Last Updated : 16 May, 2020 07:55 AM

 

Published : 16 May 2020 07:55 AM
Last Updated : 16 May 2020 07:55 AM

‘பார்வை தொலைத்தவர்கள்’: தொற்று அல்ல, சமூகத்தின் நோய்மை!

பார்வை தொலைத்தவர்கள்
யோசே சரமாகோ
தமிழில்: எஸ்.சங்கரநாராயணன்
பாரதி புத்தகாலயம், சென்னை – 600 018.
044-24332424
விலை: ரூ.295

கரோனா காலத்தில் ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்) நாவல் வாசிக்கப்படுவதில் ஆச்சர்யமில்லை. கொள்ளைநோய் பற்றிய குறியீட்டுக் கதை என்றபோதும் அது நேரடியாகக் கதைசொல்லும் தன்மையில் அமைந்திருக்கிறது. ஆனால், யோசே சரமாகோவின் ‘பார்வை தொலைத்தவர்கள்’ (பிளைண்ட்னெஸ்) நாவலும் இந்தக் காலத்தில் அதிகம் வாசிக்கப்படும் நாவலாக இருக்கிறது. போர்த்துக்கீசிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சரமாகோ இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். 1995-ல் வெளியான இந்நாவல் விதிகளை மாற்றிப் போட்டு விளையாடும் புனைவின் சாத்தியங்களை முயன்று பார்த்த முக்கியமானதொரு படைப்பு.

இந்த நாவலில் எந்தக் கதாபாத்திரத்துக்கும் பெயர் கிடையாது. நாவலின் களமான நகரத்துக்கும் எந்த அடையாளங்களும் கிடையாது. அனைவரையும் ‘வெள்ளை அரக்கன்’ என்ற நோய் தொற்றுகிறது. அந்நோய் பார்வை பரிமாற்றத்தின் மூலமாகப் பரவுகிறது, அந்நோய் தாக்கியவர்களுக்குப் பார்வையில் வெண்மை மட்டுமே எஞ்சுகிறது. ஒட்டுமொத்த நகரத்திலேயே ஒரே ஒருவர்தான் அந்த நோயால் பாதிக்கப்படாதவராக இருக்கிறார். மருத்துவரின் மனைவியான அந்தப் பெண்மணியிடம் மட்டும்தான் மனிதநேயம் எஞ்சியிருக்கிறது. தொற்றைத் தடுக்க தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், தொற்றுக்கு ஆளானோரை மனநல மருத்துவமனைக்குள் சிறைவைத்து அவர்களைக் குற்றவாளிகளைப் போல அரசாங்கம் நடத்தும் விதம் ஆகியவை இந்த நாவலில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது; அதாவது, விமர்சிக்கப்பட்டிருக்கிறது.

பார்வையற்ற தன்மை என்பது ஒருகட்டத்தில் மனிதர்களை விலங்குகளின் உலகுக்குள் அழைத்துச்செல்வதாகவும் மாறிவிடுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல; தேவாலயங்களில் உள்ள தெய்வங்களுக்கும்கூட பார்வையிழப்பு ஏற்படுகிறது. பார்வையிழப்பை அல்ல, சமூகத்தின் நோய்க்கூறாக நம்மிடையே பரவியிருக்கும் பார்வையற்றத்தன்மையையே இந்நாவல் குறியீடாக்கிப் பேசுகிறது. கண்கள் இருந்தும் பார்வையை இழக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறது. கண்கள் உள்ளவர்கள் பார்க்கக் கடவது என்பதே இந்நாவல் சொல்லும் செய்தி. உலகளவில் கரோனா என்னும் கொள்ளைநோயை எதிர்கொண்டிருக்கிறபோதும் நம்முடைய கண்கள் இன்னும் இறுகியே கிடக்கின்றன. கண்கள் திறக்கட்டும், கருணை பெருகட்டும்!

- புவி, தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x