Published : 09 May 2020 07:35 AM
Last Updated : 09 May 2020 07:35 AM

குண்டூர் காலரா: வரலாறு நமக்கு வழிகாட்டுகிறது...

சென்னை மாகாணத்தில், 1937-ல் ராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்தவர் தி.சே.சௌ.ராஜன். திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ராஜன், சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசம் அனுபவித்தவர். ‘நினைவு அலைகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதை, சுதந்திரப் போராட்டக் காலத்தின் அரசியல் சூழல்கள், காங்கிரஸ் கட்சிக்குள் அப்போதும் நிலவிய உட்கட்சிப் பூசல்கள், அன்றைய சிறைச்சாலைகளின் நிலைமை ஆகியவற்றுடன் கொள்ளைநோய்க் காலங்களில் அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளையும் விவரித்திருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாகாண சுகாதார மந்திரிக்கு மாவட்டவாரியாகப் பிறப்பு இறப்பு விவரங்களை அனுப்பிவைப்பது அப்போதைய வழக்கம். தொற்றுநோய்களைக் கண்காணிக்கவும், அவற்றைப் பற்றிய தகவல்களை மக்களுக்கு அறிவிப்பதற்குமான ஏற்பாடு அது. அந்தத் தகவல்களைப் படிக்கும்போதெல்லாம், தனது மனம் வெதும்பியதாக மருத்துவரும் சுகாதார அமைச்சருமான ராஜன் எழுதியிருக்கிறார். ‘தொற்றுநோய்களை மனிதனால் தடுக்க முடியும். ஐரோப்பிய நாடுகளில் பெரியம்மை, தொழுநோய் போன்றவை அறவே ஒழிந்துவிட்டன. நம் நாட்டிலும் அவ்வாறு செய்ய முடியும். செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என்பது அவரது கொள்கையாக இருந்தது.

இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூரில் காலரா பரவியிருப்பதாகவும், அதனால் மூன்று வாரங்களாக நிறைய பேர் உயிரிழந்ததையும் நாளேடு ஒன்றிலிருந்து அறிந்துகொண்டார் சுகாதார அமைச்சர். அவருக்கு அலுவல் முறையில் அனுப்பி வைக்கப்பட்ட தொற்றுநோய் விவரங்களில், அப்படியான எந்தக் குறிப்பும் இல்லை என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அரசு அலுவலர்களிடமிருந்து மந்திரிகளே உண்மை விவரங்களைப் பெற முடியாத சூழல். சுகாதாரத் துறையின் தலைமை அதிகாரியைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினால், அவருக்கும் அதுபற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. பத்திரிகையில் அதுகுறித்து வெளிவந்த செய்தியையும்கூட அவர் அறிந்திருக்கவில்லை. அவருக்கும் கீழ் உள்ள அதிகாரிகளிடம் விவரம் கேட்பதாகக் கூறுகிறார். அவர்களுக்கும் தெரியவில்லை. கோபம்கொண்ட சுகாதார அமைச்சர், தலைமை அதிகாரியை நேரடியாக அழைத்து தனது வருத்தத்தைத் தெரிவிப்பதோடு, குண்டூருக்கே நேரில் சென்று ஆய்வுசெய்யும் தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறார். தொற்றுநோய் பரவியுள்ள இடத்துக்கு சுகாதார அமைச்சரை அனுப்பி வைக்கத் தயங்கினார் அதிகாரி. அமைச்சரை மறுநாள் வரச்சொல்லிவிட்டு, முதல் நாளே அவர் குண்டூருக்குக் கிளம்பிவிட்டார்.

மறுநாள் குண்டூர் ரயில் நிலையத்தில் அமைச்சரை சுகாதாரத் துறை தலைமை அதிகாரியும் மாவட்ட ஆட்சியரும் வரவேற்றார்கள். அமைச்சரின் பயணத் திட்டத்தையும் அவர் பார்க்க வேண்டிய இடங்களையும் விளக்கினார் மாவட்ட ஆட்சியர். ஆனால், அமைச்சரோ அந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டாது, மாவட்ட ஆட்சியரைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார். அதிகாரிகளின் வாகனங்கள் பின்தொடர்ந்தன. அமைச்சரின் வாகனம் முதலில் போய் நின்றது, மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் இருந்த கழிப்பறைப் பகுதி ஒன்றில். குண்டூருக்கு மட்டுமல்ல, மொத்த மாவட்டத்துக்குமே காலரா பரவ அந்த கக்கூஸ் போதுமானதாக இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் ராஜன். ஆனால், அந்த இடம் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்த பயணத்திட்டத்தில் இல்லை. மூன்று வாரங்களாகத் தொற்றுநோய் பரவி, பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், அதற்கான காரணங்களில் ஒன்றான கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார் அமைச்சர்.

அவர் அடுத்ததாகச் சென்ற இடம், அந்நகரத்தின் குடிதண்ணீருக்கு ஆதாரமாக இருந்த ஒரு குளம். அதுவும் முறையாகச் சுத்தப்படுத்தப்படவில்லை, அதிகாரிகளுக்கும் அதில் அக்கறையில்லை என்பது தெளிவானது. அதையடுத்து, ஒரு குடிசைப் பகுதிக்குள் நுழைந்தார் அமைச்சர். அங்கிருந்த குடிநீர்க் கிணறுகள் தினந்தோறும் மருந்து போடப்பட்டு, சுத்தம்செய்யப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அமைச்சரின் நேரடி விசாரணையில், மாதத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ சுத்தம்செய்யப்படுவதாகத் தெரியவந்தது. அந்தக் குடிசைப் பகுதியில் ஒருவர் மட்டுமே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் விவரம் தெரிவித்தார்கள். ஆனால், உயிரோடு ஊசலாடிக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தை அமைச்சரே நேரடியாகப் பார்த்தார். இரண்டு குழந்தைகள் இறந்துகிடந்த நிலையில், குடும்பத்தில் எஞ்சியிருந்த மூவரும் நினைவிழந்து தரையில் கிடந்தார்கள். உள்ளூர் சுகாதார அதிகாரிக்கு இதுபற்றியெல்லாம் எந்த விவரமுமே தெரியவில்லை.

சோதனையை முடித்துக்கொண்டார் அமைச்சர் ராஜன். மாலையில், குண்டூரில் இருந்த அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களையும் வரவழைத்துப் பேசினார். குடிநீர்க் கிணறுகளைச் சுத்தம்செய்யும் பொறுப்பை அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்களிடமே ஒப்படைத்த ராஜன், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கும் உத்தரவிட்டார். மாகாண சுகாதாரத் துறை அதிகாரி குண்டூரிலேயே சில நாட்கள் தங்கி, நிலைமையைக் கவனிக்க உத்தரவிட்ட பிறகே, காலரா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைக்கே அமைச்சர் சென்றார். மறக்காமல் தனக்குத் தடுப்பூசியும் போட்டுக்கொண்டு சென்னை திரும்பினார். தினசரி நிலவரம் அமைச்சருக்குத் தந்தி வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் பாதிப்பு குறைய ஆரம்பித்தது. இரண்டு வாரங்களில் முழுவதுமாக நோய்ப்பரவல் நின்றுபோனது. தான் முன்கூட்டியே குண்டூருக்குச் சென்றிருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களை முன்கூட்டியே காப்பாற்றியிருக்க முடியும் என்று வேதனைப்பட்டார் ராஜன். அந்த வேதனை அரசின் வேலைத் திட்டமாகவும் மாறியது.

தொற்றுநோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமை என்று உணர்ந்த ராஜன், சுகாதாரச் சட்டம் இயற்றக் காரணமாக இருந்தார். சுகாதாரத் துறையின் பணி, நோய் பரவவிடாமல் தடுப்பதும், நோய் வரும் முன்னரே எச்சரிக்கை செய்வதும் என்றானது. தேவை ஏற்பட்டால், தனியார் மருத்துவர்களையும் அரசுப் பணிகளில் ஈடுபடுத்தவும் வழியேற்பட்டது.

சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவராகவும் இருந்ததன் காரணமாகவே, குண்டூரில் காலரா பரவல் உடனடியாக நிறுத்தப்பட்டது. நோய்ப்பரவலின் தன்மையும் அதற்கான காரணங்களும் அதிகாரிகளைவிடவும் அமைச்சருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சில நேரங்களில் களத்தில் என்ன நடக்கிறது என்பதை அரசு அலுவலர்களைக் காட்டிலும் பத்திரிகைகளே உரியவர்கள் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டுசேர்த்துவிடுகின்றன. பத்திரிகைகளின் தேவை இன்றைய காலத்தில் மேலும் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் இப்படித் தனியாகக் களமாடிக்கொண்டிருக்கையில், முதல்வர் ராஜாஜி என்ன செய்துகொண்டிருந்தார் என்று தோன்றுகிறதல்லவா? அப்போது மும்பையில் இருந்தார் ராஜாஜி. சென்னை திரும்பியவுடன் தானே குண்டூருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன் என்று தனது சகாவை மனதாரப் பாராட்டினார். பெருந்தன்மையின் இலக்கணமாக ராஜாஜியை வியந்திருக்கிறார் ராஜன்.

நம்முடைய இன்றைய முதல்வர் ‘அரசியலர்களிடம் யோசனை கேட்க என்ன இருக்கிறது? சுகாதாரப் பிரச்சினைக்கு ஆலோசனை சொல்ல அவர்கள் என்ன நிபுணர்களா?’ என்று எதிர்க்கட்சிகளைக் கேட்கிறார். நிபுணர்கள் வழிமுறைகளைச் சொல்வார்கள்; அரசியலர்கள்தான் எல்லாத் துறை நிபுணர்களின் கருத்துகளையும் களத்தில் உள்ள மக்களின் நிலைமையையும் ஒருங்கிணைத்துப் பார்த்து, தீர்வை யோசிக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மையும் வரலாறும்!

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

நினைவு அலைகள்

தி.சே.சௌ.ராஜன்

சந்தியா பதிப்பகம்

அசோக் நகர், சென்னை-83

விலை: ரூ.300

தொடர்புக்கு: 044-24896979

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x