தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது

தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது
Updated on
1 min read

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்த் துறையில் இயங்கிவருபவர்களுக்கு விருது வாங்கிக் கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டு எழுத்தாளர் வண்ணதாசன், கவிஞர் இன்குலாப், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார், ஓவியர் எஸ்.புகழேந்தி உள்ளிட்ட பத்துபேர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தமிழ்ப் பேராயம் விருதுக்கு 227 நூல்கள் வரப்பெற்றன.

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான தேர்வுக் குழு விருதுக்கான படைப்பாளிகளைத் தேர்வு செய்தது. எழுத்தாளர் வண்ணதாசனுக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதும், கவிஞர் இன்குலாப்புக்கு பாரதியார் கவிதை விருதும், ஆர்.சிவகுமாருக்கு ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருதும், மு.சிவலிங்கத்துக்கு பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருதும், ஓவியர் எஸ்.புகழேந்திக்கு ஆனந்தகுமாரசாமி கவின் கலை விருதும், அருட்சகோதரி மார்கிரெட்டுக்கு முத்துத் தாண்டவர் தமிழிசை விருதும், ஏ.மோகனாவுக்கு வளர்தமிழ் இளம் ஆய்வறிஞர் விருதும், ஸ்ரீதரனுக்கு விபுலானந்தர் படைப்பிலக்கிய விருதும் வழங்கப்படவுள்ளது.

விருது பெறும் அனைவருக்கும் தலா ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். விழா செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.

வெளிநாடு போகும் திருவிழா

உலகின் மிகப் பெரிய இலக்கியத் திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா, செப்டம்பர் 18 முதல் 20-ம் தேதிவரை கொலரடோவில் உள்ள போல்டர் நகரத்தில் நடக்கவுள்ளது. புத்தகங்கள், ஓவியங்கள், நிகழ்த்துகலைகள், சமகாலப் பிரச்சினைகள் குறித்த விவாத நிகழ்வுகள் இத்திருவிழாவில் இருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்வார்கள். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவிலேயே நடந்துவந்த இத்திருவிழா, முதல்முறையாக வெளிநாடு ஒன்றில் நடக்கவுள்ளது.

இந்தியாவுக்கு புக்கர் கிடைக்குமா?

புனைவிலக்கியத்துக்கு வழங்கப்படும் பிரதான விருது மேன் புக்கர். இந்த ஆண்டு, இவ்விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் ஜூலை 29-ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 13 பேரில் ஒருவர் இந்தியர். அவர் எழுத்தாளர் அனுராதா ராய். அவரது நாவலான ஸ்லீப்பிங் ஆன் ஜுபிடர் என்பதே விருதுக்கான பரிந்துரையைப் பெற்றிருக்கிறது. ஜார்முலி கோயில்கள் நிறைந்த, குணப்படுத்தும் தன்மை கொண்டதென நம்பப்படும் கடற்கரை நகரம். அங்குள்ள ஆசிரமத்தில் இருக்கும் இளம்பெண் நோமி. இந்தப் பின்னணியில் மதம், குரு, உண்மை ஆகியவற்றை விவாதிக்கும் நாவல் இது. இதற்கு புக்கர் விருது கிடைக்குமா என்பது அக்டோபர் 13 அன்று தெரிந்துவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in