Published : 17 May 2020 07:11 AM
Last Updated : 17 May 2020 07:11 AM

எம்.வி.வி. எனும் பெருமழை

ரவிசுப்ரமணியன்

மைசூர் வெங்கடாசலபதி வெங்கட்ராம் என்கிற எம்.வி.வி., தனது பதினாறாம் வயதில் எழுதிய கதை ‘சிட்டுக்குருவி’. முதல் கதையே கு.ப.ரா.வாலும் ந.பிச்சமூர்த்தியாலும் வாசிக்கப்பட்டு, அவர்கள் வாழ்த்துகளோடு ‘மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகிக் கீர்த்திபெற்றது. அதன் பின், கிட்டத்தட்ட அவரது பதினெட்டுக் கதைகள் ‘மணிக்கொடி’யில் வந்தன.

“விமர்சகர்களைப் பற்றி நான் என்றும் கவலைப்பட்டதில்லை. என்னைத் தேடிக் கண்டுபிடித்து வரும் ரசிகர்கள்தான் எனக்கு முக்கியம். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப் பணி வளரவில்லை. உண்மையாகப் படித்து ரசித்த சில ரசிகர்களால் மட்டுமே என் படைப்புகள் வலுப்பெற்றன” என்று சொன்ன எம்.வி.வி., எழுத முடிந்த காலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 8மணி நேரம் என 30பக்கங்களுக்குக் குறையாமல் எழுதினார். தொடர்ந்து பல ஆண்டுகள் எழுதி வந்ததால் ரைட்டர்ஸ் கிராம்ப் வந்து கையெழுத்துகூட போட இயலாத நிலைக்கு ஆளானார்.

மே 18, 1920-ல் பிறந்து, ஜனவரி 14, 2000-ல் மறைந்த எம்.வி.வி. - வீரையருக்கும் சீதையம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, தாய்மாமன் வெங்கடாசலம் - சரஸ்வதி தம்பதியருக்குத் தத்துப்பிள்ளையானவர். பொருளாதாரப் பட்டம் பெற்ற எம்.வி.வி.க்கு வாழ்வில் அதை நிர்வகிக்க இயலாமல் இலக்கியப் பித்துப் பிடித்து ஆட்டியது. அந்தக் காலத்தில் பெரும் லட்சாதிபதியாக இருந்து, பட்டுஜவுளி வியாபாரம் செய்துவந்ததைத் துறந்து, முழு நேர எழுத்தாளராக மாறினார். பித்து உச்சத்துக்குப் போக ‘தேனீ’ இலக்கிய இதழை நடத்தி அதில் எழுதிய எழுத்தாளர்களுக்கு அந்தக் காலத்தில் யாரும் தராத பெரும் சன்மானம் கொடுத்துக் கெளரவித்தார். எல்லாமும் சேர்ந்து பெரும் வறுமைக்குள் அவரைத் தள்ளின. இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய அவர், பெரும்பாலும் ஒரு எழுத்துக் கூலியாய் இயங்கிக் குடும்பம் நடத்தவே எழுத வேண்டியிருந்தது.

இதற்கெல்லாம் மத்தியில்தான் ‘நித்ய கன்னி’, ‘வேள்வித்தீ’, ‘இருட்டு’, ‘உயிரின் யாத்திரை’, ‘அரும்பு’, ‘ஒரு பெண் போராடுகிறாள்’, ‘காதுகள்’ என ஏழு நாவல்கள் எழுதினார். தொகுத்தும் தொகுக்கப்படாமலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், இவை தவிர கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என்றும் எழுதிக் குவித்தார். அவரது பல படைப்புகள் இன்னும் தொகுக்கப்படவில்லை என்றாலும், சிறுகதைகளை மட்டும் நானும் கவிஞர் கல்யாணராமனும் தனசேகர் என்கிற ஆய்வு மாணவருமாகச் சேர்ந்து, பெரும் பகுதியைத் தொகுத்துவிட்டோம். ஐம்பது அறுபது கதைகளே கிடைத்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை இரண்டு ஆண்டுகளாக அரும்பாடுபட்டுச் சேர்த்துவிட்டோம். இன்னும் மிகச் சில கதைகளே எங்கோ மறைந்துகொண்டிருக்கின்றன என்பது எங்கள் அனுமானம். ‘காலச்சுவடு’ பதிப்பகம் வழியே நாங்கள் கொண்டுவர உள்ள அந்தப் பெருந்தொகுப்பு, அவர் நூற்றாண்டில் அவரது கலைப் பங்களிப்புக்கு எங்களாலான ஒரு எளிய மலர்க்கொத்து.

எம்.வி.வி. - ருக்மணி தம்பதிக்குப் பதினான்கு குழந்தைகள் பிறந்து நான்கு மகன்களும் மூன்று மகள்களும் எஞ்சினர். மூத்த மகன் சந்தரவதனம் மட்டும் தற்போது உயிருடன் இல்லை; அவரைத் தவிர மற்ற அனைவரும் தற்போது நல்ல நிலையில் வாழ்கின்றனர். அவரைக் குருபோல பாவித்த தி.ஜானகிராமன், அவரது ‘மோக முள்’ நாவலில் எம்.வி.வி.யை, “பேசாமலேயே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டுமென்று இல்லை, எல்லோரிடமும் இப்படித்தான். எந்த மனிதரிடமும் வெறுப்போ கசப்போ தோன்றாத, தோன்ற முடியாத மனசு” என்று விவரித்து, ஒரு பாத்திரமாகவே ஆக்கினார். ‘காதுகள்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எம்.வி.வி., தனது சமகாலத்து எழுத்தாளர்கள் பலரால் வியந்து பார்க்கப்பட்டவராக இருந்தார். அவரது பரிசோதனை முயற்சிகள், யாரோடும் ஒப்பிட முடியாத நடை, உள்ளடக்கத் தேர்வு, அதைக் கையாண்ட விதம், செய்துபார்த்த புதுப்புது உத்திகள் இவை எல்லாவற்றாலும் தமிழ் இலக்கியம் எப்போதும் அவரை உயர்ந்த ஸ்தானத்திலேயே வைத்திருக்கும் என்பது என் கணிப்பு.

“என் நண்பர்கள்போல நான் என் எழுத்துப் பாணியை நான் அமைத்துக்கொள்ளவில்லை. என் சகாக்கள் அவரவர்களுக்கென ஒரு பாதையை அமைத்து, அதிலேயே பயணித்தபடி இருந்தனர். நான் ஒரு முறை சென்ற பாதையில் மறுமுறை சென்றதில்லை. புதுப் புதுப் பாதைகளை உருவாக்கி, அதில் பயணித்தபடியே இருந்தேன். அதற்கு என் நாவல்களும் சிறுகதைகளுமே சாட்சியங்கள்... என் கதைகளில் நான் என்னையே தேடினேன். நான் அறிந்ததை, கேட்டதை, பார்த்ததை, பேசியதை, அனுபவித்ததை, தொட்டதை, விட்டதை, சிந்தித்ததையே எழுதினேன். எழுதி எழுதித் தீர்த்தேன். பாதி எனக்காகவும் பாதி பசிக்காகவும்” என்ற எம்.வி.வி., 1992-ல் ‘காதுகள்’ நாவல் வெளியீட்டு விழாவில் இப்படிச் சொன்னார்: “தமிழ்நாட்டில் முழு நேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு மானங்கெட்ட பிழைப்பு.”

கும்பகோணம் மகாமகக் குளத்தின் படிக்கட்டுகளும் நகர மேல்நிலைப் பள்ளியின் எதிரில் உள்ள தொண்டர்கடை திண்ணையும் பின்னாளில் காந்தி பார்க்கும் ஜனரஞ்சனி ஹாலும் ராமசாமி கோயிலும் எனது செல்லம் விடுதியும் அவரது இலக்கிய சம்பாஷணைக்கான களங்களாக அமைந்தன. அவை எல்லாமே உருமாறி உருமாறி இன்றும் இருக்கின்றன.

எம்.வி.வி. இன்று இல்லாவிட்டாலும் தன் எழுத்துகளின் மூலம் நம் மனக்காதுகளில் ஏதோ பேசிக்கொண்டேதான் இருக்கிறார். அது உட்செவியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஆத்மார்த்தமான சம்பாஷணை.

ரவிசுப்ரமணியன், கவிஞர்- தொடர்புக்கு: ravisubramaniyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x