Published : 11 Apr 2020 08:01 AM
Last Updated : 11 Apr 2020 08:01 AM

‘டெத் இன் வெனிஸ்’ காலராவிலிருந்து கரோனாவுக்கு...

கரோனாவின் உலகளாவிய பரவலையடுத்து, கொள்ளைநோய்களைப் பற்றிய நாவல்களும், புனைவுகளில் இடம்பெற்ற கொள்ளைநோய்ச் செய்திகளும் மறுவாசிப்புக்கு ஆளாகிவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொள்ளைநோய்க் கதைகள் பற்றிய பட்டியல்களும் வாசிப்புக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்தப் பட்டியல்களில் தாமஸ் மன் எழுதிய ‘டெத் இன் வெனிஸ்’ குறுநாவலைப் பார்க்க முடியவில்லை.

1900-களின் தொடக்கத்தில், வெனிஸுக்குச் சுற்றுலா போன இடத்தில் கொள்ளைநோயால் இறந்துபோகும் கஸ்டவ் வோன் அஸ்ஹென்பெச் என்ற எழுத்தாளரைப் பற்றிய கதைதான் என்றாலும்கூட அதை வாசிப்புக்குப் பரிந்துரைக்காமைக்குப் பல காரணங்கள் உண்டு. முதலில், அது துரித வாசிப்புக்கு ஏற்ற மொழிநடை கொண்டதல்ல. இரண்டாவது, அதன் உள்ளடக்கம். ஐம்பது வயதைக் கடந்த அந்த எழுத்தாளருக்கு ஒரு சிறுவன் மீது ஏற்படுகிற ஈர்ப்பும் அவருக்குள் நடக்கும் தத்துவ விசாரணைகளும்தான் நாவலின் மையம். எனினும், கொள்ளைநோயால் பீடிக்கப்பட்ட வெனிஸைப் பற்றிய விவரணைகள் தவிர்க்கப்படக் கூடாதவை.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் தாமஸ் மன். 1911-ல் தன்னுடைய விடுமுறையில் வெனிஸ் சென்றிருந்த அவருக்கு இக்கதையை எழுதும் எண்ணம் தோன்றியது. 1912-ல் ஜெர்மன் மொழியில் இந்நாவலை எழுதி வெளியிட்டார். 1925-ல் ஆங்கிலத்தில் வெளியானது. தமிழில் த.செண்பகநாதன் ‘மரணத்தடம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.

விருந்துக்கூடங்களும் கடற்கரையுமாய் மாறி மாறி அலைந்துதிரியும் அந்த எழுத்தாளர் அஸ்ஹென்பெச்சுக்கு ஒரு சிகைக் கலைஞர்தான் கொள்ளைநோய் பற்றி முதலில் எச்சரிக்கிறார். அதைத் தொடர்ந்து, பணத்தாள்களை மாற்றச் சென்ற இடத்தில் ஒரு பிரிட்டிஷ் எழுத்தரும் எச்சரிக்கிறார். இருந்தாலும், சுற்றுலா விடுதிகளும் அவற்றின் ஊழியர்களும் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று பயணிகளை எச்சரிக்காமல் நிலைமையின் தீவிரத்தை அவர்களிடம் மறைக்க முயல்கிறார்கள்.

நோயின் தீவிரம் அதிகமான நிலையில் நகர நிர்வாகமும் சுகாதாரத் துறையும் எச்சரிக்கைச் சுவரொட்டிகள் மூலமாகப் பிரச்சாரம் செய்கின்றன. கோடை காலத்தில் தொற்றுநோய் பரவுவதாகவும் குறிப்பிட்ட சில கடல் உணவுகளைத் தவிர்க்குமாறும் அந்தக் சுவரொட்டிகள் எச்சரிக்கின்றன. இலையுதிர்க்காலத்துக்குப் பொருந்தாத சீதோஷ்ண நிலையால் ஏற்பட்ட உடல் சோர்வு என்று எண்ணியிருந்தவர்கள் அப்போதுதான் நோய்ப் பரவலை உணர்கிறார்கள். நகரம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அது, காயங்களைத் தூய்மைசெய்யும் மருந்தின் வாடை. வெனிஸில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. செய்தித்தாள்களில் கொள்ளைநோய்க்குப் பலியானோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தனைக்கு நடுவிலும், பித்துப்பிடித்துத் திரியும் அஸ்ஹென்பெச், வெனிஸை விட்டுச் செல்ல மனமின்றிக் கடற்கரை இருக்கையில் அமர்ந்து தனது மனதுக்கினியவனைப் பார்த்துக்கொண்டே உயிர்விடுகிறார்.

காலரா நோயின் உலகளாவிய பரவலைப் பற்றியும், அதைத் தடுக்க வெனிஸ் நகர நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும், அதன் குறைபாடுகளையும் பற்றிய இந்நாவலின் சித்தரிப்புகள் முக்கியமானவை. காலரா நோய்க்குத் தோற்றுவாய், கங்கை நதியின் சமவெளிப் பிரதேசங்களில் உள்ள சதுப்பு நிலங்கள் என்றே கூறப்படுகிறது. அங்கிருந்து இந்தியா முழுமைக்கும் பரவுகிறது. பின்பு கிழக்கு நோக்கி சீனாவுக்கு. அங்கிருந்து மேற்கு நோக்கி ஆப்கானிஸ்தான் மற்றும் பெர்சியாவுக்கு. பின்பு மாஸ்கோ, ஐரோப்பிய நாடுகள், சிரியன் துறைமுகத்திலிருந்து மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு என்று பரவி கடைசியில் வட இத்தாலியையும் கவ்விக்கொண்டுவிட்டதாக விவரிக்கிறார் தாமஸ் மன்.

வெனிஸின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, உணவு விநியோகத்தில் பால், மாமிசம், காய்கறிகள் முதலிய உணவுப்பண்டங்களைக் கிருமி நீக்கி விநியோகிப்பதும் தெருக்களில் குவிந்துகிடக்கும் கழிவுகளை அழித்தொழிப்பதும் குறிப்பிடப்பட்டிக்கின்றன. சுகாதாரத் துறையின் முக்கியக் குறையாக அங்கு புரையோடிக் கிடந்த ஊழல் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தொலைநோக்குப் பார்வையிலோ அல்லது சர்வதேச உதவிகள் பெறும் முயற்சிகளுக்கோ அந்நகர நிர்வாகம் திட்டம் ஏதும் தீட்டவில்லை என்பது மற்றொரு குறை.

நகரத்தின் அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்யும் இந்த பீதி, சமூக விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்றொரு எச்சரிக்கையொன்றையும் இந்நாவல் விடுக்கிறது. நோய்த் தாக்கத்துக்குப் பிறகான காலகட்டமும் கவனத்தோடு அணுகப்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. காலராவைத் தனித்தனியாகவே இந்த உலகம் எதிர்கொண்டதாலேயே அதனிடம் தோற்றுப்போனது. கரோனாவை இன்று உலகமே ஒன்றுகூடி எதிர்கொள்கிறது. நிச்சயம் வெற்றிபெறுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x