Last Updated : 16 May, 2020 07:54 AM

 

Published : 16 May 2020 07:54 AM
Last Updated : 16 May 2020 07:54 AM

டால்ஸ்டாய் காட்டும் சிறிது வெளிச்சம்!

புத்துயிர்ப்பு
லியோ டால்ஸ்டாய்
தமிழில்: ரா.கிருஷ்ணய்யா
அடையாளம் பதிப்பகம்
புத்தாநத்தம்,
திருச்சி - 621310.
பக்கங்கள்: 770
விலை: ரூ.395
04332-273444

நெருக்கடியான சூழலில் துவண்டிருக்கும் மனதுக்கு வாசிக்க இதமான புத்தகமாக டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ நாவல் பரிந்துரைக்கப்படுகிறது. ‘உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு புத்தகம் மட்டும்தான் வைத்திருக்க அனுமதி என்றால், எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்ற கேள்விக்குப் பலரும் ‘புத்துயிர்ப்பு’ நாவலைச் சொல்கிறார்கள். என்ன காரணம்? வாசகர்களை இந்நாவல் சுயபரிசீலனைக்கு உட்படுத்த முயல்கிறது என்பதுதான் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.
இந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை அவலங்களிலிருந்து விடுபட விரும்புபவனாக இருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு புனிதரைப் போல வலம்வருகிறான். நெஹ்லூதவ் போன்ற ஒரு பாத்திரம், யதார்த்தத்தில் அபூர்வமானது. ஆனால், யதார்த்தத்தில் இருப்பதைச் சொல்வதுதான் இலக்கியம் என்று சுருக்கிவிட முடியாது இல்லையா? ஒரு சமூகம் என்னவாக இருக்க வேண்டும் என்று எழுத்தாளர் கனவுகாண்கிறாரோ அதுவே இலக்கியமாக அவரிடமிருந்து உருப்பெறுகிறது.

நெஹ்லூதவ் பிரபு குலத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில் காதலித்த மாஸ்லவாவைக் கைவிட்டுச் சென்ற பின், அவளுடைய வாழ்க்கை புரட்டிப்போடப்படுகிறது. விலைமாதுவாக மாறிப்போய், ஒரு கொலைக் குற்றத்தில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்போதுதான், நெஹ்லூதவ் மறுபடியும் அவளைச் சந்திக்கிறான். பல வருடங்களுக்கு முன்பாகத் தான் செய்த தவறுதான் அவளுடைய இந்த நிலைமைக்குக் காரணம் என்று நினைக்கும் தருணத்திலிருந்து அவன் பாதை வேறொன்றாக மாறுகிறது. அவளுக்கு உறுதுணையாக இருக்க நினைக்கிறான், தன்னுடைய நிலங்களையெல்லாம் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கத் தொடங்குகிறான், சிறைக்கூட அவலங்களைச் சரிசெய்யப் பிரயாசைப்படுகிறான், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைத் துயரம் மிக்கதாக மாற்றும் அரசின் செயல்பாடுகள், சட்டதிட்டங்கள், சமூகக் கட்டமைப்புகள், மதக் கோட்பாடுகளையெல்லாம் கேள்வி கேட்பவனாக மாறுகிறான். ‘அன்னா கரீனினா’ நாவல்போல இந்நாவல் எவ்வித சிக்கலான பிரச்சினைகளையும் விவாதிக்கவில்லை.

மிக நேரடியான போதனை பாணியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. ஆதாரமான போதனைகள் இரண்டு: முதலாவதாக, ‘நீ உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனின் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்ப்பதென்ன?’ இரண்டாவதாக, ‘உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவன்’. இந்த பைபிள் வரிகளைப் போலவே டால்ஸ்டாய் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசுகிறார். சிறிது சிறிதாக நடந்த மாற்றங்களால் நாம் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் இயல்பானதாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டோம்; நம் கண் முன்னே நடக்கும் அவலங்களை அப்படிக் கண்ணை மறைத்துக்கொண்டு கடந்துபோகாதீர்கள் என்று சொல்கிறார்.

‘வீடு கட்டுவதற்காக ஒருவன் கல்லை வைக்கும்போது, இந்த உலகத்தைக் கட்டமைப்பதில் தன்னுடைய பங்கையும் அளிக்கிறோம் என்ற உணர்வுதான் மானிடம்’ என்கிறார் பிரெஞ்சு எழுத்தாளர் எக்சுபெரி. இதையே வேறு வார்த்தைகளில், நம் கண் முன்னே நடக்கும் குற்றங்களுக்கு, நம் கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களுக்கு நாமும் ஒரு காரணம் என்று நினைப்பதுதான் மானிடம் என்கிறார் டால்ஸ்டாய்!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x