சென்னை கோயம்பேடு சந்தைக்குப் புத்தக முகம் கொடுக்கலாமா?

சென்னை கோயம்பேடு சந்தைக்குப் புத்தக முகம் கொடுக்கலாமா?
Updated on
2 min read

தமிழ்நாட்டின் கரோனா தலைநகரம் சென்னை. அதன் பரவல் மையம் இப்போது கோயம்பேடு சந்தை என்றாகிவிட்டது. இந்தச் சந்தைக்கு வந்துசென்றவர்கள், கரோனாவைப் புறநகர்களுக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும் பரப்பியிருக்கிறார்கள். சென்னையிலும் தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாகிவருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது சரியே. ஆனாலும், தன் பதற்ற நிலை நிர்வாகத்தால் மாநில அரசு செய்யத் தவறியதில் சில உண்டு. அவற்றில் ஒன்று, கோயம்பேடு சந்தை பற்றியது.

கோயம்பேடு சந்தையை மூடியிருந்தால் அல்லது வகைபிரித்து வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக அமைத்திருந்தால், ஒரே இடத்தில் மக்கள் திரண்டிருக்க மாட்டார்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கோயம்பேடு சந்தையை மூடப்போவதாக வணிகர்கள் சொன்னார்கள். பிறகு, அவர்களே தொடர்ந்து நடத்துவோம் என்றார்கள். மூடினாலும் திறந்தாலும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு வழிமுறைகள் என்னவென்று அரசாங்கம் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை. இது எல்லாமே திடீர் திடீர் என்ற அவசர நடவடிக்கைகள். இவை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, புதிய பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டிருக்கின்றன.

கொஞ்சம் திட்டமிட்டிருந்தால் தாம்பரம், போரூர் போன்ற இடங்களில் புதிய சந்தை மையங்களை அமைத்திருக்கலாம். கோயம்பேடு சந்தையை ஒட்டுமொத்தமாக மூடியிருக்கலாம். கொத்தவால் சாவடியில் நெரிசலான பகுதியில் இருந்த காய், கனி மார்க்கெட், கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டு 25 வருடங்கள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் சென்னை நகரின் ஜனத்தொகை கூடியிருக்கிறது. நெரிசல் அதிகமாகியிருக்கிறது. எனவே, நிரந்தர ஏற்பாடாக கோயம்பேடு போன்ற மொத்த விற்பனைச் சந்தையைத் தெற்கே தாம்பரத்தை ஒட்டிய பகுதிகளிலும், மேற்கே போரூர் அருகிலும், வடக்கே மாதவரம் அருகிலும் அமைக்கலாம். அதுவும் பஸ் நிறுத்தத்துக்கு அருகில் இருந்தால் மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் வசதியாக இருக்கும். புதிதாகச் சந்தைக் கட்டிடம் எழுப்பப்படும்போது, அடுத்தடுத்த பத்தாண்டுகளின் தேவையை மனதில் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மேலும் இரண்டு, மூன்று தளங்கள் கட்டுவதற்கு ஏற்றபடி அஸ்திவாரம் வலுவாக அமைய வேண்டும். விஸ்தாரமான மனையில் கட்டிடம் அமைய வேண்டும். சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் இடம் கொடுக்கும்படி கட்டிடத்தின் உள்அமைப்பு இருக்க வேண்டும். நான்கு புறமும் சேர்ந்த சதுரமான, செவ்வகமான, கட்டிடத்தின் நடுவே மிகப் பரந்த திறந்த வெளி இருக்க வேண்டும். கட்டிடத்தின் உள்ளே சுத்தமாகப் பராமரிக்கப்படும் உணவுக்கூடங்களும், நான்கு மூலைகளிலும் ஒழுங்காகப் பராமரிக்கப்படும் கழிப்பறைகளும் இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது, ஒவ்வொரு கடையிலும் சேரும் கழிவுப்பொருட்களைக் கட்டிடத்துக்கு வெளியே வீசிவிடாமல், அவற்றை மொத்தமாக ஒரு கிடங்கில் குவித்து எரித்துவிடலாம் அல்லது நவீனத் தொழில்நுட்பம் கொண்டு அனல்மின் நிலைய எரிபொருளாகப் பயன்படுத்தலாம். அதற்காக அருகிலேயே ஒரு சிறு மின்உற்பத்தி நிலையத்தையும் தொடங்கலாம். தேவைப்பட்டால், அங்கு வேறு சில எரிபொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அந்தச் சிறு மின்உற்பத்தி நிலையம் காய், கனிச் சந்தைக்கூடத்தின் மின்தேவையைப் பூர்த்திசெய்யும். இதற்கு ஒருங்கிணைந்த திட்டமிடல் தேவை. அவை இருந்தால் இவ்வளவும் சாத்தியமாகும்.

சரி, புதிய சந்தைகள் மாநகரின் மூன்று மூலைகளில் முளைத்த பிறகு, இப்போதுள்ள கோயம்பேடு சந்தைக் கட்டிடத்தை என்ன செய்யலாம்? கொத்தவால் சாவடியிலிருந்து கோயம்பேட்டுக்குச் சந்தையை மாற்றத் திட்டமிட்டபோது, அரசாங்கம் அதற்கான வரைபடங்களைப் பல வல்லுநர்களிடமிருந்து பெற்றது. கோட்டை, கொத்தளம் போன்ற வரைபடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தை இப்போது மாற்றி அமைக்க முடியாது. மனையின் பரப்பளவு 295 ஏக்கர். மொத்தமுள்ள அறைகள் மூவாயிரத்துக்கும் மேல். இந்த வளாகத்தை இனி வேறு எப்படிப் பயன்படுத்த முடியும்?

வெகு காலமாகத் தமிழ்நாட்டில் புத்தக வாசகர்களும் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் ஒரு நிரந்தரப் புத்தகக்காட்சிக்கு இடம் கேட்டுவருகிறார்கள். இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியை அதற்குப் பயன்படுத்தலாம். அங்கே ஒரு பெரிய நூலகமும் அமைக்கலாம். வேறு பகுதிக்கு ஓவிய - சிற்பக் கலைக் கல்லூரியை இடம் மாற்றலாம். நவீன வசதிகளுடன் கூடிய சிறு அச்சகத்தைத் தொடங்கலாம். அதை ஒட்டி அங்கே தமிழ், கணினி, தட்டச்சுப் பயிற்சிக்கூடத்தை அமைக்கலாம். அதற்கான கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களையும், தமிழ் இலக்கணம் அறிந்த ஆசிரியர்களையும் நியமிக்கலாம். இது இந்தக் காலத்தில் அவசியமாகத் தேவைப்படும் தமிழ்ப் பணி. அரசாங்கத்தின் கலை, தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை இந்த இடத்தை எடுத்துக்கொண்டு, இதை ஒரு ஞானாலயமாக நடத்த முடியும். ஞானம் ஆட்சிமுறைக்கு விலக்கு அல்ல!

- ஆர்.நடராஜன், தொடர்புக்கு: hindunatarajan@hotmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in