Published : 05 Apr 2020 07:48 AM
Last Updated : 05 Apr 2020 07:48 AM

கரோனாவின் கதைசொல்லிகள்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

மத்திய கால மேற்கத்திய இலக்கியப் பிரதியான ‘டெக்கமரான்’, ஒரு கதைத் தொகுதி. அதன் ஆசிரியரான ஜொவான்னி பொக்காச்சோவுக்கு ‘ஆயிரத்தோரு இரவு’களைப் போன்ற ஒரு பிரதியை உருவாக்கும் நோக்கம் இருந்திருக்க வேண்டும். இத்தாலியில் மறைமுகப் புழக்கத்தில் இருந்த கதைகளைத் தொகுக்கிறார். ஒருவருக்கொருவர் அந்நியர்களான ஏழு பெண்களும் மூன்று ஆண்களும் அவர்களுக்குச் சொந்தமற்ற மாளிகைகளில் தங்கி நாளொன்றுக்குப் பத்து கதைகள் வீதம் பத்து நாட்களுக்குக் கதைகளைச் சொல்லிக்கொள்கிறார்கள். ‘டெக்கமரான்’ எனும் சொல்லுக்குப் பத்து என்று பொருள்.

உற்றாரையும் உறவினரையும் விட்டு அவர்களை வெளியேற்றியது பிளேக் எனும் கொள்ளைநோய். பிளேக் அதிக உயிர்களைக் காவுகொண்டது ஐரோப்பாவில்தான், அதன் கணக்கு இன்னும் முடிந்திருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டால் இப்போது கரோனா வைரஸும் ஐரோப்பாவையே கொறித்துத் தின்கிறது.

கொள்ளைநோயும் மதிப்பீடுகளும்

‘டெக்கமரா’னில் பொக்காச்சோ விவரிக்கும் கொடிய நிலையை நாம் இன்னும் எட்டிவிடவில்லை எனினும் அதே அச்சம் நம்மைத் தொற்றியிருக்கிறது. ஃபிளாரென்ஸ் நகரத்தை விட்டு உடல்நலமுள்ளவர்கள் கிராமங்களுக்கு வெளியேறுகிறார்கள். நோயுள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நல்லடக்கத்துக்கும் வழியற்றுப்போன இறந்த உடல்கள் சொந்தக் குடும்பத்தினராலேகூட தெருவில் வீசியெறியப்படுகின்றன. மனித நாகரிகம் சிதைவடைந்து, அனைத்து ஒழுங்குகளும் முறைமைகளும் சரிந்து மேன்மை, கேண்மை, சான்றோன்மை என அனைத்து மதிப்பீடுகளும் வீழ்கின்றன. எந்த மருத்துவ அறிவுரையோ மருந்துகளோ பிளேக் நோய்க்கு எதிராகச் செயல்படும் ஆற்றலோடு இருந்திருக்கவில்லை என எழுதுகிறார் பொக்காச்சோ. இன்னும் முறிமருந்து கண்டுபிடிக்கப்படாத வைரஸ் தொற்றை நாம் கண்ணுறுகிறோம். பல கோடி டாலர்கள் செலவழித்து ஒரு முறிமருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதனினும் பல கோடி டாலர்கள் செலவழித்து நாம் அதைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

மனித, தெய்வீக சட்ட ஒழுங்காற்றுகள் அனைத்துக்குமான மரியாதை போய்விட்டது என்கிறார் பொக்காச்சோ. ஒவ்வொரு கொள்ளைநோயும் குறைந்த கால அளவுக்காவது தெய்வீக சக்திகளிடமிருந்து மனிதர்களைத் தள்ளி வைக்கிறது. குறிப்பிட்ட நாளில் நடக்கும் திருவிழாக்கள், தேரோட்டங்கள், ஊர்வலங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன. கல்யாணங்கள், ஏனைய தனிப்பட்ட விசேஷங்கள், சேர்ந்து உணவருந்துதல், ஒன்றுகூடல்கள் நிறுத்தப்படுகின்றன. ஒரே சமயத்தில் மதச்சார்பும் மதச்சார்பின்மையும் தங்களது தனித்துவமான கொண்டாட்டங்களை நிறுத்தியிருக்கின்றன. எனினும், இம்முறை சமூகம் எந்த சட்ட ஒழுங்கையும் மீறவில்லை. தேவைக்கு அதிகமாக உணவுப் பொருட்களைச் சேகரிக்க வேண்டாம் என்ற அறிவுரை மட்டும் அங்கங்கே மீறப்பட்டுள்ளது.

உயிர் அச்சம்

சிலர் அதீதக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள, வேறு சிலரோ வாழ்வின் பொருளின்மையை உணர்ந்து அதிகக் குடியிலும் வரன்முறையற்ற பாலுறவிலும் ஈடுபடுவதோடு உடல்நலம் பேணுபவர்களையும் பரிந்துரைக்கப்படும் மருந்துகளையும் கேலிசெய்து தெருவெங்கும் பாடித் திரிந்ததாக எழுதுகிறார் பொக்காச்சோ. அவர்கள் நாளை என்ற ஒன்று நிச்சயமாக இல்லை என்ற முடிவில் இருந்தவர்கள். அரசோ இன்று முற்றிலும் நம்மைக் கட்டுப்பட்டுக்குள் வைக்க முயல்கிறது. உயிரச்சம் நம்மை அரசு சொல்வதைப் பின்பற்றுபவர்களாக மாற்றியிருக்கிறது.

‘டெக்கமரா’னின் இறுதியில் அரசனின் வழிகாட்டலுக்கு இணங்க, சான்டா மரியா தேவாலயத்தில் ஒருவருக்கொருவர் முகமன் கூறி விடைபெறுகிறார்கள் பத்து பேர்களும். நாம் வீடுகளிலே முடங்கியிருக்கிறோம். பிளேக்கின் வேகநடனத்தில் ஃபிளாரென்ஸ் நகரமே சரிந்த மேடையாக இருந்த நாட்களில், ‘டெக்கமரா’னின் பக்கங்களில் அரசின் பங்கே விவரிக்கப்படவில்லை. அன்றைய யதார்த்தம் அது. இன்று நாம் அரசின் ஒவ்வொரு சொல்லையும் எதிர்நோக்கியிருக்கிறோம். நமது கூலி, சம்பளம், தவணைத்தொகை குறித்து அரசு ஏதாவது அறிவிக்குமா எனக் காத்திருக்கிறோம். நமது உயிரச்சத்தோடு நிதியச்சமும் சேர்ந்திருக்கிறது. பின்னதைப் பற்றிக் கவலைப்படுபவர்கள், நாளை பிளேக்கின் நிலையை கரோனா எட்டினால் முன்னதைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். அப்படியொரு நிலையில் ஏற்கெனவே இணைப்புகள் தளர்ந்திருக்கும் உலகளாவிய பொருளாதார அரண்மனை ஒவ்வொரு தூண்களாகச் சரியும்.

சிரியாவில் இன்னும் போர் நடக்கிறதா, குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கின்றனவா என்றெல்லாம் நாம் கூர்ந்து கவனிக்கவில்லை. போரும் போராட்டங்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன அல்லது பேசப்படாமல் விடப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அரசியல் வர்க்கம் அதன் அன்றாடங்களிலும் நோக்கத்திலும் கவனமாக இருப்பதற்கு மத்திய பிரதேசமே சான்று.

மீதமிருக்கும் நாகரிகமானவர்கள்

ஒருவர் பூச்சிகளைப் பற்றிப் பேசும்போது பூச்சியியலாளர் ஆகிறார். வரலாற்றின் ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசும்போது அவரே வரலாற்றாசிரியர் ஆகிறார் என்கிறார் ழான் ஜெனே. நம்மில் பலர் இன்று நோய்த்தடுப்பு முறைகளைப் பரிந்துரைப்பவர்களாக, மருத்துவ ஆராய்ச்சியாளர்களாக, எதிர்காலத்தை முன்னுரைக்கும் தீர்க்கதரிசிகளாகவும் மாறியிருக்கிறோம். அதேசமயம், உலகளாவிய பொருளாதாரப் பிணைப்பின் பக்கவிளைவுகளில் ஒன்றான வைரஸ் தொற்று இன்று நம் ஒவ்வொருவரையும் அவரவர் உடல்நலத்துக்கு மட்டுமல்ல, அடுத்தவரின் உடல்நலத்துக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்களாக மாற்றியிருக்கிறது. இந்த உலகளாவிய பொறுப்புணர்வு வெறுப்பின் விதைகளையும் தன்னுள் வைத்திருக்கிறது என்பதற்குக் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் கரோனாவை ‘சீன வைரஸ்’ என விளித்த அமெரிக்க அதிபர் ஓர் உதாரணம். கிழக்கிற்கு மேற்கிலிருந்து சார்ஸ், எபோலா, பன்றிக்காய்ச்சல், எய்ட்ஸ் என நிறைய பரவியிருக்கும்போதும் இங்கிருந்து ஒருவரும் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சொல்லி அந்நோய்களை அழைக்கவில்லை. நாகரிமானவர்கள் பல நாடுகளிலும் மீதமிருக்கிறார்கள்.

உண்மைக்குப் பின்னான உலகில் திறன்பேசிகளில் பரவும் பொய்களின் கிளுகிளுப்பில் திளைப்பவர்கள் சீன அரசு நோயுற்றவர்களைச் சுட்டுக் கொல்கிறது என்றும், மக்கள்தொகையைக் குறைப்பதற்கான திட்டம் என்றும், உயிராயுதப் பரிசோதனை என்றும் ‘வாய்க்கு வந்த’தைப் பேசுகிறார்கள். உலகில் பாலியல் மீறல்கள் அதிகரிப்பதைத் தடுக்க மத நிறுவனங்கள் பரப்பியதே எய்ட்ஸ் என்பதற்கு ஒப்பானது இது. சமூக விலகல், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், முடங்கியிருத்தல் உருவாக்கும் மன அழுத்தத்தின் விளைவுகள், வைரஸ் தொற்று நீடிக்கும்பட்சத்தில் வெறுப்பையும் பதற்றத்தையும் அதிகரிக்கும். இந்நிலை வைரஸால் பாதிப்புக்கு உள்ளானவர்களை முற்றிலும் விலக்குவதற்கும், அவர்களின் மீது குற்றவுணர்வின் சுமையை ஏற்றுவதற்கும் வழிவகுக்கும்.

மனிதமைய உலகில் இதைப் போன்ற கிருமித் தொற்றுகள் இன்னும் பலவும் வரக்கூடும். பெருகிவிட்ட மக்கள்தொகையும், வாழிட சூழல் அழிவும், இயற்கையின் பரப்புக் குறைவும் நாம் அறியாதவற்றை எதிர்கொள்ளும் சூழலை உருவாக்கும் என அறிவியலாளர்கள் விவரிக்கிறார்கள். இது நிரந்தர ‘கேட்ச்-22’ சூழ்நிலையிலேயே நம்மை வைத்திருப்பதற்கு ஒப்பானது. ஒவ்வொன்றிலும் முரண்பட்டுக்கொண்டே இருப்பதிலேயே அப்போதைக்குச் சிறந்ததெனக் கருதும் தேர்வுகளில் ஈடுபட்டு, ஒவ்வொரு நாளையும் நிச்சயமின்மையோடு நாம் தொடங்கினால் நமது மனநலமும் சமூகநலமும் சொல்லவொணாத நெருக்கடிகளுக்கு ஆளாகும். அமைதிக் காலத்தில் நெருக்கடியை உருவாக்கும் சமூக, அரசியல் சக்திகள் உண்டு. அவை அமைதியைக் குலைப்பதாலேயே தங்களை வலிமையானவை என்று கருதிக்கொள்கின்றன. மாறாக, நமக்குத் தேவை நெருக்கடி காலத்தில் அமைதியை உருவாக்கும் சக்திகளே. அவையே உண்மையில் வலிமையானவை.

நிரந்தரத் தீர்வுகளுக்கான ஏக்கம்

வரலாற்றுரீதியாக உடல், அரசியல், பொருளாதாரம், ஆத்மீக அழுத்தம் உண்டாகும் காலங்களில் மனிதனின் கண்கள் எதிர்காலத்தின் மீது பதற்றமான நம்பிக்கை கொள்வதோடு எதிர்பார்ப்புகளும், லட்சியச் சமூகக் கருத்துருக்களும், கடவுள் அருள் வெளிப்பாட்டுப் பார்வைகளும் பெருகும் என்கிறார் ‘தி அன்டிஸ்கவர்டு செல்ஃப்’ எனும் நூலில் உளவியலாளர் கார்ல் யுங். மனித இனமே ஒவ்வொரு காலகட்டத்திலும் மேற்சொன்ன அழுத்தங்களுக்கு இரையாவதைத் தவிர்க்க முடியாமலே வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் ஒவ்வொரு விதமாக நாம் மீண்டாலும் நமது நிரந்தரத் தீர்வுகளுக்கான ஏக்கம் குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்கிறது.

‘டெக்கமரான்’ நூலின் ஆரம்பப் பக்கங்கள் இத்தாலியில் மிகச் சிறந்ததெனக் கருதப்பட்ட ஃபிளாரென்ஸ் நகரை 1348-ம் ஆண்டு பிளேக் நோய் சீரழித்த நாட்களைச் சொல்கின்றன. அப்பக்கங்கள் விவரித்த ஃபிளாரென்ஸ் நகரம் 672 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போன்றொரு நிலைமையைச் சந்திக்கிறது. நாம் ஒவ்வொருவருமே இன்றைக்கு பொக்கச்சோவாகி வைரஸ் தொற்றின் கதையை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்கிறோம். நமது சிற்றூர்களும்கூட ஃபிளாரென்ஸின் தோற்றத்தை அடைந்திருக்கின்றன. சமூக ஊடகங்கள், செல்பேசிப் பேச்சுகள், ஊடகங்கள், நேர் சந்திப்புகளென எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது கரோனா வைரஸ். நாம் அதன் கதைசொல்லிகள் ஆகிவிட்டோம்.

- பாலசுப்ரமணியன் பொன்ராஜ், ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: tweet2bala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x