Published : 04 Apr 2020 07:46 AM
Last Updated : 04 Apr 2020 07:46 AM

நூல்நோக்கு: சிறுகதை என்னும் கலைவடிவம்

சிறுகதை என்னும் கலைவடிவம்

காலவெளிக் கதைஞர்கள்
தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்
சாகித்ய அகாடமி வெளியீடு
தேனாம்பேட்டை, சென்னை.
044-24311741
விலை : ரூ.300

சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய மேதமைகள் பல்வேறு சோதனைகளை நிகழ்த்திப் பார்த்து வெற்றிகண்ட வடிவம் தமிழ்ச் சிறுகதை வடிவமாகும். சிறுகதை வரலாறு, எழுத்துப் போக்குகள், இயக்கங்கள் அடிப்படையில் இருபது சிறுகதை ஆசிரியர்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் காண்பிப்பதாக உள்ளன. தமிழ்ச் சிறுகதைகளில் சாதனை நிகழ்த்திய புதுமைப்பித்தன், மௌனி, கு. ப.ரா, ந.பிச்சமூர்த்தி ஆகிய முதல் தலைமுறையினர் பற்றிய கட்டுரைகள் வரலாற்று நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை. வீ.அரசு, சுந்தர ராமசாமி தொடங்கி கவிதைக்காரன் இளங்கோ வரை வெவ்வேறு முகாம்களிலிருந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வேறு வேறு பின்னணிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த நூலுக்காகத் தொகுக்கப்பட்டிருப்பதால் விடுபடுதல்களையும் உணர முடிகிறது. விடுபடுதல்கள் இருப்பினும் சராசரியான சிறுகதை எழுத்தாளர் யாரும் இந்த நூலில் சேர்க்கப்படவில்லை. சிறுகதை வடிவம் செய்திருக்கும் பயணத்தை இந்த நூலின் தொகுப்பாசிரியர் சுப்பிரமணி இரமேஷ் காண்பிக்கிறார்.

- பவித்ரா

கதைகளின் கடல்

கதா சரித் சாகரம்
சோமதேவர்
தமிழில்: வே.ராகவன்
செம்பதிப்பு: கால சுப்ரமணியம்
தமிழினி வெளியீடு,
சென்னை-51.
86672 55103
விலை: ரூ.170

மத்திய கிழக்கு நாடுகள் கதைகளின் உலகத்துக்கு அளித்த கொடையாக ‘ஆயிரத்தொரு இரவுக’ளைக் கூறினால் இந்தியா அளித்த கொடையாக ‘கதா சரித் சாகரம்’ நூலைக் கருத வேண்டும். 11-ம் நூற்றாண்டில் காஷ்மீரைச் சேர்ந்த சோமதேவர் சம்ஸ்கிருதத்தில் இயற்றியது இந்த நூல். 22 ஆயிரம் பாடல்களால் ஆனது இந்த நூல். இந்தியாவில் உலவும் பல நூறு கதைகளுக்கான மூலம் இந்தப் புத்தகம். இந்த நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 கதைகளை சம்ஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்து
1959-ல் சம்ஸ்கிருத அறிஞர் டாக்டர் வே.ராகவன் புத்தகமாக வெளியிட்டிருந்தார். இதை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு செம்பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறார் கால சுப்ரமணியம். அரசர்கள், வியாபாரிகள், திருடர்கள், துறவிகள், முட்டாள்கள், அதிமேதாவிகள் என்று இந்த நூல் காட்டும் உலகம் அலாதியானது. உலகமெங்கும் வழங்கப்படும் நாட்டார் கதைகள் பலவற்றுக்கும் இவற்றுக்கும் இடையே ஒப்புமை காண முடிகிறது.

- தம்பி

‘ஒரு’வில் தொடங்கும் கதைகள்

தமிழக நாட்டுப்புறக் கதைகள்
முல்லை
பிஎல்.முத்தையா
முல்லை பதிப்பக வெளியீடு
அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
98403 58301
விலை: ரூ.250

‘ஒரு ஊரிலே’ என்று தொடங்கும் கதைகள் நவீன இலக்கியத்தில் தேய்வழக்காகிவிட்டன. ஆனால், கிராமத்திலே தாத்தா, பாட்டிகளிடம் கேட்ட அப்படியான கதைகளுக்கு ஒரு தனி ருசி உண்டு இல்லையா? சின்னச் சின்ன நாட்டுப்புறக் கதைகள் இருநூறைத் தொகுத்துப் படங்களுடன் பதிப்பித்திருக்கிறார் முல்லை பிஎல்.முத்தையா. இந்தக் கதைகளிலே நீதி போதனை உண்டு. கிராமத்துக்கே உரிய நிறைய நகைச்சுவை உண்டு. நிறைய தந்திரங்கள் இருக்கின்றன. கதைசொல்லும் பாட்டிகளையும் தாத்தாக்களையும் நாம் தொலைத்துவிட்டோமே என்ற மனக்குறையை இந்தப் புத்தகம் போக்குகிறது.

- கதிரவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x