Published : 02 May 2020 08:15 am

Updated : 02 May 2020 08:15 am

 

Published : 02 May 2020 08:15 AM
Last Updated : 02 May 2020 08:15 AM

பெருந்தொற்றுகள் எதைக் கற்பிக்கின்றன?

orhan-pamuk-about-corona

ஓரான் பாமுக்

மூன்றாவது ப்ளேக் என்று அறியப்பட்ட பெருந்தொற்று காலகட்ட வரலாற்று நாவலைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். 1901-ல் வந்த அந்தப் பெருந்தொற்று, ஆசியாவில் லட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்டது. நான் எழுதிக்கொண்டிருக்கும் ‘நைட்ஸ் ஆஃப் ப்ளேக்’ நாவலைப் பற்றி அறிந்த நண்பர்கள் பெருந்தொற்றுகள் பற்றிய பல்வேறு கேள்விகளை என்னிடம் எழுப்பிவருகின்றனர். வரலாற்றில் நடந்த ப்ளேக், காலரா பெருந்தொற்றுகளுக்கும் தற்போதைய கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கும் இடையிலான பொதுமை அம்சங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கு ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆம், அபரிமிதமான அளவில் பொதுமைகளைக் காண முடிகிறது. கிருமிகள், வைரஸ் அளவிலான பொதுமை மட்டுமல்ல; பெருந்தொற்றுகளுக்கு நாம் அளித்த தொடக்க எதிர்வினைகளிலும் அந்தப் பொதுத்தன்மை நெடுக இருக்கிறது. ஒரு பெருந்தொற்று தோன்றியவுடன் தொடக்கத்தில் எப்போதுமே அதை மறுப்பது இருந்துள்ளது. தேசிய, உள்ளூர் அரசுகள் செயல்படத் தொடங்குவதில் தாமதத்தையே கடைப்பிடித்துள்ளன. அத்துடன் உண்மைகளைத் திரித்துப் புள்ளிவிவரங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நோய்ப்பரவல் இல்லை என்று சாதித்துள்ளன. ப்ளேக் பற்றியும் பிற பெருந்தொற்றுகள் குறித்தும் எழுதப்பட்ட எழுத்துகள் அனைத்தும் அதிகாரத்தில் உள்ளவர்களின் பாராமுகம், திறனின்மை, சுயநலம்தான் மக்களிடம் கோபத்தைத் தூண்டக் காரணமாக இருந்தது என்பதைப் பதிவுசெய்துள்ளன.


செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் இல்லாத காலத்தில், படிக்காத பெரும்பான்மை மக்களுக்கு அபாயத்தின் தீவிரம், கொடூரத்திலிருந்து ஆறுதலாக அவர்களது கற்பனைகளே இருந்துள்ளன. கற்பனை மீதான ஒருவரது சார்பு என்பது, ஒவ்வொருவருக்கும் தனிக் குரலைக் கொடுக்கிறது. இப்படிப் பரப்பப்படும் வதந்திகளில் பெரும்பான்மையானவை வெளியிலிருந்து யார் இந்தத் தொற்றைக் கொண்டுவந்தார்கள் என்பது தொடர்பிலானதே. தீமையென்றாலே அது வெளியிலிருந்து வந்தது என்பதைப் போலத்தான் ப்ளேக்கும் வெளியிலிருந்து வந்ததாக அப்போதும் சித்தரிக்கப்பட்டது. அத்துடன் வெளியிலிருந்து தவறான நோக்கத்துடன் அந்நோய் உள்ளே கொண்டுவரப்பட்டது என்றும் சேர்த்துப் புனையப்பட்டது.

களைப்படைந்த ஒரு முதியவர் தேவாலயத்தில் அமர்ந்திருந்தால் அவரைக் கடக்கும் ஒரு பெண், அந்த முதியவர் அவரது மேலங்கியைத் தேய்த்து நோயைப் பரப்ப முயன்றார் என்று குற்றஞ்சாட்டலாம். உடனடியாக ஒரு கும்பல் அங்கே கூடி அவரைத் துவைத்தெடுக்கத் தயாராகிவிடும். இப்படியான திடீர் வன்முறைகள், அச்சங்கள், கலகங்கள் மறுமலர்ச்சி காலம்தொட்டே ஐரோப்பாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ப்ளேக் காலத்தில் பரப்பப்பட்டதைப் போன்றே தேசிய, மத, இன, பிராந்திய அடையாளங்களின் அடிப்படையில் கரோனா பெருந்தொற்று காலத்தில் வதந்திகளும் குற்றச்சாட்டுகளும் எழுவதைப் பார்க்கிறோம்.

ஆனால், வரலாற்றில் நாம் சந்தித்த முந்தைய பெருந்தொற்றுகளைவிட இந்தக் காலத்தில் நம்பகத்தன்மையுள்ள செய்திகளைப் பெறுவதற்கான வசதிகளைப் பெற்றுள்ளோம். நமது அச்சமென்பது வதந்திகளால் ஊட்டப்படாமல் துல்லியமான தகவல்களின் அடிப்படையிலேயே அதிகமாக உள்ளது. மரணம் பற்றிய எண்ணம்போலவே அச்சமும் நம்மைத் தனிமையாக உணரச்செய்கிறது. ஆனால், அதே சங்கடத்தைத்தான் அனைவரும் அனுபவிக்கிறோம் என்பதை அங்கீகரிக்கும்போது அது நம்மைத் தனிமையிலிருந்து வெளிக்கொண்டு வந்துவிடுகிறது.

இந்தப் பெருந்தொற்றுக்குப் பின்னால் மேலான ஒரு உலகமாக, நாம் அடக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வை அரவணைத்துப் போஷிக்க வேண்டும். கரோனா அதைத்தான் நம்மிடம் ஏற்படுத்தியுள்ளது.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’,

மிகச் சுருக்கமாகத் தமிழில்: ஷங்கர்


Orhan Pamukபெருந்தொற்றுகள் எதைக் கற்பிக்கின்றன

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x