

எதிர்பாராத மழைச் சாரலில் நனையும் மகிழ்ச்சியில் திளைக்கிறது கோவை. ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் ‘தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்’ (பபாஸி) சார்பில் கோவையில் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியிருக்கும் இந்த அறிவுத் திருவிழாவில் கலந்துகொள்ள எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தீவிர வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள் என்று புத்தக உலகின் பிரஜைகள் மீண்டும் ஒன்றுகூடியிருக்கிறார்கள்.
கோவையில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. பிறகு 2010-ல் செம்மொழி மாநாட்டையொட்டி புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. 38 ஆண்டுகளாக சென்னையிலும், 10 ஆண்டு களாக மதுரையிலும், 11-வது ஆண்டாக ஈரோட்டிலும் தொடர்ந்து வெற்றிகரமாகப் புத்தகத் திருவிழாக்களை நடத்திவரும் பபாஸி கடந்த ஆறு ஆண்டுகளாக கோவையில் கடைவிரிக்கத் தயாராக இல்லை. ‘எதிர்பார்த்தபடி விற்பனை இல்லை; செலவினங்கள் அதிகம்.
சென்னை, மதுரையைப் போல் புரவலர்கள் கிடைக்கவில்லை’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டன. இந்நிலையில் திடீரென்று புத்தகக் காட்சியைக் கோவைக்குக் கொண்டுவந்திருக்கிறது பபாஸி. ஈரோடு புத்தகக் காட்சிக்குப் பின்னர் மதுரையில்தான் புத்தகக் காட்சி என்று நினைத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்திருக்கிறது கோவை புத்தகக் காட்சி. இந்தப் புத்தகக் காட்சியின் இறுதி நாளான 23-ம் தேதி வரை கோவையில் உள்ள புத்தகக் காதலர்களுக்குக் கொண்டாட்டம்தான்!
கொடீசியா துணை!
எந்த ஊரிலும் புத்தகக் காட்சி நடத்தப்படுவது அறிவுலகத்தின் எல்லையை விரிவுபடுத்தும் மகத்தான செயல். கோவையில் அது மீண்டும் நடக்க வேண்டும் என்று முடிவுசெய்தது கோவை மாவட்டச் சிறுதொழில் அதிபர்கள் சங்கமான கொடீசியா. ‘எங்கள் கண்காட்சி வளாகத்தை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் (அரங்கு அமைப்புகள், பராமரிப்புச் செலவுகள் தனி). புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்கள் அத்தனை பேருக்கும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்துதருகிறோம்’ என்று கொடீசியா அரவணைப்பின் கரத்தை நீட்டியது. இதோ, மாணவ - மாணவிகள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் என்று பல்வேறு தரப்பு வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு ஆர்வத்துடன் வந்துகொண்டிருக்கிறார்கள்.
மொத்தம் 150 அரங்குகள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, கண்காட்சி அறிவிக்கப்பட்ட நாளன்றே விளம்பரமே இல்லாமல் அத்தனை அரங்குகளும் நிரம்பிவிட்டன. தினமும் காலை 11 மணிக்குத் தொடங்கும் புத்தகக் காட்சி இரவு 8.30 மணிக்கு முடிவடைகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இளைஞர்களுக்கு வழிகாட்டும் தன்னம்பிக்கைப் புத்தகங்கள் முதல் தீவிர இலக்கியப் படைப்புகள் வரை பல்வேறு வகையிலான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பிற நகரங்களின் புத்தகக் காட்சிகளைத் தவற விட்டோமே என்று ஆதங்கத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
வாசகியரின் அலை!
பெண்களின் வாசிப்புலகம் எப்போதுமே தனித்தன்மை கொண்டது என்றாலும் சமீப காலமாகப் புத்தகக் காட்சிகளில் பெண்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்திருக்கிறது. தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை இழந்திருக்கின்றன. அந்த வெற்றிடத்தை மீண்டும் புத்தகங்கள் நிரப்பத் தொடங்கியிருக்கின்றன என்றே சொல்லலாம். குறிப்பாக நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் ஆகியவை பெண்களால் அதிக அளவு வாங்கப்படுகின்றன என்கிறார்கள் விற்பனையாளர்கள். 1,200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டதால், புத்தகக் காட்சியின் முதல் நாளிலேயே ஆர்வமுள்ள மாணவர்களின் அலையைப் பார்க்க முடிந்தது.
புத்தகத் திருவிழா நடக்கும் 10 நாட்களிலும் தினமும் மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் தினசரி கருத்தரங்கங்களில் சிந்தனையாளர்கள், பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் மேடையேற்றப் பட்டுக் கவுரவிக்கப்படுகின்றனர். வழக்கமான புத்தகக் காட்சியின் அனைத்து சிறப்பம் சங்களும் இடம்பெற்றிருக்கும் கோவை புத்தகக் காட்சி, சில காலம் திறக்கப்படாமல் இருந்த வாசிப்புலகத்தின் கதவை கோவைவாசிகளுக்காக அகலத் திறந்துவைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை!
- கா.சு. வேலாயுதன்,
தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in