Published : 18 Apr 2020 08:04 AM
Last Updated : 18 Apr 2020 08:04 AM

மாண்புமிகு. எழுத்தாளர் எம்.பி.

ஊரடங்கு காலத்தில் அறிவுசார் விவாதங்கள்!

பொதுவாக, நம் ஊரில் இலக்கியக் கூட்டத்தில் குடும்பத்தோடு பங்கேற்பது என்பது வெகு அபூர்வம். தகடூர் புத்தகப் பேரவை இந்த ஊரடங்கு காலத்தில் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. குடும்பத்துக்குள் இலக்கிய உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆம், இணைய உதவியுடன் நேரலையில் இலக்கியக் கூட்டங்களை நடத்திவருகிறது. இதுவரை எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், கீரனூர் ஜாகிர்ராஜா, பெருமாள்முருகன், ஆதவன் தீட்சண்யா, பட்டிமன்றப் பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், சூழலியலாளர் கோவை சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளார்கள். இந்த ஊரடங்கு முடியும் வரை நாள்தோறும் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். உங்கள் குடும்பத்தையும் இணைத்துக்கொள்ள: 94424 48322

செவ்வியல் இலக்கிய வாசிப்பு ஏன் முக்கியமானதாகிறது?

உலகெங்கும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் பொழுதைப் பயனுள்ளதாக்க வாசிப்பே சரியான தேர்வு. புத்தகக் கடைகள் மூடியிருப்பதால் மின்னூல்கள் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக விற்பனையாகின்றன. தற்போது அதிகளவில் விற்பனையாகும் மின்னூல்களில் நோய்த்தொற்றுகள் பற்றிய புனைவுகளோடு செவ்வியல் இலக்கியங்களும் சிறார் இலக்கியங்களும் இடம்பிடித்திருக்கின்றன. இத்தாலியிலும் பிரான்ஸிலும் ஆல்பெர் காம்யு எழுதிய ‘கொள்ளைநோய்’ நாவல் விற்பனை அதிகரித்திருக்கிறது. பிரிட்டனில் லெவ் டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ நாவல் விற்பனை அதிகரித்திருக்கிறது. வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் செவ்வியல் இலக்கியங்கள் இருந்தாலும் நேரம் கிடைக்காமல் அதைத் தள்ளிப்போட்டவர்களுக்கு இது காலம் கொடுத்திருக்கும் வாய்ப்பு. இத்தாலிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான இடாலோ கால்வினோ எழுதிய ‘செவ்வியல் இலக்கியங்களை ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பிலான கட்டுரை மிகவும் பிரபலமானது. ‘செவ்வியல் இலக்கிய வாசிப்பு ஒவ்வொன்றுமே உண்மையில் மறுவாசிப்புதான். ஒவ்வொரு முறையும் அவற்றை வாசிப்பது முதல் வாசிப்பைப் போன்று கண்டுபிடிப்புக்கான கடற்பயணம்தான். ஒரு செவ்வியல் இலக்கியம் தான் சொல்ல வருவதை ஒருபோதும் சொல்லி முடிப்பதே இல்லை’ என்று தனது கட்டுரைத் தலைப்புக்கான காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் இடாலோ கால்வினோ.

மாண்புமிகு. எழுத்தாளர் எம்.பி.

முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரியும் திருவனந்தபுரம் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான சசி தரூர், தனது ‘இந்தியாவின் இருண்ட காலம்’ நூலுக்காகக் கடந்த ஆண்டு ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றிருந்தார். நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து வெளிவரவிருக்கும் ‘தரூரோசரஸ்’ (Tharoorosaurus) புத்தகத்தின் வரைவைத் தற்போது எழுதிமுடித்திருக்கிறார். நீண்ட நாட்களாக அவரது திட்டத்தில் இருந்துவந்த இந்திய தேசியம் குறித்த நூல் வடிவ நெடுங்கட்டுரையையும் எழுதத் தொடங்கியிருக்கிறார். எழுத்து என்பது எப்போதுமே தீவிரமான தனிமைச் செயல்பாடு என்று கூறியிருக்கும் சசி தரூர், அதைக் கடைப்பிடிக்க முடியாதவர்களுக்கு ஸ்டான்ட்-அப் காமெடியைப் பரிந்துரைத்திருக்கிறார். இன்னொருபக்கம், கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசும்பொதெல்லாம் உதாரணம் காட்டப்படுபவராகவும் அவர் மாறியிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி வளர்ச்சி நிதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை முதலில் வாங்கியவர் சசி தரூர்தான். ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் உதவியோடு 1,000 நோய்த்தொற்றுப் பரிசோதனை உபகரணங்களையும், மருத்துவப் பணியாளர்களுக்கு 1,000 பாதுகாப்பு உடைகளையும் தருவித்துக்கொடுத்தார். மேலும் 1,000 உபகரணங்களுக்கும் 7,500 பாதுகாப்பு உடைகளுக்கும் அவர் நிதி ஒதுக்கியிருந்த நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொகுதி வளர்ச்சி நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. கட்சி பேதத்தைப் பொருட்படுத்தாமல் கேரள முதல்வரைப் பாராட்டி அவர் எழுதிய கட்டுரைகள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன. அதேநேரத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும், கல்லூரிப் பேராசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று ஆக்கபூர்வமான யோசனைகளையும் தொடர்ந்து கேரள முதல்வருக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார் சசி தரூர்.

கதை ஓசைக்கு வயது ஒன்று!

உங்களுக்கு வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், எழுத்துக்கூட்டி வாசிக்க சிரமப்படுகிறீர்களா? வாசிப்புக்கென தனியாக நேரம் ஒதுக்க முடியாமல் தவிக்கிறீர்களா? நெருக்கடியான பயண நேரத்தை வாசிப்புக்காக ஒதுக்க நினைக்கிறீர்களா? இனி கவலை வேண்டாம். தரமான ஒலியமைப்பில், அழகான உச்சரிப்பில், ‘கதை ஓசை' (Kadhai Osai - Tamil Audio Books) யூட்யூப் தளத்தில் கதைகளைச் சொல்கிறார் தீபிகா அருண். இவர் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி, பிறகு நான்கு வருடம் ஐடி பணி, அங்கிருந்து வெளியேறி பள்ளி ஆசிரியராகிறார், அடுத்தது சொந்தமாகத் தொழில், பிறகு இந்தத் தலைமுறை மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் வேலையில் இப்போது ஈடுபட்டிருக்கிறார். கூடவே, ஒலிப் புத்தகங்களுக்காகவும் தன் நேரத்தை அர்ப்பணிக்கிறார். ‘‘எனக்குச் சின்ன வயசிலருந்தே வாசிக்குற பழக்கம் உண்டு. ஒருபக்கம் லா.ச.ரா.வைப் படிச்சிட்டே இன்னொரு பக்கம் ஜெஃப்ரி ஆர்ச்சரும் படிப்பேன். ஹாரி பாட்டர்ன்னா உயிரு. ஒரு தடவை ஹாரி பாட்டரோட ஒலிப்புத்தகம் கேக்குற வாய்ப்பு கெடச்சுது. பல முறை வாசிச்சிருந்தாலும் அந்த ஒலிப் புத்தகம் கொடுத்த அனுபவம் புதுசா இருந்துச்சு. அப்போதான் தமிழ்ல இருக்கான்னு தேட ஆரம்பிச்சேன். சிலர் செஞ்சிருக்காங்கன்னாலும் எனக்குத் திருப்தியா இல்ல. உச்சரிப்பு மோசமா இருந்துச்சு, ஆடியோ பதிவுபண்ணது இரைச்சலோட இருந்துச்சு, பொருத்தமில்லாத பின்னணி இசை. வாசிக்கும்போது என்ன கற்பனையைப் புத்தகம் தருதோ, அதே கற்பனையைக் கேக்கும்போதும் தரணும்னு நெனச்சுத்தான் ஆரம்பிச்சேன்'' என்கிறார் தீபிகா. 2019-ல் இதே காலகட்டத்தில் இந்தப் பக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடும் ‘கதை ஓசை'க்கு வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x