியுள்ளது; கட்சி வேறுபாடுகளும் கொள்கை முரண்பாடுகளும் தறி மேடையைக்கூட அதிரவைக்கின்றன’ என்றொரு விவரிப்பு இந்நாவலில் வருகிறது. அன்றைய நாட்களில் கும்பகோணத்து சௌராஷ்டிரர்கள் எஸ்.ஆர்.ராதா தலைமையில் திராவிட இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்பதை இந்த வரிகள் நினைவூட்டுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தெற்கே வந்த பட்டு நெசவாளர்கள், தங்கள் மொழியையும்கூட மறந்து, இன்று தமிழர்களாகவே மாறிவிட்டார்கள். இடைப்பட்ட காலங்களில் எத்தனை போர்கள், ஆட்சி மாற்றங்கள், கொள்ளை நோய்கள், பஞ்சங்கள் நடந்தேறியிருக்கின்றன. ஒருபோதும் அவர்கள் திரும்பிப்போக எண்ணவில்லை. தறி மேடைகள் மறைந்து இன்று ஆலைகளின் காலத்தில் வாழ்கிறோம். ஆனால், ஒரே ஒரு மாதத் தொழிற்சாலைகளின் முடக்கத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் ரயிலுக்கும்கூடக் காத்திருக்காமல் சொந்த ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். திருப்பூர், கோவை மட்டுமல்ல; பட்டுநெசவின் மையமான சூரத்திலும் இதுதான் நிலை.

- தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.inModi about MVVவேள்வித் தீயும் மோடியின் பெருமிதமும்நரேந்திர மோடி‘துக்ளக்’

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x