Published : 16 May 2020 07:49 AM
Last Updated : 16 May 2020 07:49 AM

கரோனாவுக்குப் பிறகான பதிப்புத் துறை!

இந்தியப் பதிப்புத் துறையின் ஒட்டுமொத்த ஆண்டு உத்தேச வருமானம் ரூ.26,000 கோடி. இந்திய அளவில் வருமானம் கொழிக்கும் முதல் 500 இடங்களில் இருக்கும் தொழில் நிறுவனங்களின் பட்டியலில் அச்சுத் தொழில் சார்ந்து இருக்கும் ஒரே நிறுவனம் ஜே.கே. பேப்பர். ஒரு புத்தகத்தின் அடக்க விலையில் கணிசமான பங்கு வகிக்கும் காகிதங்களைத் தயாரிக்கும் நிறுவனம் இது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, இந்தப் பட்டியலில் பதிப்பகம் அல்லது பத்திரிகைக் குழுமத்தின் பெயர் ஒன்றுகூட இல்லை.

10,000 சிறு-மத்திய-பெரும் பதிப்பகங்கள் இந்தியாவிலுள்ள 22 மொழிகளில் புத்தகங்களை வெளியிடுகின்றன. அவற்றை 20,000 சிறு-மத்திய-பெரும் விற்பனையாளர்கள் விற்கின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாடநூல்களை மட்டுமே அச்சிட்டு விற்பவர்கள். இவர்கள் தவிர்த்து, தமிழ்ப் பதிப்புத் துறையின் ஆண்டு வருமானம் மிகச் சொற்பமே. இவர்கள் தங்கள் புத்தகங்களை விற்க அதிகமாக நம்பியிருப்பது விற்பனையாளர்களைத்தான். ஆனால், அவர்களது குரல்வளைகளை நெருக்கிக்கொண்டிருக்கிறது இந்த கரோனா கால ஊரடங்கு.

‘புத்தகம் ஒன்றும் அத்தியாவசியப் பொருள் இல்லை. அது காலாவதியாகப் போவதுமில்லை. பிறகு, ஏன் கடையைத் திறப்பதில் இவ்வளவு தீவிரம்’ என்று கேட்கிறது அரசு. இது அத்தியாவசியம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல என்பதை உணர வேண்டும். ஏற்கெனவே நொடிந்திருக்கும் பதிப்புத் துறையை இந்தக் கெடுபிடிகள் மேலும் நசியச்செய்துவிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சமூகத்தின் வளமான கலாச்சாரம் அதன் பதிப்புத் துறையைச் சார்ந்தும் இருக்கிறது.

பதிப்புலகின் மெக்காவாகக் கருதப்படும் ஃப்ராங்ஃபர்ட் புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் ஜுர்கன் பூஸ், “ஃப்ராங்ஃபர்ட் புத்தகக்காட்சியைப் பிற உலக மொழிகளின் கலாச்சாரப் பரிமாற்றத்துக்கான பெரும் வெளியாக, மொழிபெயர்ப்புக்கான சந்தையாக மட்டுமே இதுவரை நாம் பார்த்தோம். இனி இதில் கலந்துகொள்வதற்காக யாரும் கண்டம் விட்டுக் கண்டம் பயணிக்க வேண்டியதில்லை. இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் ஒரு மெய்நிகர் அனுபவமாக மாற்றும் பெரும் பாய்ச்சலுக்குத் தயாராக வேண்டிய கட்டாயத்துக்கு இந்தப் பேரிடர்க் காலம் நம்மை உட்படுத்தியிருக்கிறது” என்கிறார். அத்துடன், “நல்ல உள்ளடக்கம் உள்ள புத்தகங்களை முறையாகச் சந்தைப்படுத்தும் ஒரு கொதிநிலையை ஒலி/ஒளி ஊடகங்கள் இந்த நேரத்தில் எட்டியுள்ளன. நமது அறிவுசார் சொத்துரிமைகளை நாம் சரிவரக் கையாண்டால் இது ஒரு புதிய உலகைத் திறக்கும் சாத்தியங்களை அதிகப்படுத்தும்” என்று ஆலோசனை தருகிறார்.

நம் நாட்டிலும்கூட புத்தகக்காட்சிகளில் கரோனாவால் ஏற்படும் தாக்கம் கடுமையாக இருக்கும். அதனால், நாமும் உலக அளவில் புத்தகத் துறையில் பின்பற்றப்படும் புதிய வழிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும். புத்தகக்காட்சிகளில் பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் புத்தகக்காட்சி அமைப்பாளர்களின் இணையதளத்தில் தங்கள் வெளியீட்டு விவரங்களை முன்கூட்டியே இடம்பெறச் செய்யலாம். எழுத்தாளர் – வாசகர்களுக்கு இடையேயான உரையாடல்களைச் செயலி மூலம் நடத்தலாம். இந்திய மொழி நூல்கள், சிறுவர் இலக்கியங்கள், பாடநூல்கள், ஆங்கில நூல்கள் என்று அரங்குகளை வகை பிரித்து வடிவமைக்கலாம்; இதன் மூலம் கூட்டம் ஒரே இடத்தில் சேர்வதைத் தவிர்க்க முடியும்.

வாசகர்கள் பலரையும் புத்தகங்களின் பக்கம் திரும்பவிடாமல் இதுவரை அவர்களது சூழல் அலைக்கழித்துக்கொண்டிருக்கும். இந்த ஊரடங்கு அவர்களையெல்லாம் மீண்டும் தீவிர வாசிப்புக்குக் கூட்டிவந்திருக்கிறது. வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பலரும் தாங்கள் ரசித்த புத்தகங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவலாக பதிவிட்டுவருகின்றனர். வாசகர்களுடன் எழுத்தாளர்கள் சமூக ஊடகங்களில் உரையாடுகின்றனர். குடும்பம் சகிதமாகப் பங்குபெற்ற நிகழ்வுகளும் நடந்தன. இதனால், வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்கூட புத்தகங்களைத் தேடிப் படித்துள்ளனர். மின்புத்தகங்கள், ஒலிப்புத்தகங்களுக்கான புதிய வாசகர்களும் உருவாகியிருக்கிறார்கள். வரும் நாட்களில் இந்த வாசிப்பு தொடர்வதற்கான சாத்தியம் இருக்கிறது.

இந்திய மொழிகளில் அசாமீ, வங்க மொழிகள் மட்டும்தான் இன்னும் மின்னூலாக்கத்துக்கான எழுத்துரு இல்லாமல் தடுமாறுகின்றன. குஜராத்தி, இந்தி, மலையாள மொழிகளோடு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் மின்னூல்களும் ஒலிப்புத்தகங்களும் வர ஆரம்பித்திருப்பதை ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்க வேண்டும். இந்தக் காலகட்டமானது தொழிலில் பலவிதமான மாற்றங்களைப் புகுத்துவதற்கும், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வித்திட்டுள்ளது. வீட்டிலிருந்தே வேலைகளைப் பார்ப்பது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளுக்கு மட்டும்தான் பயன்படும் என்ற நிலை மாறி, புத்தகத் துறை சார்ந்த புத்தக வடிவமைப்பு, எடிட்டிங் போன்ற வேலைகளையும் வீட்டிலிருந்து செய்யலாம் என்பது பலருக்கும் புரிந்திருக்கிறது. தேவைப்படும்பட்சத்தில் இனி பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய வலியுறுத்தலாம்.

ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாகத் தமிழ்ப் பதிப்புத் தொழிலை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவில் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதும், தொழில்முறை அணுகுமுறையோடு செயல்படுவதும் அவசியம் என்பதை உணர வேண்டும். இந்த மாற்றங்களுக்குப் பதிப்புத் துறை தயாராவது காலத்தின் கட்டாயம்.

- கார்த்திகேயன் புகழேந்தி, பதிப்பாளர், ‘வானவில் புத்தகாலயம்’.

தொடர்புக்கு: writerpk86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x