Published : 25 Apr 2020 07:41 AM
Last Updated : 25 Apr 2020 07:41 AM

உலகைத் திறந்த பத்து புத்தகங்கள்!

உலக அளவில் பல சமூகங்கள், தலைமுறை தலைமுறைகளாகத் தனிமைப்படுத்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்துள்ளன. அப்படிப்பட்ட சமூக அவலம் குறித்து உரக்கக் குரல்கொடுத்து, மனித சக்திகளை ஒன்றுதிரட்டி, மிகப் பெரிய மாற்றம் கண்ட புத்தகங்கள் சில உள்ளன. புரட்சி, எழுச்சி, கிளர்ச்சி, வெளிச்சம் இவையெல்லாம் ஏற்படுவதற்குக் கருவியாக, ஊக்க சக்தியாக இருந்த புத்தகங்கள் என வரலாறு சிலவற்றைப் பதிவுசெய்துள்ளது. உலகுக்கே சுவாசம் தந்த இந்தப் பத்துப் புத்தகங்களையும் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது வாசித்துவிட வேண்டும்.

‘காமன் சென்ஸ்’: மக்களை ஆளும் சட்டம், மக்களால் உருவாக்கப்படுகிறபோதுதான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறது, தாமஸ் பெயின் எழுதிய ‘காமன் சென்ஸ்’. 1776-ல் வெளியான இந்தப் புத்தகம்தான் அமெரிக்கப் புரட்சி தொடங்குவதற்கு ஊக்கியாகச் செயல்பட்டது. தனிமனிதச் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி எழுப்பப்பட்ட முதல் குரல் இது. எளிய மக்களிடம் நேரடியாக உரையாடலை நிகழ்த்திய முதல் புத்தகமும் இதுதான். அரசை எதிர்த்து, மக்களை ஒன்றுதிரட்டி அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியைத் தந்தது.

‘தி டைரி ஆஃப் எ யங் கேர்ள்’: நாஜிக்கள் ஆக்கிரமிப்பின்போது நெதர்லாந்தில் பதினான்கு வயதுப் பெண் ஒருத்தியையும், அவள் குடும்பத்தினரையும் சித்ரவதை முகாமில் அடைத்துக் கொடுமை செய்கின்றனர். அதிலிருந்து அவள் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறாள். அந்நாட்களில் அவள் தினமும் டைரி எழுதுகிறாள். அவள் மேற்கொண்ட துன்பகரமான போராட்டத்தையும், மனிதகுல வரலாற்றின் மிக மோசமான மனித வதை குறித்தும் உணர்வு பொங்க எழுதிய டைரி, அந்தப் பெண்ணுடைய தந்தைக்குக் கிடைக்கிறது. 1947-ல் அது சுயசரிதைப் புத்தகமாக வெளியிடப்படுகிறது. அதுதான் அன ஃபிராங்க் எழுதிய ‘தி டைரி ஆஃப் எ யங் கேர்ள்’.

‘தி செகண்ட் செக்ஸ்’: உலகம் முழுவதும் பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதையும், பெண்ணின் உடலும் பொருளாதாரமும் சுரண்டப்படுவதையும் எதிர்த்து முதன்முதலில் எழுந்த கலகக் குரல்தான் ‘தி செகண்ட் செக்ஸ்’. இந்த நூலை எழுதியவர் சிமோன் த பூவா. பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களுக்கான வாரிசு சொத்து மறுப்புக்கு எதிராக எழுந்த தீவிரமான குரல் இது. 1949-ல் இரண்டு பாகங்களாக வெளியான இந்த நாவல்தான், பெண்ணியத் தத்துவங்களை முதன்முதலில் முன்வைத்தது.

‘தி வைல்ட் ஃபயர்’: சீனாவிலும் தைவானிலும் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட மனித வதையையும் அழிவையும் முன்வைத்து நீண்ட உரையாடலை நிகழ்த்துகிறது லங்-யிங்-தாய் எழுதிய ‘தி வைல்ட் ஃபையர்’. போர்க் காலத்தில் தன்னுடைய ஒரு வயதுக் குழந்தையைப் பிரிந்து, புலம்பெயர்ந்த லங்-யிங்-தாய், 38 வருடங்கள் கழித்துதான் சொந்த மண்ணுக்குத் திரும்புகிறார். இந்த உலகம் அடக்குமுறையிலிருந்து விலகி, ஜனநாயகப் பாதையைத் தேர்வுசெய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நூல் இது.

‘தி கிரேப்ஸ் ஆஃப் ராத்’: 1929-ல் தொடங்கி, பன்னிரண்டு வருடங்கள் அமெரிக்கா மிகப் பெரிய பட்டினிச் சாவுகளைச் சந்தித்தது. இது மிகப் பெரிய புலப்பெயர்வை ஏற்படுத்தியது. மனித இனத்தின் மிகப் பெரிய அழிவுக் காலமாக இது கருதப்பட்டது. நெஞ்சை உருக்கும் இந்தச் சித்திரத்தை உயிரோட்டமாக வரைந்துகாட்டி, ஆட்சியாளர்கள் முகத்தில் ஓங்கி அறைந்த நாவல்தான் ஜான் ஸ்டைன்பெக் எழுதிய ‘தி கிரேப்ஸ் ஆஃப் ராத்’. இந்த நாவலால்தான் புலம்பெயர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிளார்ச்சியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகவே புலம்பெயர்ந்த மக்களைக் காப்பதற்காக அமெரிக்கா தனிச் சட்டம் கொண்டுவந்தது.

‘மூலதனம்’: உழைக்கும் தொழிலாளர்களை வதைத்து, சுரண்டி, வாழ்வு நடத்தும் வர்க்கத்துக்கு எதிரான மிகப் பெரிய எதிர்ப்புக் குரல்தான் கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’. இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய நூல் என உலகம் இதைக் கொண்டாடுகிறது.

‘மௌன வசந்தம்’: சூழல் சீர்கேட்டால் மனித குலம் சந்திக்கும் மிக மோசமான அழிவுகள் குறித்த சிந்தனையைத் தூண்டிய முதல் குரலும், இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் குறித்து எழுப்பப்பட்ட முதல் குரலும் ரேச்சல் கார்சனுடையது. இவர் 1962 வெளியிட்ட ‘மௌன வசந்தம்’ (சைலன்ட் ஸ்பிரிங்) நூல், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பேராபத்து குறித்து எச்சரித்தது. உலக அளவில் இந்த நூல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவினாலேயே ‘டிடிடி’ பூச்சிக்கொல்லிக்குத் தடை வந்தது. அமெரிக்காவில் சுற்றுச்சூழல் காப்பு நிறுவனம் அமையக் காரணமாகவும் இருந்தது.

‘நேட்டிவ் சன்’: வெள்ளையினத்தைச் சார்ந்த ஓர் இளம் பெண்ணிடம் வேலைக்காரனாகப் பணியில் சேர்கிறான் ஒரு கறுப்பின இளைஞன். இவர்கள் இருவருக்குமான நீண்ட பயணத்தில் பிணக்கு இல்லை என்றாலும், ஒருவிதமான பதற்றத்தில் அவளைக் கொன்றுவிடுகிறான். ‘நேட்டிவ் சன்’ நாவல் இந்த மையத்திலிருந்துதான் நகர்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்டிருந்த நிறவெறித் தாக்குதல்களையும், அதனால் சிதைவுற்றுத் திரிந்த ஒரு சமூகத்தையும் ரிச்சர்ட் ரைட் இந்த நாவல் மூலம் நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். மனித உரிமை குறித்து உரக்கப் பேசும் முதல் நாவலாக இது கருதப்படுகிறது.

‘நரேட்டிவ் ஆஃப் தி லைஃப் ஆஃப் ஃபிரடெரிக் டக்ளஸ்’: ஃபிரடெரிக் டக்ளஸ் ஓர் அடிமை விவசாயி. நாடோடிபோல அலைந்துதிரிந்தவர். வெள்ளையர்களால் நசுக்கப்பட்டவர். தன் வலிமிகுந்த நாடோடி அலைச்சலை ‘நரேட்டிவ் ஆஃப் தி லைஃப் ஆஃப் ஃபிரடெரிக் டக்ளஸ்’ என்ற தலைப்பில் சுயசரிதமாக 1845-ல் வெளியிட்டார். ‘அடிமை ஒழிப்பு இயக்கம்’ என்ற மக்கள் இயக்கம் உருப்பெற்று, உலகம் முழுவதும் வீறுகொண்டு எழ இந்த நூல்தான் மூல விதை.

‘தி ஜங்கிள்’: பஞ்சம் பிழைக்க வந்த மக்களையும், தொழில் நகரங்களில் கூலிகளாகத் தஞ்சமடைந்தவர்களின் உழைப்பையும் சுரண்டி வாழும் வர்க்கத்தின் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது, அப்டன் சின்க்ளேர் எழுதிய ‘தி ஜங்கிள்’. 1906-ல் வெளியான இந்த நாவல்தான் முதன்முதலில் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியதோடு, வறுமைக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராடவும் வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x