தூய்மைப் பணியாளர்கள் கடவுள்களாகும் காலம்
இன்றைய கரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளார்கள் நால்வரும் மிக முக்கியமானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். மருத்துவர்களுக்கு அந்த இடம் இன்றைக்கு உருவானதல்ல. மருத்துவர்களுடன் இருப்பதால் அந்த இடத்தைச் செவிலியர்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். காப்பான் இடத்தை அவ்வப்போது அடைவதும் வீழ்வதுமாக இருப்பார்கள் காவலர்கள். எனவே, முதல் மூன்று இடங்களில் இருப்பவர்கள் அவர்களின் இருப்புக்கு ஏற்ப அதிகாரத்தைப் பெற்றவர்களாகவும் கடவுளர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், கடந்த காலங்களில் மக்களால் தூய்மைப் பணியாளர்கள் எவ்வாறு பார்க்கப்பட்டார்கள்? இந்தத் தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகும், இவர்கள் இறை ஸ்தானத்திலேயே வைக்கப்படுவார்களா?
தகழி சிவசங்கரன் பிள்ளை 1946-ல் எழுதி, சுந்தர ராமசாமியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘தோட்டியின் மகன்’ நாவல் சில விஷயங்களைச் சொல்கிறது. திருநெல்வேலி பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாகத் தூய்மைப் பணிக்கு கேரளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் கதைதான் இந்நாவல். குடும்பம் சகிதமாகத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு அந்தக் காலகட்டம் தெய்வீகத் தன்மையை அளிக்கவில்லை. மனிதர்களாகக்கூட மதிக்கவில்லை என்பது தகழியின் வாக்குமூலம்.
நாவலில் ஒரு கோடைக் காலத்தில் அம்மை நோய் இவர்களைத் தாக்குகிறது. இத்தொற்றுநோயின் விபரீதம் புரியாத மக்கள், கூட்டம் கூட்டமாகத் திரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆலப்புழை நகராட்சி இந்நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. திரையரங்குகள், தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. மக்களின் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த நோய் சுகாதாரமற்ற இடத்தில் வாழும் தூய்மைப் பணியாளர்களை விரைவாகத் தாக்குகிறது. அவர்களைக் காப்பாற்ற நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களின் தொடர் சாவானது தூய்மைப் பணியைப் பாதிக்கும் என்று கவலைப்படுகிறார் நகராட்சித் தலைவர். அதிகார வர்க்கம் பழைய பணியாளர்களையெல்லாம் வெளியே தள்ளிவிடப் பார்க்கிறது. அவர்களுக்கு மருத்துவம் பார்க்காமல் அப்படியே விட்டுவிட முடிவெடுக்கிறது. ‘அவர்களும் மனிதர்கள் அல்லவா? குழந்தைக் குட்டிகள் அவர்களுக்கும் இல்லையா?’ என்று போலியாகக் கேட்கும் நகராட்சித் தலைவருக்கு, ‘இவங்க மனுசப் பிறவி என்று நினைச்சிக்கிட்டிருக்கீங்களா? நல்லாயிருக்கு!’ என்று பதில் சொல்கிறான் கண்காணிப்பாளன் கேசவப் பிள்ளை.
இந்த வைசூரி நோய்க்குச் சமூகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கொத்துக்கொத்தாக இறந்துபோகிறார்கள். இவர்களின் பணியும் வாழ்விடமும் அந்த நோய் எளிதில் தொற்றுவதற்குக் காரணமாக இருக்கின்றன. இரண்டு குடும்பங்கள் மட்டும் தப்பிக்கின்றன. அதில் ஒன்று, சுடலைமுத்துவின் குடும்பம். தன்னுடைய மகன் தன்னைப் போன்று தூய்மைப் பணியாளனாக வரக் கூடாது என்று பாடுபடும் சுடலைமுத்துவும் அவன் மனைவி வள்ளியும் இறுதியில் காலரா வந்துதான் இறந்துபோகிறார்கள். அப்பனின் பணியை மகன் கையில் எடுப்பதற்கு காலரா காரணமாகிறது. தூய்மைப் பணியைவிட வெட்டியான் வேலை தேவலாம் என்று முடிவெடுக்கிறான் சுடலைமுத்து. குவியல் குவியலாகப் பிணங்கள் சுடுகாட்டுக்கு வருகின்றன. குழியை அளந்து ஆழமாகப் புதைக்கும் பணி சுடலைமுத்துவுக்கு. இறுதியில், இன்னொரு தூய்மைப் பணியாளரை இச்சமூகத்துக்குக் கையளித்துவிட்டு நின்றபடியே இறந்துபோகிறான் சுடலைமுத்து. ஒரு சொட்டுக் கண்ணீரைப் பிரதி கேட்டுப் பெற்றுக்கொள்ளும் இடம் இது. இப்பிரதி உருவாக்கியுள்ள தூய்மைப் பணியாளர்கள் குறித்தான தோற்றம்தான் யதார்த்தமானது.
கம்யூனிஸம் வளர்ந்த மண் கேரளம்; திராவிட இயக்கம் நிலைபெற்ற மண் தமிழகம். இந்தியாவின் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் சமூகநீதிச் சூழல் மேம்பட்ட இந்த இரு மாநிலங்களிலும் மேற்கண்ட இரு இயக்கங்களும் அடித்தட்டு மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால், இங்கும்கூட ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலில் சொல்லப்படும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகிவிட்டதாகச் சொல்லும் நிலை இல்லை.
தூய்மைப் பணியிலிருந்து அடுத்த தலைமுறையை விடுவித்துக்கொள்ள முயலும் ஒருவனின் பிரதியாகத்தான் ‘தோட்டியின் மகன்’ நாவல் அதிகமும் வாசிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களால் தூய்மைப் பணியாளர்கள் எவ்வாறு உள்வாங்கப்பட்டார்கள் என்ற அரசியல் வாசிப்பு அதிகமும் நிகழ்த்தப்படவில்லை. தற்போது கரோனா நோய் தூய்மைப் பணியாளர்கள் குறித்து உருவாக்கியுள்ள தோற்றத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மூன்றும் அதிகாரத்தோடு தொடர்புடையவை. அதனால், அவை தொடந்து அந்தப் பிம்பத்தை நிலைநிறுத்திக்கொள்ளும். இந்தத் திராணி தூய்மைப் பணியாளர்களுக்குக் கிடையாது. அவர்களது இறப்பைப் பற்றி பிரச்சினையில்லை; புதிய பணியாளர்கள் வரும் வரை தூய்மைப் பணி பாதிக்கப்படக் கூடாது என்ற மனநிலை தற்போது பதுங்கியிருப்பதாகவும் தோன்றுகிறது. அவர்களைக் கடவுளாக உயர்த்தத் தேவையில்லை; சக மனிதர்களாகப் பார்க்கும் மனநிலையை மக்கள் மத்தியில் இக்காலம் விதைத்தால் போதும். கடவுள் என்ற பிம்பத்தைவிட, மனிதன் என்ற உண்மை போதும்.
- சுப்பிரமணி இரமேஷ், தொடர்புக்கு: ramesh5480@gmail.com
தோட்டியின் மகன்
தகழி சிவசங்கரன் பிள்ளை
தமிழில்: சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
தொடர்புக்கு:
96777 78863
விலை: ரூ.175
