Published : 18 Apr 2020 07:34 am

Updated : 18 Apr 2020 07:34 am

 

Published : 18 Apr 2020 07:34 AM
Last Updated : 18 Apr 2020 07:34 AM

நகுலன் பார்வையில் நோய்மை

nagulan-about-disease

நாற்பத்தைந்து வயது பிரம்மச்சாரிக்கு ஒருநாள் நள்ளிரவில் திடீரென வலி எடுக்கிறது. தாங்க முடியாத, காரணம் தெரியாத வலி. அப்பென்டிஸைட்டிஸாக இருக்குமோ என அஞ்சுகிறான். மருத்துவர் அது இல்லை என்று உறுதிப்படுத்துகிறார். வலி தொடர்கிறது. தொடைக்கு நடுவே கட்டி வந்திருப்பதைப் பார்க்கிறான். அதுவும் ஏன் வந்தது என்ற காரணம் தெரியவில்லை. கொஞ்ச நாள் சிகிச்சை எடுத்துவிட்டுக் குணமாகி வீடு திரும்புகிறான். அவனுடைய மருத்துவமனை நாட்களை விவரிக்கிறது நகுலன் எழுதிய ‘ரோகிகள்’ நாவல். இந்நாவல் எழுப்பும் சில அடிப்படையான கேள்விகளையும் தருணங்களையும் நம் கரோனா காலத்துக்கு இழுத்துவர முடிந்தது.

உடலுக்கு ஒரு நோவு என்றதும் எப்படி ஏனைய எல்லா விஷயங்களும் பொருளிழந்துபோகின்றன என்பது முதல் விஷயம். மனிதன் மகத்தானவனோ சிந்திப்பவனோ உணர்ச்சிவயப்படுபவனோ காரியவாதியோ அல்ல; அவன் வெறும் மலஜலம் விஸர்ஜனம் செய்யும் ஜந்து - இது தடைப்பட்டுவிட்டால் மற்ற எதுவாக இருந்தாலும் என்ன பிரயோஜனம் என்கிறார் கதைசொல்லி. அதேசமயத்தில், உடலை அழுக்கின் கொள்கலனாகவும், அழுக்கு உற்பத்தியாக உற்பத்தியாக அதைக் கவனித்து நீக்குவதில்தான் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது என்றும் சொல்கிறார். சுத்தம்-ஆரோக்கியம் இன்றைய நாளில் மிக முக்கியமான பேசுபொருள் ஆகியிருக்கிறது.


நமது அன்றாடத்தில் சுத்தம்-அசுத்தம் என்னவாக இருக்கிறது? ராமாநுஜம் தனது ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூலில் சுத்தம்-அசுத்தம் தொடர்பாக நமது மரபில் நடந்திருக்கும் உரையாடல்கள் குறித்து மிக விரிவான பார்வையை முன்வைக்கிறார். உடல் அதன் உள்ளியல்பில் சுத்தமானது; ஆனால், அது தொடர்ந்து அசுத்தங்களின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டது என்பது ஒரு பார்வை. இன்னொரு விதமாக, உடலையே அசுத்தமானதாகவும் எல்லா அசுத்தங்களுக்கும் உடலே மூலகாரணம் என்பதாகப் பார்க்கும் அணுகுமுறை. ‘இந்த உடல் தாய், தந்தையின் பாலியல் கழிவுகளால் உருவாக்கப்பட்டது. இந்த உடல் சுகதுக்கங்கள் என்ற குப்பைகளைக் கொண்ட வீடாக இருக்கிறது. உடலின் ஒன்பது துவாரங்களிலிருந்தும் நாற்றமடிக்கும் கழிவுகள் கசிந்துகொண்டே இருக்கின்றன’ என்கிறது தைத்திரிய உபநிடதம். அழுக்கு உடலுக்கு வெளியே இருக்கிறதா? உள்ளே இருக்கிறதா?

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினால் செருப்பை வாசலிலேயே விட்டுவிடுகிறோம். உடுத்தியிருந்த துணியை அலமாரியில் மீண்டும் அடுக்கி வைப்பதில்லை. கை, கால், முகம் கழுவி நம் மீது படிந்திருக்கும் அழுக்குகளைச் சுத்தப்படுத்தித் தூய்மையாக்கிக்கொள்கிறோம். அது இந்த கரோனா காலத்தில் தீவிரமாகியிருக்கிறது. கரோனா நம் உயிரையே பறித்துவிடக்கூடும் என்பதால் இன்னும் கூடுதல் அக்கறை தருகிறோம். அமைப்பு என்ற ஒன்று இருந்தால் அங்கே அசுத்தம் என்பது அவசியமாகிறது. மேலும், அசுத்தத்தை வெளியே வைத்துதான் ஒரு கட்டமைப்பு அதை வரையறுத்துக்கொள்ள முடியும். ஆக, உடலுக்கும் சமூகத்துக்கும் அசுத்தத்தை உருவாக்கியிருக்கும் கரோனாவை வெளியேற்ற முயல்கிறோம். ஆனால், இதை ஏன் போர் என்று குறிப்பிடுகிறோம்? மருத்துவப் பணியாளர்களை ஏன் களவீரர்கள் என்கிறோம்?

கரோனா யாரும் திட்டமிட்டு உருவாக்கிய எதிரி அல்ல. மானுடச் செயல்பாடுகளால் உருவான ஒன்று. மனித நாகரிகங்களுக்கும் நோய்களுக்கும் இடையேயான உறவு குறித்து வில்லியம் மெக்னேல் எழுதிய ‘பிளேக்ஸ் அண்டு பீப்பிள்ஸ்’ புத்தகத்தில், ‘மிக மோசமான தொற்றுநோய்க் கிருமிகள் பெருகுவதற்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மிக நெருக்கமாக வாழ வேண்டியிருக்கிறது’ என்கிறார். ‘ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பெரும் விளைவுகளை ஏற்படுத்திய தொற்றுநோய்களின் உருவாக்கமானது நகரங்களின் உருவாக்கத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டதாக இருப்பதுதான்’ என்கிறார் பேட்ரிக் ஒலிவெல். ஆக, இப்போது நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியானது மனிதர்களின் விளைவால் உருவானவை என்பதாகவும் நாம் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கத் தவறினோம் என்றால் அடுத்ததாக, கரோனாவுக்கு ஆதாரமாகச் சொல்லப்படும் வௌவால் இனத்துக்கு எதிரான போரையும் நாம் தொடங்கிவிடுவோம். அது கரோனா நம்மிடம் சொல்லும் செய்திக்கு எதிரானதாகிவிடும்.

கரோனா நம் குரல்வளையை நெருக்கியபடியே உரையாடவும் தொடங்கியிருக்கிறது. பாமரர்கள் முதல் அறிஞர்கள், அதிகாரிகள், அறிவியலாளர்கள் வரை, ‘கரோனா நம் மனிதகுலத்துக்கு ஏதேனும் சேதி சொல்கிறதா என்ன?’ என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘இது இயற்கையின் எச்சரிக்கை மணி’ என்று எச்சரிக்கிறார்கள். இயற்கையின் பகுதியாகவும் இயற்கைக்கு வெளியேயும் இருக்கும் ஜந்து மனித இனம்தான். இந்த உறவை ஆழமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தைத்தான் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒருமித்த உணர்வும், ஒருமித்த கரோனா பீதியும் நமக்கு உணர்த்துவதாகக்கூட தோன்றுகிறது. இயற்கையின் பகுதியாக இருக்கும் மானுட இனம் தன்னை இயற்கைக்கு வெளியே பொருத்திக்கொள்கிறது. இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் மானுடர்களின் வெற்றி என்று ஏதுமில்லை. இயற்கையின் தோல்வியானது மானுடர்களின் தோல்வியுமாகும்!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

-----------------------------------

நகுலன் கதைகள்

தொகுப்பாசிரியர்:

காவ்யா சண்முகசுந்தரம்

காவ்யா பதிப்பகம்

கோடம்பாக்கம், சென்னை-24.

98404 80232

விலை: ரூ.250நகுலன் பார்வையில் நோய்மைநகுலன் கதைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x